இந்திய அணி உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை என்ற கவலை எனக்கும் ஏற்பட்டது தான். இருந்தாலும் விளையாட்டில் வெற்றி என்பதும் தோல்வி என்பதும் இரு துருவங்கள். வெற்றி பெறும் போது தலையில் தூக்கி கொண்டாடிய ரசிகர்கள் தோல்வி அடைந்தவுடன் அவர்களின் கொடும்பாவிகளை எரிப்பது, வீடுகளைத் தாக்குவது என்று வன்முறையில் இறங்குவது எவ்வளவு கேலிக்கூத்தான செயலாக இருக்கிறது. தோல்வி அடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வேண்டியது ஒவ்வொருவரின் ரசிகனின் கடமை அல்லவா! உண்மையில் இந்திய அணி இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் யாரும் எதிர்பார்க்காத எழுச்சியைப் பெற்றது (இறுதிப் போட்டியைத் தவிர)
சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு இல்லாத நாட்டுப்பற்று எந்த வேலைக்கும் செல்லாமல் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்து அவர் அப்படி ஆடியிருக்கலாம் இப்படி ஆடியிருக்கலாம் என்று வாயில் விளையாடும் ரசிகனுக்கு இருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்பதற்கு ஆதாரமாக இந்திய பெண்கள் கபடி அணியினர் உலகக் கோப்பையை வென்று தாயகம் வந்து வரவேற்க ஆள் இல்லாமல் நடுத்தெருவில் கோப்பையைக் கையில் ஏந்திய வண்ணம் அவரவர் வீடுகளுக்கு ஆட்டோ பிடித்து சென்ற சம்பவமே சாட்சி.
சாய்னா நெக்வால்
உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையை சாய்னா நேவால் படைத்துள்ளார். அதோடு கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பிறகு பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ள முதல் சீனர் அல்லாத வீராங்கனை என்ற பெருமையையும் சாய்னா நேவால் பெற்றுள்ளார்.
இந்த நிகழ்வை எத்தனை ரசிகர் பெருமக்கள் அல்லது இந்தியர்கள் கொண்டாடி இருக்கிறோம்? ஒரு பெண்ணாக தனியாள் போட்டியில் வென்று இந்தியாவிற்கு மட்டுமல்ல பெண் இனத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார் சாய்னா. இத்தனைக்கும் கிரிக்கெட் போன்று ஸ்பான்சர் இல்லாத விளையாட்டில் வரலாற்று சாதனை படைத்திருக்கிறார் என்பது தான் சிறப்பு.
ஸ்ரீகாந்த்
உலக பேட்மிண்டன் ஆண்கள் பிரிவில் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் பெற்று சாதித்திருக்கிறார். அவரைக் கூட எவரும் பெரிதாக கண்டு கொண்டதாக தெரியவில்லை. ரசிகர்கள் இருக்கட்டும் இந்தியா விளையாட்டுத் துறை அவ்வளவாக கண்டு கொண்டதாக எனக்கு படவில்லை.
அசுர விளையாட்டாக மாறி போன கிரிக்கெட்
இந்தியாவில் மட்டுமல்ல உலகில் பல நாடுகள் கிரிக்கெட் அசுர வளர்ச்சி பெற்றிருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் வருமானம், ஷ்பான்சர், அந்தஸ்து, புகழ் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்காதது நாட்டின் சாபக்கேடு தான். கடந்த சில ஆண்டுகளாக தான் மற்ற விளையாட்டுகளின் மீது கொஞ்சம் கவனம் அரசுக்கு வந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனாலும் இது கிரிக்கெட் இணையான கவனம் கிடையாது என்பது வேதனை..
ரசிகர்கள்
கிரிக்கெட் விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ரசிகர்கள் மற்ற விளையாட்டுக்கு கொடுப்பது குறைவு. மேலை நாடுகளில் கால்பந்தாட்டத்துக்கு மட்டும் நல்ல வரவேற்பு இருப்பது கவனிக்கத்தக்கது. இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு தனது தொலைக்காட்சி சாலையில் போட்டு உடைத்ததை நாட்டுப்பற்று என்று எப்படி சொல்ல முடியும். கபடியில் பெண்கள் அணி, சாய்னா, ஸ்ரீகாந்த் சாதித்த நிகழ்வுகளைக் கொண்டாடி இருந்திருந்தால் நாட்டுப்பற்று இருப்பதாக எண்ணியிருக்க முடியும். ரசிகர்கள் கொண்டாட வேண்டுமென்ற அவசியம் கூட வேண்டியதில்லை கிரிக்கெட் இணையாக மற்ற விளையாட்டுகளையும் எண்ணும் மனநிலையே தற்போது இந்திய ரசிகர்களுக்கு தேவை.
பணமே ஜெயிக்கிறது...!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசகோ.
அட்டகாசமான பதிவு... தாங்கள் சொல்வது உண்மைதான்...மற்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் வர வேண்டும்... எல்லாம் பணம்...த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-