அரும்புகள் மலரட்டும்: பெருந்தமிழர் தியாகி சங்கரலிங்கனார்

Monday 18 November 2019

பெருந்தமிழர் தியாகி சங்கரலிங்கனார்

1956 அக்டோபர் 10 ஆம் தேதி மதுரை எர்ஸ்கின் மருத்துவமனை வழக்கத்துக்கு மாறாக பரபரப்பில் மூழ்கியிருந்தது. ஒரு நாள் அல்ல இரண்டு நாள்கள் அல்ல 76 நாள்கள் உண்ணவிரதம் இருந்து மோசமான உடல்நிலையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டதே அந்தப் பரபரப்புக்குக் காரணம். தொடர்ந்து மூன்று நாள்களாக போராடிய மருத்துவர்களின் போராட்டத்திற்குப் பலன் இல்லாமல் அந்த உயிர் 1956 அக்டோபர் 13 ஆம் தேதி பிரிந்தது.

அறிஞர் அண்ணா, காமராசர், ம.பொ.சிவஞானம், ஜீவானந்தம் உட்பட பல தலைவர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டும் உண்ணாவிரத்தைக் கைவிடாது தீரத்தோடு போராடி தன் இன்னுயிரைத் துறந்து, இன்றுவரை சாகும்வரை உண்ணாவிரதம் என்னும் சொல்லுக்கு உதாரணமாய், கொண்ட கொள்கையில் துளியளவுகூட சமரசம் செய்து கொள்ளாமல் போராடிய அந்த போராளிதான் தியாகி சங்கரலிங்கனார்.



தனியாக மொழிவழி மாகாணம் வேண்டும். சென்னை மாகாணத்திற்குத் ”தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட வேண்டும். அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப் போல் வாழ வேண்டும். தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும். தொழில்கல்வி, இந்தியா முழுவதும் மதுவிலக்கு, அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் ஆடை அணிய வேண்டும். விவசாயிகளுக்கு விளைச்சலில் 60 விழுக்காடு வாரம் (குத்தகை) அளிக்க வேண்டும். மத்திய அரசு அலுவல் மொழியாக இந்தியை மட்டும் பயன்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துதான் அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

”உயிர் பெரிதன்று மானமே பெரிது” என்று போராடிய அந்தத் தியாகியின் கோரிக்கைகள் நாட்டின் சலசலப்புகளை ஏற்படுத்தியது. அவரது மறைவு அப்போதைய சென்னை மாகாணத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போதைய ஆட்சியாளர்களைக் கலங்கடித்தது. சங்கரலிங்கனாரின் மறைவுக்குப் பின்னரே தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. 1962 மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு கோரிக்கைக்காக கொண்டுவரப்பட்ட தனி மசோதா தள்ளுபடி செய்யப்பட்டது.

1964 சனவரியில் சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் தமிழ்நாடு தீர்மானமும் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்பு ஆட்சிக்கு வந்த அறிஞர் அண்ணா அவர்களின் அரசு 1967 ஏப்ரல் 14 ஆம் நாள் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை “தமிழக அரசு” ஆக மாற்றியது. அதன் தொடர்ச்சியாக 1968 சூலை மாதத்தில் சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” என பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பின்னர் அதே ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. பின்னர் திசம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு முழுக்கப் பெயர் மாற்றம் விழாவாகக் கொண்டாடப்ப்பட்டது.

தமிழ்நாடு என்னும் பெயர் மாற்றத்திற்கே நம் தாயகம் பல உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறது என்னும் உண்மையை இன்றைய தலைமுறைகள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒன்று. நாட்டிற்காக தன் உயிரையும் மாய்த்துக் கொண்டு இச்சமூகத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கின்ற சங்கரலிங்கனார் போன்றோரின் தியாகத்தை நம் உள்ளத்தில் நிறுத்தி போற்றுவதும் நம் அனைவரின் கடமை என்பதில் மிகையில்லை.

அன்னாரின் 12 அம்ச கோரிக்கைகளில் சிலவற்றை இன்றுவரை அரசு நிறைவேற்றாதது வேதனைக்குரியது. அவற்றை நிறைவேற்றி நடைமுறைப்படுத்துவதே பழம்பெரும் தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் செலுத்தும் உண்மையான நன்றிக்கடன் என்பதை அனைவரும் நினைவில் கொள்வோம்.

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

3 comments:

  1. நினைவில் கொள்ள வேண்டிய பகிர்வு... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரர்.

      Delete
  2. சிறப்புப் பதிவு
    பாராட்டுகள்

    ReplyDelete