அரும்புகள் மலரட்டும்: புதுக்கோட்டை இணையப் பயிற்சி முகாம்- 2019

Thursday 17 October 2019

புதுக்கோட்டை இணையப் பயிற்சி முகாம்- 2019


புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம், வீதி இலக்கிய களம் நடத்திய இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் புதுக்கோட்டை ஜே.ஜே கல்லூரியில் அக்டோபர் 12,13 ஆகிய 2 தேதிகளில் நடைபெற்று முடிந்திருக்கிறது. அப்பயிற்சியில் நானும் கலந்து கொண்டேன் என்பதில் பெரு மகிழ்வு.மணப்பாறையில் இருந்து புதுக்கோட்டைக்கு நானும் அண்ணா ரவி ஐயா அவர்களும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துக் கல்லூரியைச் சென்றடைந்தோம். வளாகத்திற்குள் நுழைந்ததும் பயிற்சி நடைபெறும் இடத்திற்கு அம்புக் குறியிட்ட பதாகை நம் விரல் பிடித்து அழைத்துச் செல்லும் வண்ணம் ஒட்டப்பட்டிருந்தது.

12.10.19 சனிக்கிழமை முதல்நாள் பயிற்சி:
கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்கள் வழக்கம்போல பம்பரமாய் சுழன்றுக் கொண்டிருந்தார். கவிஞர் கீதா அவர்களும் கவிஞர் மாலதி அவர்களும் கல்வி அலுவலர் ஜெயா அம்மா அவர்களும் வருபவர்களை வரவேற்று வருகையைப் பதிவு செய்து  கொண்டிருந்தனர். சிறப்பு விருந்தினர், விருந்தினர்,வல்லுநர், பங்கேற்பாளர் என தனித்தனியாக அவர்களுக்கான அடையாள அட்டையை வழங்கினர்.

குளிரூட்டப்பட்ட அறையின் குளிர்ச்சியை விட வீதியின் மகள் திவ்யபாரதி மற்றும் கவிஞர் மகா சுந்தர் அவர்களின் அன்பு மகள்களின் தமிழிசைப் பாடல்கள் மனதிற்கு குளிர்ச்சியையும் செவிக்கு விருந்தையும் அளித்தது நிகழ்வின் தொடக்கமாக அமைந்தது.

தமிழை வணங்காது, தமிழை வளர்ப்பதற்கான முன்னெடுப்புகளை நாம் தொடங்க வேண்டும். வட இந்திய மொழிகளான போஜ்புரி,மைதிலி, மகதி முதலிய மொழிகள் இந்தியின் வரவால் அழிந்து கொண்டிருக்கின்றன எனும் கவலை தோய்ந்த செய்தியோடு வரவேற்புரையை கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்கள் நிறைவு செய்தார்.

புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய காலத்தில் புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கத்தையும் வீதி கலை இலக்கியக் களத்தையும் நிறுவிய பள்ளிக்கல்வி இணை இயக்குனர் முனைவர் நா. அருள்முருகன் ஐயா அவர்கள் இணையப் பயிற்சி ஏன் தேவை என்பது குறித்தும், அதன் பயன்  குறித்தும் இணையத்தின் மூலமாக எவ்வாறு பொருள் ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்தும் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

மேலும் பல்வேறு இணைய வசதிகளைத் தருகின்ற தளங்களைக் குறிப்பிட்டு உரையாற்றியது சிறப்பாக அமைந்தது. உதாரணமாக ரெட்பஸ் என்கிற பயணச்சீட்டை வழங்குகின்ற நிறுவனம் உண்மையிலேயே பேருந்துகளை இயக்குவது இல்லை. மாறாக பேருந்து சீட்டை வழங்கக்கூடிய ஒரு முகவராக இருந்துகொண்டு பொருள் ஈட்டி கொண்டிருப்பதைச் சான்றாக கூறினார்.

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் தனக்கே உரிய நகைச்சுவை நிரம்பிய வரவேற்புரை வழங்கினார். மேனாள் தமிழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணையாழி ராசேந்திரன் அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார். மனிதர்களை இரண்டு விதமாக இன்றைய உலகம் பிரித்து வைத்திருக்கிறது.  ஒன்று தொடர்பில் இருப்பவர்கள். மற்றொன்று தொடர்புக்கு அப்பால் இருப்பவர்கள் என்பதே. நம்மையெல்லாம் தொடர்புக்கு வைத்திருக்கும் பணியை இணையம் செய்துக் கொண்டிருக்கிறது. நான் தமிழை வளர்ப்பதற்காக இணையத்திற்குச் செல்லவில்லை இணையத்தை வளர்ப்பதற்காகச் செல்கிறேன் என்று அவர் கூறியபோது அரங்கம் கைத்தட்டல் ஒலியால் நிரம்பியது.

