அரும்புகள் மலரட்டும்: ஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை

Monday 6 April 2015

ஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை


அப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே தனியாக ஊருக்கு சென்று வந்து விடுவேன். தேர்வு சமயத்தில் என் தாத்தா இறந்து விட்டார் என்று செய்தி வந்தது. அம்மாவும் அப்பாவும் உடனே ஊருக்கு கிளம்பி விட்டார்கள். நானும் என் தம்பியும் தேர்வு எழுத வேண்டுமென்பதால் மதியத்திற்கு மேல் ஆள் விட்டு அழைத்து கொள்வதாக முடிவு. ஆனால் நாங்கள் முன்னரே தேர்வு எழுதி முடித்து விட்டு ஊருக்கு தனியாக கிளம்பி சென்று விட்டோம்.

அன்று முதல் நான் தனியாக ஊருக்கு செல்ல அனுமதி கிடைத்தது. அப்படி தான் ஒரு நாள் நான் ஊருக்கு புறப்பட்டேன். பேருந்திலிருந்து இறங்கி இரண்டு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும் எங்கள் கிராமத்திற்கு. அப்படியொரு கிராமம். (இன்றைய அளவிலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை). பேருந்தை விட்டு இறங்கி பயணம் செய்தேன். கையில் ஒரு பை. அதில் அம்மா கொடுத்தனுப்பிய மாமா வீட்டிற்கான பொருட்கள் கூடவே திண்பண்டங்களும் அதில் அடக்கம். சரியாக பகல் ஒரு மணி இருக்கும்.

பேருந்து நிறுத்தத்தில் இரு மருங்கிலும் பெரிய ஆலமரங்கள் இரண்டு. அடர்ந்த விழுதுகள் தொங்கிக் கொண்டிருக்கும். அம்மரத்தின் உடம்பெல்லாம் ஆணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். கூடவே மிளகாய், எலுமிச்சை பழம், முடி எல்லாம் சேர்த்து அடிக்கப்பட்டிருக்கும். அப்போது இவையெல்லாம் எதற்காக அடித்திருக்கிறார்கள் என்று கூட சிந்திக்க தெரியாத வயது எனக்கு.

பேருந்தை விட்டு இறங்கினேன். வடக்கு தெற்காக அமைந்த அந்த தார்சாலையில் நடக்கத் தொடங்கினேன். இரு மருங்கிலும் கள்ளிச்செடிகள் அந்த சாலைக்கு வேலிகளாக அமைந்திருந்தது. சற்று தூரம் கடந்திருப்பேன். எனது இடது கை பக்க முள்வேலியில் எருமை மாடு சப்தம். மிக அருகில் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஏனேனில் சப்தம் மிக தெளிவாக அருகாமையிலிருந்து ஒலிக்கிறது.

நமது ஊர்க்காரர்கள் யாராவது மாடு மேய்த்துக் கொண்டிருப்பார்கள் என்று சற்றும் முற்றும் பார்த்தேன். கண்ணுக்கு எட்டிய தொலைவிற்கு யாருமில்லை. எருமை மாடும் இல்லை. ஆனாலும் எருமை மாடு சப்தம் மட்டும் காதைத் துளைக்கிறது. அச்சமயம் பயம் தொற்றிக் கொண்டது. விரைவாக நடந்தேன் என்று சொல்வதை விட ஓடினேன் என்று சொல்வது தான் மிக பொருத்தமாக இருக்கும். எனக்கு நினைவுக்கு வந்த சாமி பெயர்களை எல்லாம் சொல்லிக் கொண்டே ஓட்டம் பிடித்தேன். சப்தமும் தொடந்தே பயணித்தது. இப்படியே நானும் சப்தமும் ஒரு கிலோ மீட்டர் தொலைவான தார்சாலையைக் கடந்து விட்டோம்.

இனி கிழக்கு மேற்காக அமைந்த மண்சாலைக்கு மாற வேண்டும். நான் பயணித்த தார்சாலையில் சென்றால் வேறொரு ஊருக்கு சென்று விடும். இப்போது பாதை மாற வேண்டும். நானும் மாறினேன். சப்தம்?? சப்தமும் எனது இடது பக்கம் மாறியது. பயத்தின் உச்சிக்கே சென்று விட்டேன். இப்பொழுது எனக்கு தெரிந்த கடவுள் பெயர்களை உச்சரிக்க முடியவில்லை நாநடுக்கம் தான் அதற்கு காரணம்.

