அரும்புகள் மலரட்டும்: காலமறிதல்-குறளின் வழி ஒரு கட்டுரை

Saturday 6 June 2015

காலமறிதல்-குறளின் வழி ஒரு கட்டுரை


ஆடிப்பட்டம் தேடிவிதை’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. காலம் அறிந்து பயிர்செய்யும் போது, அப்பயிரை வளர்க்க இயற்கையே உதவி செய்துவிடும்.

பயிர் செய்வதற்கு மட்டுமல்ல, போர் செய்வதற்கும் வணிகம் செய்வதற்கும், பிற செயல்களைச் செய்வதற்கும் காலம் அறிந்து செய்வது மிக முக்கியமாகும்.

“கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்; காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்” என்று கவிஞர் வாலி ஒருபாடல் எழுதியிருக்கிறார். காலம் அறியாது செயல் செய்கிறவர்களின் சோகப்பாடல் அது. எந்தச் செயலையும் காலமறிந்து செய்வது மிக முக்கியம் என்பதை வலியுறுத்தவே காலமறிதல் என்னும் தலைப்பில் பத்துக் குறள்களை எழுதியிருக்கிறார் வள்ளுவர்.

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

பகல் நேரத்தில் காக்கை கூகையைக் கண்டால், கொத்தித் துரத்தி விடுகிறது. பகல் நேரத்தில் கூகைக்குக் கண் பார்வை குறைவு. ஆந்தையும் கூகையும் இரவுப் பறவைகள். இரவில் அவற்றுக்கு நன்றாகக் கண்தெரியும். காக்கை பகற் பறவை. இரவில் அதற்குப் பார்வை சக்தி குறைவு.

கூகையின் பலவீனப் பொழுது, பகல் என்பதால் அதைப் பயன்படுத்தி காக்கை கூகையை வெல்ல முடிகிறது.

அது போல அரசர்க்கும் தகுந்த காலம் வேண்டும். எதிரியின் பலவீனமான காலம் தனக்கு சாதகமான காலம். அதைப் பயன்படுத்தினால் தான் வெற்றி கிடைக்கும். எனவே அத்தகு காலத்தை எதிர்பார்க்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

தகாத காலத்தில் போர் தொடுத்து, பாலைவனப் பகுதிகளில் குடிக்க நீரும், உணவும் கிடைக்காமல், மாண்டு மடிந்த படைகளை வரலாறு காட்டுகிறது. கொட்டும் பனியில் மாட்டிக் கொண்டு ஹிட்லரின் படைகள் ரஷ்யப் பகுதியில் பேரிழப்பும், படுதோல்வியும் கண்டது. காலம் பார்ப்பது என்பது பருவம் பார்ப்பதும் ஆகும். படை எடுக்கும் மன்னவர்கள் தகுந்த காலத்தையும், சகுனத்தையும் உணர்ந்தே போர் தொடுத்தார்கள் என்பதை சங்க இலக்கியப் பாடல்களும் காட்டுகின்றன.

“வாட்கோள்” என்பது புற இலக்கியங்களில் ஒரு தனித்துறை. கொற்றவையை வணங்கி, வாளுக்குப் பூஜைசெய்து, சுபவேளையில் அந்த வாளைக் கோவிலிலிருந்து எடுத்துப் புறப்படுவதே வாட்கோள் என்பதாகும்.

சித்தர்களின் இலக்கியத்தில் நாசியில் ஓடும் சரம் கணக்கிட்டு, அதற்கேற்ற ஆயுதத்தை எடுத்துப் போர் செய்ய வேண்டும் என்ற குறிப்பும் இருக்கிறது. சரத்திற்கு ஏற்றபடி எந்தத் திசையில் நின்று போர் செய்ய வேண்டும் என்று கூடக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இக்கருத்துகளை எல்லாம் கூட, இக்குறட் கருத்துடன் இணைத்து வைத்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.

என்கிறார் அடுத்த குறளில். பருவத்திற்குத் தக்கபடி நடந்து கொள்வதே, செல்வம் தம்மை விட்டுப் போகாமல் கட்டி வைக்கும் கயிறு என்பது குறள் கூறும் கருத்து.

காலமறிந்து செய்யாத செயல் பொருள் நஷ்டத்திற்கு வழிவகுக்கும். காலம் என்பது, ஒவ்வொரு ஜீவனுக்கும் இறைவனால் அளந்து கொடுக்கப்பட்டுள்ளது.