பயிற்சி வகுப்புகள் தொடங்கின. ஆரம்ப நிலை கணினி பயன்பாடு குறித்து  முனைவர் மு பழனியப்பன் அவர்களும் வலைப்பக்கம் உருவாக்கம் குறித்து திண்டுக்கல் தனபாலன் அண்ணன் அவர்களும் குரல்வழி பதிவேற்றம், கிண்டில், தமிழில் பிழை திருத்தி ஆகியன குறித்து நீச்சல்காரன் ராசாராம் மற்றும் அண்ணன் கஸ்தூரிரங்கன் அவர்களும் முகநூல் இன்ஸ்டாகிராம், சுட்டுரை புலனம் குறித்து யூ.கே. கார்த்தி , த. ரேவதி,  ஸ்ரீ மலையப்பன், திவ்யபாரதி அவர்களும் யூடியூபில் பதிவேற்றம், வணிக வாய்ப்புகள் குறித்து எஸ்.பி. செந்தில்குமார் அவர்களும் மின் சுவரொட்டி தயாரித்தல் குறித்து எம் எஸ் ரவி அவர்களும் பயிற்சிகளை வழங்கினர்.  மாலை நான்கு மணிக்கு பார்க்க வேண்டிய குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதனை எஸ் இளங்கோ அவர்களும் புதுகை செல்வா அவர்களும் காட்சிப்படுத்தினர்.

வலைப்பதிவர் தம்பதியினரான  திருமிகு.கஸ்தூரிரங்கன்- மைதிலி இவர்களின் அன்பு மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்வகையில்  தனது நீளமான முடியை வழங்கியதைப் பாராட்டியது சிறப்பான தருணமாக அமைந்தது.

13.10.19 ஞாயிறு பயிற்சியின் இரண்டாம் நாள்:
முனைவர் நா. அருள் முருகன் ஐயா அவர்கள் நேரம் கருதி சுருக்கமாக தனது தொடக்கவுரையை நிறைவு செய்தார். இணையத்தில் தொழில் வாய்ப்புகள் குறித்து நீச்சல்காரன் ராசாராம் விவரித்தார். இணையத்தில் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது எனும் தலைப்பில் யூ.கே.கார்த்தி அவர்கள் இணையப் பாதுகாப்பிற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற தரவுகளை அடுக்கியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் சிறப்புரை சிறப்புரை வழங்கினார். இன்றைய இணையப் பயன்பாடுகள் குறித்தும் நமது வாழ்க்கை நவீன கருவிகளால் சூழ்ந்துள்ளது ஆனால் நவீன சிந்தனைகளால் சூழவில்லை என்று தன் ஆதங்கத்தையும் நவீன கண்டுபிடிப்புகள் வேலைகளை இலகுவாக்கி இருக்கின்றன. ஆனால் மனிதனைப் புரிந்து கொள்ள அவை உதவ வேண்டும் என்கிற சிந்தனையையும் பதிவுசெய்தார்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விக்கிபீடியா வகுப்பு பிரின்சு என்னெரசு பெரியார் அவர்களும் முனைவர் ஜம்புலிங்கம், கரந்தை ஜெயக்குமார் அவர்களும் வழங்கினர். யூடியூப் பதிவேற்றம் குறித்து எஸ்பி செந்தில்குமார் அவர்கள் பகிர்ந்து கொண்டார். கவிஞர் கீதா அவர்கள் நன்றியுரையில் தமது இணைய நண்பர்கள் பள்ளிக்கூட குழந்தைகளுக்கு எவ்வாறெல்லாம் உதவினார்கள் என்கிற செய்தியை நன்றியோடு பதிவுசெய்தார். ஜே.ஜே.கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் திரு.தயாநிதி அவர்களின் வாழ்த்துரை நன்றியுரையாக அமைந்தது மற்றுமொரு சிறப்பு. மொத்தத்தில் இப்பயிற்சி ஏடுகளில் எழுதிக் கொண்டிருந்தவர்களை இணையத்தின்பக்கம் இழுத்திருக்கிறது. குறிப்பாக என்னைப் போன்ற தூங்கிக் கொண்டிருந்தவர்களைத் தட்டி எழுப்பியிருக்கிறது. இனி அரும்புகள் தொடர்ந்து மலரும். நன்றி..

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

9 comments:

 1. அழகான அருமையான தொகுப்பு...

  வாழ்த்துகள்... நன்றி...

  ReplyDelete
 2. அருமையான பதிவு வாழ்த்துகள்....

  மயிலம் இளமுருகு

  ReplyDelete
  Replies
  1. அன்பு நண்பரே தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 3. மீண்டும் நிகழ்வுகளை கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள் நன்றி நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. பயிற்சி முகாமில் தங்களை முதன்முதலாக நேரில் சந்தித்தது மட்டற்ற மகிழ்ச்சி. தொடர்ந்து நட்பில் இணைந்திருப்போம்.

   Delete
 4. மிக்க நன்றி

  ReplyDelete
 5. அருமையான நிகழ்வுப்பகிர்வு. நன்றி.

  ReplyDelete