ஓடினேன் ஓடினேன் ஊர் வரும் வரை ஓடினேன். இதற்கிடையில் எனது வலதுபக்கம் ஒரு கிணறு பார்த்துக் கொண்டே கடந்தேன். சில அடிகள் எடுத்த வைத்தவுடன் அந்த கிணற்றில் டமார் என்ற சப்தம் அத்துடன் எருமை மாடு சப்தம் அடங்கியது. மாமா வீட்டை வந்தடைந்தேன். (மாமாக்கு பொண்ணு எல்லாம் இல்லைங்க) அத்தையும் மாமாவும் வரவேற்றார்கள். நடந்ததைக் கூறினேன். அமைதியாக கேட்ட மாமா அது எல்லாம் ஒன்றுமில்லை நீ போய் சாப்பிடு என்று சொல்லி அனுப்பினார். நானும் சாப்பிட தொடங்கினேன். எனது உறவினர் வீட்டு தாத்தா ஒருவர் பேசத் தொடங்கினார்.

அந்த ஆலமரத்தில் அடிக்கப்பட்ட ஆணிகள் எல்லாம் பேய் விரட்டிகள் பேயை விரட்டி வந்து அடித்த ஆணிகள். அங்கு எப்போதும் பேய்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். நமது ஊரில் யாரேனும் மருத்துவமனையிலேயே இறந்து ஊருக்குள் கொண்டு வந்தால் அந்த பேய்கள் எல்லாம் அவர்கள் கூடவே வந்து விடும். பின்னர் அவைகளை அந்த ஆலமரத்தில் அடக்கி விடுவோம் என்று கூறினார். கூடவே வழியில் ஒரு மின்மாற்றி பொருத்திய மின்கம்பத்தில் விட்டுத்தகராறு காரணமாக இளைஞன் ஒருவன் ஏறி மின்கம்பிகளைப் பிடித்து இறந்து விட்டதாகவும் அவனுடைய ஆவியும் அங்கு தான் சுற்றித் திரிவதாக சொல்லி முடித்தார்.

எல்லாம் கேட்டு விட்டு தூங்கச் சென்றேன். பின் கடுமையான காய்ச்சலோடு எழுந்தேன். மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றதோடு மந்திரக்கவும் அழைத்து சென்று திருநீறு அணிவித்தார்கள். இரண்டில் ஏதோ ஒன்றின் காரணமாக அடுத்த நாள் காய்ச்சல் சரியானது.

இன்று
இரண்டு ஆலமரங்கள் இருந்ததாக நான் சொல்லிய இடத்தில் இன்று ஒரு அமைச்சரின் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இரவு பொழுதைக் கூட பகல் பொழுதாக மாற்றி விடும் வண்ணம் மின் விளக்கு ஒளிகளால் அவ்விடவே நிரம்பி வழிகிறது. அந்த ஆலமரங்கள் இருந்ததற்கான சுவடுகள் கூட இன்றில்லை நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை அகலப்படுத்தும் போது அம்மரங்களை அகழ்ந்து விட்டார்கள்.

இன்று நான் அவ்விடத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது.  அன்று எனக்கு கேட்ட அந்த எருமை மாடு சப்தம் என்னவாக இருக்கும்? நான் சாலை மாறிய போது அந்த சப்தமும் மாறிய மர்மம் என்ன? அந்த முதியவர் சொன்ன பேய்களெல்லாம் அமைச்சரின் கல்வி நிறுவனங்களில் படித்து முடித்து மேற்படிப்பிற்காக வெளியூருக்கு சென்று விட்டதா? இதற்கான பதிலை நான் தேடும் போதெல்லாம் ஏதுமறியாத அந்த அரைக்கால் சட்டை சிறுவனின் மனநிலைக்கே மாறிப் போகிறேன்.

                                                                  ----நன்றி----

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

18 comments:

  1. ம்ம் interesting பாண்டியா நலம் தானே! அப்போ அப்பவும் விடை கிடைக்கல இப்பவும் கிடைக்கல.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      நலமாக உள்ளீர்களா! நாங்கள் நலமாக உள்ளோம். வலைப்பக்க வர தான் நேரமில்லை. கதைக்கு வருவோம் இன்னமும் விடை கிடைக்கவில்லை. ஆனாலும் பேய் என்பதை நேரில் இன்னும் பார்க்க முடியவில்லை..வருகைக்கும் கருத்துக்கும் அன்பின் நன்றிகள் சகோதரி..

      Delete
  2. புரியாத புதிர்....

    பேய்க் கதைகள் கேட்க என்றுமே ஸ்வாரசியம் தான்!

    ReplyDelete
    Replies
    1. சகோதருக்கு நன்றிகள்.
      புதிரும் சுவாரசியம் இருப்பதனால் பேய் கதைகள் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கின்றன. அவையெல்லாம் மூடநம்பிக்கைகள் என்பதை மறந்து மக்கள் பார்ப்பது கேலிக்கூத்து..