காலமே, விதையிலிருந்து மரத்தை உருவி எடுக்கிறது. காலமே காயைக் கனிய வைக்கிறது. இலையைச் சருகாக்குகிறது. அரும்பை மலராக்குகிறது.

கடலில் வாழும் ஆமைகள் அமாவாசைக்கும், பௌர்ணமிக்கும் கடற்கரைக்கு வந்து தங்கள் முட்டைகளை இட்டுச் செல்கின்றன. இவ்விரண்டு தினங்களிலும் அலைகள் கடற்கரையில் அதிக தூரங்களை நனைத்து வைத்து விடுகின்றன. அலைகளில் நனைந்த மணற்பரப்பில் ஆமைகள் இடும் முட்டைகள் அடுத்து அடுத்து வரும் நாள்களில் அலைகளால் நனைவதில்லை. அவை அலையோசை கேட்கும் தூரத்தில், வெயில் காய்ந்து கிடக்கும் மண்ணில் கீழே குஞ்சுகளாகப் பொரிந்து விடுகின்றன.

மீண்டும் அமாவாசையோ, பௌர்ணமியோ நெருங்கும் போது, கடல் அலைகள் அக்குஞ்சுகளைக் கூப்பிட்டுப் போக வருவதுபோல் அங்கு வருகின்றன. ஆமைக் குஞ்சுகளும் எளிதில் கடலை அடைகின்றன.

முட்டையிடுவதற்கு ஆமைகூட தகுந்த காலத்தைக் கண்டுபிடித்துச் செல்லமுடிகிறது. மனிதன்தான் கால நேரம் தவறி சில செயல்களைச் செய்து விடுகிறான். அதன் விளைவுகளையும் அனுபவிக்கிறான். பருவத்தோடு காரிய எதையுமே செய்ய வேண்டும் என்று சொன்னாலும் பலருக்கும் புரிவதில்லை.

வாழ்க்கைக்குத் தேவையான பணம், பதவி, எல்லாம் கிடைத்த பிறகுதான், திருமணம் செய்வது என்ற எண்ணம் இன்று பலருக்கும் வந்துவிட்டது. வாலிபம் விடைபெறும் போது கல்யாணம் செய்துவிட்டு, இன்பத்தைத் தேடி துன்பத்தில் தவிக்கிறவர்கள் எத்தனை எத்தனை பேர்? பருவத்தே செய்யாத பயிர்கள், அறுவடைக் காலத்தில் அதன் விளைவைக் காட்டி விடுகின்றன.

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்?

என்கிறது அடுத்த குறள். ஒரு செயலைச் செய்வதற்கு, தகுந்த கருவியும் தகுந்த காலமும் அறிந்து செய்தால், செய்ய முடியாத செயல் என்று ஒன்று உளதா? என்பதே குறட்கருத்து.

ஒரு செயலைச் செய்வதற்குக் கருவியாக அமைவது, மூவகை ஆற்றலும், நால்வகை உபாயமும் என்கிறார் தமிழறிஞர் வடிவேலுச் செட்டியார்.

அறிவு, ஆண்மை, பெருமை, ஆகியன மூவகையாற்றல் எனப்படுகின்றன. நால்வகை உபாயம் என்பது சாம, பேத, தான, தண்டம் என்பதாகும்.

இக்கருவியுடன் காலம் அறிந்து செய்தால் எந்த ஒரு செயலும் நிச்சயம் வெற்றி பெறும்.

செயல்களில் சிலவற்றை எல்லாரும் எளிதாகச் செய்துவிட முடியாது.
மருத்துவம் கற்றவனாலும் இறந்தவனைப் பிழைக்க வைக்க முடியாது.
அஸ்திர வித்தை அறிந்தாலும் வானத்தை, பறவை போல் வீழ்த்த முடியாது.
தொடுவானம் என்று பெயர் இருந்தாலும் தொடு வானத்தைத் தொட்டுவிட முடியாது.

இப்படி அரிய செயல்களைக் கூடத் தகுந்த கருவிகளால் செய்தவர்கள் இருக்கிறார்கள்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணரைக் கருவியாக்கிய சாந்தீபினி முனிவர், இறந்து போன தன் மகனை மீட்டுக் கொண்டார்.

கௌரவ, பாண்டவர்களின் உதவியால், துருபதனின் நாட்டை வென்றார் துரோணர்.

