அரும்புகள் மலரட்டும்: March 2014

Sunday 23 March 2014

உயிரைக் கட்டணமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகள்


பள்ளி கட்டணம் செலுத்தாததால், வகுப்புக்கு வெளியே நிறுத்தி வகுப்பு ஆசிரியர் அவமானப்படுத்தியதால், மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். மணலி சிபிசிஎல் நகர் 9வது தெருவை சேர்ந்தவர் மாறன். கூலி தொழிலாளி. இவரது மனைவி பொற்கொடி. இவர்களது மகள் பூஜா (13). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். 3 மாதத்துக்கு ஒரு முறை கட்டவேண்டிய, பள்ளி கட்டணத்தை பூஜா செலுத்தவில்லை பள்ளி நிர்வாகம் கண்டித்ததால் இச்சோகமான சம்பவம் நடந்துள்ளது எனும் செய்தி கேட்டு மனம் பதைபதைக்கிறது. பிஞ்சு குழந்தைகளைத் தற்கொலைக்குத் தூண்டும் கல்வி முறை இன்னமும் நமக்கு வேண்டுமா! எல்லாமும் இலவசமாக கொடுக்கும் இந்த அரசாங்கம் கல்விக்கும் மருத்துவத்தும் அதிகப்படியான பணம் வசூலிக்க அனுமதிப்பது எவ்வளவு முரணாக உள்ளது என்பதை சிந்திக்கையில் ஆட்சியாளர்களின் மீது அவநம்பிக்கையைத் தான் ஏற்படுத்துகிறது.

Wednesday 19 March 2014

விரைவாய் எழுவோம்!


பத்தோடு பதினொன்றாய் வாழ்ந்து
பதுங்கி மடிவதில் பயனேதடா!
முதலொன்றாய் இருந்து நாமும்
முகம் காட்ட வேணுமடா!

Monday 10 March 2014

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்- அறிவோம்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் என்பது (International Day for the Elimination of Violence against Women) ஒரு துன்பியல் நிகழ்வை ஞாபகப்படுத்தும் விதத்தில், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் , 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அது வருடந்தோறும் நவம்பர் 25ஆம் நாளை பெண்களிக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும் என்பதே அந்த தீர்மானம். பின்னர் அவ்வாண்டு டிசம்பர் 17 ஆம் ஐ.நா.பொதுக்குழு மேற்கண்ட நாளை பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாளாக அறிவித்தது.

Saturday 8 March 2014

மாணவர்களுக்கு எமனாகும் இருசக்கர வாகனங்கள்


இப்போதெல்லாம் அலாரம் எழுப்பி காலை துயில் எழுவது இல்லை. ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டு எழுந்திருக்கிறேன். நித்தம் என்னை எழுப்பதைக் கடமையாக கொண்டுள்ளன அவைகள். காரணம் நமது இல்லம் அரசு தலைமை மருத்துவமனை எதிர்புறம். சப்தம் கேட்டு என்னவென்று விடயத்தைத் தெரிந்து கொண்டவர்களிடம் கேட்டால் விபத்து நேரிட்டு கல்லூரி மாணவன் இறந்து விட்டான் என்பது தான் பெரும்பான்மையான மறுமொழியாக இருக்கும். அந்த அளவிற்கு மாணவர்கள் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். இளம் ரத்தம் என்பதால் வண்டியை முறுக்கி வேகத்தைக்கூட்டி பயணத்தைத் தொடர்ந்து எதிர்வரும் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி இறக்க நேரிட்டு பெற்றோரையும் தன்னைச் சார்ந்தவர்களையும் வேதனைகளில் ஆழ்த்தி விட்டீர்கள் சென்று விடுவது தொடர்கதையாகுகிறது.

Tuesday 4 March 2014

விமலனின் பூப்பதெல்லாம்!- ஒரு பார்வை

சிறுகதை மனித உள்ளத்தின் அடைய முடியாத ஆசைகளின் எதிரொலி என்றார் புதுமை பித்தன். சுற்றி நிகழும் கொடுமை, சூழலில் நிகழும் அவலம் இவற்றைக் கண்டும் காணாமல் பார்த்தும் பார்க்காமல் பாதையோரத்தில் செல்கின்ற நடைபாதை வாசியல்ல எழுத்தாளன். அவனுக்குச் சமூக அக்கறை இருக்க வேண்டும். சுற்றி நிகழும் அழுகையின் குரல் புரிய வேண்டும். அகிலத்தின் அவலத்தில் அவன் மூழ்கி எழவேண்டும். அப்பொழுது தான் அவனது கதை மாந்தர்களும் சமூகத்திடையே மின்னிச்சிறப்பார்கள். எனவே எந்த எழுத்தாளனுக்குச் சமுதாயத்தின் மீது அக்கறை இருக்கிறதோ அந்த எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகள் எதிர்காலத்தில் பேசப்படும் படைப்புகளாக மிளிரும்.