      Delete
  3. உயிருடன் நடமாடும் பேய்களைவிட, தாங்கள் குறிப்பிடும் பேய் ஆபத்தானதல்ல நண்பரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      உண்மையாக உயிருடன் இருக்கும் பேய்கள் பல விதங்களில் நம்மை ஆட்டிப் படைக்கின்றன.

      Delete
  4. அடுத்தமுறை சென்று வருவோம், சரியா...?

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சென்று வருவோம். தங்களைச் சந்திக்கும் ஆவல் மிகுந்திருக்கிறது. கருத்துக்கு நன்றி சகோதரர்..

      Delete
  5. களப்பணி சென்றபோது ஒரு முறை இவ்வாறான நிகழ்வினை எதிர்கொண்டேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் கிட்டத்தட்ட காடு போன்ற ஒரு இடத்தில் உள்ளே சென்றுவிட்டேன். மாலை நேரம். காற்றில் மரத்தின் கிளைகள் ஆடுவது ஒரு வித்தியாசமான ஒலியை எழுப்பியது. திரும்பிப் பார்க்கவும் பயம். கண்ணுக்கு எட்டிய வரை யாரும் கிடையாது. எனக்கு பயம் அதிகமாக அதிகமாக அந்த ஒலி மாறி மாறி வந்தது. ஒருவழியாக கடைசியில் ஒருவர் தென்பட்டார். சுதாரித்துக்கொண்டு பின்னர் அவருடனே அப்பகுதியை விட்டு வெளியே வந்தேன்.
    பதிவுகள் படிப்பதோடு இதுபோன்றவற்றை சுவைப்பதிலும் சுகம்தானே? ரசித்தேன்.
    களப்பணியில் நாட்டாணி சென்ற அனுபவத்தைக் காண அழைக்கிறேன்.வருக. http://ponnibuddha.blogspot.com/2015/04/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. பல நேரங்களில் இப்படியான சம்பவங்கள் நடந்தேறுகிறது. காரணம் காரியம் அறிய முடியாமலே! அவசியம் வலைப்பக்கம் வருகிறேன். வருகைக்கு நன்றிகள் ஐயா...

      Delete
  6. நண்பரே! புதிராகத்தான் இருக்கின்றது. பேய் என்பதில் நம்பிக்கை இல்லாததால்...ஆனால் இது போன்று கேள்விப்படும் போது புதிராக இருந்தாலும் உங்கள் விவரணம் சுவாரஸ்யமாக இருந்தது. சே இறுதியில் அது என்ன என்று தெரியாமல் போனதே!

    ReplyDelete
    Replies
    1. இதுவரை அதற்கான விடை கிடைக்கவில்லை. விடைக்காக நான் தேடி அலையவுமில்லை. புரியாத புதிராகவே இருந்து விடட்டும். கருத்துக்கும் வருகைக்கும் மிகுந்த நன்றிகள் ஐயா...

      Delete
  7. வணக்கம்
    சகோ
    மனிதனை படி படி என்று சொன்னாலும் படிக்காத இந்த காலத்தில்

    பேய்களெல்லாம் அமைச்சரின் கல்வி நிறுவனங்களில் படித்து முடித்து மேற்படிப்பிற்காக வெளியூருக்கு சென்று விட்டதா.... முற்று பெறாமல் நிக்கிற வினாவை பார்த்து பார்த்து சிரித்தேன் சகோ... எல்லாம் மனிதன் வகுத்த நம்பிக்கைதான் ... பகிர்வுக்கு நன்றி
    த.ம7

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்--

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சகோ. நம்ம மட்டும் தான் மேற்படிப்பு படிக்கனுமா என்ன? அதுங்க எல்லாம் படிக்கக் கூடாதா? அவைகள் எல்லாம் மலேசியாவிற்கு வந்திருப்பதாக தகவல். பத்திரமாக இருந்துக்கங்க சகோகோ.... ஹா ஹா.....

      Delete
  8. நல்ல பதிவு சகோ.... மயிர் கூச்செறியும் நிகழ்வு...

    ReplyDelete
  9. Nanum aavaludan erukirean... Paarpatharu... Enraavathu oru naal paarpean.. Kandipaaga
    .arumai sambavam..

    ReplyDelete
  10. அந்த போய் கதை என்னோட வாழ்விழும் நடந்துள்ளது சார்..

    ReplyDelete
  11. அருமையான பதிவு நண்பரே மேலும் பதிவு செய்ய வேண்டும் ஆர்வமாக உள்ளது

    ReplyDelete