இதனால் வள்ளுவர் அடுத்த குறளில் இப்படிச் சொல்லுகிறார்:

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்.

ஒருவன் இந்தப் பூமி முழுவதையும் ஆள நினைத்தாலும் அது கைகூடும். ஆனால் தகுந்த காலம் பார்த்து தக்க இடத்தில் செய்ய வேண்டும் என்பது மேற்கண்ட குறட்கருத்து.

இரணியனின் கொடுங்கோலாட்சி நடக்கும் போதும், மகாமுனிவர்களும், ரிஷிகளும், அவனது ஆட்சியைச் சகித்துக் கொண்டுதான் இருந்தார்கள். எதற்கும் விடிவு உண்டு என்று பொறுத்துக் கொண்டிருந்தார்கள்.

காலம் மாறும் வரை கைகட்டிக் கொண்டு இருப்பது கோழைத்தனமல்ல. அறிவுடையவர்களும் பொறுத்துக் கொண்டிருப்பார்கள், காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள், என்பதையே அது காட்டுகிறது.

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

என்று வள்ளுவரும் இதே கருத்தைக் கூறுகிறார். ஒரு நாட்டின் மீது திடீரென்று படை எடுத்துவிட முடியாது. படை எடுப்பது என்றால் சர்வதேச அரங்கில் அது எந்தவிதமான விமர்சனத்தை உண்டாக்கும் என்பதை ஆலோசிக்க வேண்டும். ஒரு நாட்டை, போரில் வெல்லுவதற்கு முன்பு, அந்த நாட்டின் உறவு நாடுகளைத் தன் பக்கம் இழுப்பது, பிற நாடுகளின் உறவை வலுப்படுத்தி தன் பக்கம் சக்தியை வளர்த்துக் கொள்வது, கூடுமானவரை பொருள் சேதமும், உயிர்ச் சேதமும் வராமல் வெற்றி பெற ஆலோசிப்பது ஆகியனவெல்லாம் முக்கியம்.

நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல், இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அறுவகைக் குணமும் இராஜதந்திரமானவை. இவையெல்லாம் வேண்டும். தன்னிடம் வலிமையே இருந்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நடந்து கொள்ளக்கூடாது.

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து.

வலிமை உடையவன் சில நேரம் பின்வாங்கிக் கொள்வது, மோதிக் கொள்வதற்கு முன்பு சண்டைக் கடா பின் வாங்குவது போன்றதுதான் என்கிறார் வள்ளுவர்.

“புலி பதுங்குவது பாய்வதற்குத்தான்” என்று பழமொழி ஒன்று உண்டு. பின் வாங்குவது கோழைத்தனமல்ல. அது புத்திசாலித்தனமும் கூட.

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

அறிவுடைய அரசர்கள் தன் கோபத்தை உடனடியாக வெளிக்காட்டி விட மாட்டார்கள். காலம் பார்த்துத்தான் தன் கோபத்தைக் கூட வெளிப்படுத்துவார்கள் என்கிறது இக்குறள்.

மனத்தை நிதானமாகவும் தன் கட்டுப்பாட்டிலும் வைத்திருப்பவர்களால் மட்டுமே பொறுமையாகச் செயல்பட முடியும். உணர்ச்சி வசப்படுகிறவர்களுக்கு இந்த நிலை கை கூடாது. மன்னர்கள் உணர்ச்சி வசப்படவும் கூடாது.

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

என்கிறது அடுத்த குறள்.

பகைவன் வலிமை பெற்றவனாக இருந்தால், அவனைக் கண்டபோது பணிந்துதான் போக வேண்டும். அவனுக்கு கப்பம் கட்டி வாழ நேரும். சுமையைக் கூட ஏற்கத்தான் வேண்டும். ஆனால், பழுத்த கிளை இற்று விழுவது போல, அவனும் இற்று விழும் காலம் வந்தால், அவன் தலை தானாகவே விழுந்து விடும் என்கிறது குறட் கருத்து.

பகை நாடுகள் செய்யும் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்டு அதை வீழ்த்த உரிய காலத்தை எதிர்பார்த்து, மறைவாகச் செயல்களைச் செய்வது அரசியல் உலகத்து நியதியாகும்; நீதியுமாகும்.

ஒவ்வொரு நாடும் தன் பகை நாடுகளைப் பலவீனப்படுத்தப் பல்வேறு வழிகளில் முயற்சி செய்து கொண்டேயிருக்கின்றன. அந்த நாட்டில் புகுந்த உட்பகைகளை வளர்த்து விடுவது, பொருளாதாரச் சரிவுகளூக்கு வழி செய்வது, இராணுவ ரகசியங்களை அறிவது என அந்த நடவடிக்கைகள் அமைகின்றன.

உரிய காலம் வரும் போதுதான் போர்கள் வெடிக்கின்றன.

எய்தற் கரிய தியைந்தக்கால்அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

எய்துவதற்கு அரியவை இயைந்து வரும்போது, அப்பொழுதே செய்வதற்கு அரிய செயலைச் செய்து விடவேண்டும் என்பது குறட்கருத்து.

காற்று சாதகமாக வீசும் போது, பாய்மரத்தை விரித்து விடுவது போல், கிடைப்பதற்கு அரிய சந்தர்ப்பம் கிடைக்கும் போது செயல்படத் தொடங்கி விட்டால், வெற்றி சுலபமாகிவிடும்.

எய்துவதற்கு அரியவை என்றால் என்ன? அறிவு, ஆண்மை, பெருமை என்னும் மூவகையான ஆற்றல் தன்னிடம் பெருகிய போதும், சாம, பேத, தான, தண்டம் முதலிய உபாயங்களுக்கு வழியிருக்கும் போதும், நட்பாக்குவதற்கோ, பகையாக்குவதற்கோ, போர் தொடுப்பதற்கோ, பகை நாட்டினைப் பலவீனப் படுத்த பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதற்கோ, பகைவருக்கு பகைவரை நட்பாக்கிக் கொள்ளுவதற்கோ, அல்லது உறவாடிக் கெடுப்பதற்கோ சந்தர்ப்பம் வரும்போது அதைச் சரியாகப் பயன் படுத்திக் கொள்வதே முறை. அத்தகைய சந்தர்ப்பங்களே எய்துதற்கு அரியவை எனப்படுகின்றன.

அத்தகைய சந்தர்ப்பங்களுக்குக் காத்திருக்க வேண்டும் என்பதை அடுத்து வரும் குறளில் விளக்குகிறார் வள்ளுவர்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

கொக்கு மீனுக்காகக் காத்திருக்கும். ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் அது நதியோரத்தில் அமைதியாய் நின்றிருக்கும். அதுபோல் காத்திருக்க வேண்டும். உரிய மீன் வரும்போது, மீனைத் தன் அலகால் குத்திப் பிடித்து விடும். அது போல் உடனடியாக அரசர்களும் செயலில் இறங்கிவிட வேண்டும்.

இப்படி அழகான உவமையால் செயல்படும் விதத்தை விளக்குகிறார் வள்ளுவர்.

ஓடும் நதியில் உறங்குவது போல் நின்றிருக்கிறது கொக்கு. அதனடியில் எந்த அசைவும் தெரிவதில்லை. ஆனால் கொக்கின் கவனமெல்லாம் நகரும் நதியின் அடியில் திரியும் மீனின் மீதுதான் இருக்கிறது.

அரசருக்குக் கவனம் சந்தர்ப்பங்களை எதிர் நோக்கியே இருக்க வேண்டும். ஆனால் அதை வெளிக் காட்டிக் கொள்ளாத அமைதியும் இருக்க வேண்டும்.

மீன்களை நழுவ விட்ட கொக்கும், சந்தர்ப்பங்களைத் தவற விட்ட மன்னர்களும் வாட்டத்துடன்தான் வாழமுடியும் என்பது இந்த உவமையின் தொனிப் பொருள்.

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

4 comments:

 1. அருமை
  நன்றி நண்பரே
  தம 2

  ReplyDelete
 2. திருக்குறளில் இல்லாதது இல்லை. அருமையான தலைப்பைத் தெரிவு செய்து ஆழமாக விவாதித்துள்ள விதம் நன்று.
  http://drbjambulingam.blogspot.com/
  http://ponnibuddha.blogspot.com/

  ReplyDelete
 3. லேய் வகுப்பில் நடத்தியதை பதிவாக்கியது அருமை..
  சரி
  இந்த குறள்களை இசை வடிவில் த.அரசு வழங்கிய குறுந்தகடை வகுப்பில் இசைத்தீரா ... அருமையா கீது
  தம +

  ReplyDelete