அரும்புகள் மலரட்டும்: கொலைக்களமாகும் கல்விக் கூடங்கள்

Sunday, 20 October 2013

கொலைக்களமாகும் கல்விக் கூடங்கள்



தினகரன் செய்தித்தாளுக்கு திரு. ஆ.ஹரிதாஸ் அவர்கள் எழுதிய கட்டுரையை படிக்கும் போது நமது எதிர்கால தலைமுறை எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கையில் சுவாசம் சூடேறியதை உணர முடிந்தது.


அந்த கட்டுரையின் சில வரிகள் உங்கள் பார்வைக்கு:

சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் வைத்து ஆசிரியர் உமா மகேஸ்வரி, ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவரால் கொல்லப்பட்டார் என்ற சம்பவத்தின் சுவடிகள் கூட ஆறாத நிலையில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாட்டில் இன்பேண்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வரை மாணவர்கள் மூன்று பேர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட செய்தி நம்மையெல்லாம் அதிர்ச்சியுறச் செய்தது.
இக்கொலையை நாட்டில் நடக்கும் எத்தனையோ கொலைகளில் இதுவும் ஒன்று என நினைத்து புறம் தள்ளிவிட முடியாது.

இந்த கொலைகள் நடந்த இடம், கொலை செய்யப்பட்டவர்கள், கொலையாளிகள் என நாம் பார்க்கும் போது இந்த இரு கொலைகளும் எதிர்கால தலைமுறை எப்படி அமைய போகிறதோ என்ற பதட்டத்தை அனைவரின் உள்ளங்களிலும் ஏற்படுத்தியுள்ளது.

ஏடுகளை சுமந்து செல்ல வேண்டிய கரங்களால் கத்தியும், அரிவாளும் கொண்டு செல்லப்பட்டுரத்த வெறியாட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. மாணவர்களின் உணர்ச்சி வசப்படும் தன்மை அவர்களை கொலையாளியாக்கி இருக்கிறது பெற்றோருக்கு அடுத்த படியாக நேசிக்க வேண்டிய குரு ஸ்தானத்தில் உள்ள ஆசிரியர்களை சக மாணவர்களே கொன்று ரத்த வெறியாட்டம் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று விரிகிறது அவரது கட்டுரை. 

இனி இச்சம்பவங்கள் குறித்த எனது பார்வையை தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

கொலை செய்தவர்களுக்கு எந்த விதமான தண்டனைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு முக்கியமல்ல அந்த குற்றவாளிகளை இனி இந்த சமூகம் எப்படி பார்க்க போகிறது என்பதே முக்கியம்.  கொலை செய்யும் மனநிலைக்கு எப்படி ஆளானான் என்பதை ஆராய வேண்டும்.

நமது கல்விமுறையில் மாற்றங்கள் வேண்டுமா என்பதை ஆராய்வதற்கான தருணம் வந்து விட்டதாகவே உணருகிறேன். முன்பெல்லாம் விழுமக்கல்வி தனியாகவே ஒரு பாடவேளையாக வரும். இன்று பாடத்துடனே சிறு பகுதியாக வருகிறது. பாடம் நடத்தும் ஆசிரியரும் அதை ஒரு பாடமாக வைத்து விட்டார்கள் என்றெண்ணி நடத்தி விடுகிறார்கள். உண்மையில் அந்த விழுமங்கள் நடத்தப்படுவது அல்ல உணரச் செய்வது. அந்த விழுமங்கள் மாணவர்களின் மனங்களை தட்டு எழுப்புகிறதா என்பது கேள்விக் குறியே!

பண்பாட்டு கல்வி முறையை தொடக்கக் கல்வியிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் பிஞ்சு மனங்களில் விழுமங்களை விதைத்து விட்டால் அவன் ஒருபோதும் வன்முறையை நாட மாட்டான்.

கோபதாபங்கள் மற்றும் உணர்ச்சிவசப்படுவதை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை சிறுவயது முதலே கற்பித்து நல்வழிப்படுத்துவது நமது கடமை. அப்போது தான் அவன் ஒரு பருவம் அடைந்தவுடன் வாழ்க்கை முறைகளை புரிந்து கொள்ள முடியும்.

ஆசிரியர்களும் பெற்றோர்களும் நமக்காக தான் கடினமாக உழைக்கிறார்கள் என்ற உணர்வைக் கொண்டு வந்து விட்டால் அவன் வன்முறையாளனாக மாற மாட்டான் என்ற நம்பிக்கையுள்ளது.

இன்றைய சூழலில் கல்வி வியாபாரமாகி விட்டதால் முக்கியமான படிப்பை எல்லாம் பணம் கொடுத்து சேர்ந்து விடுகிறார்கள். ஆனால் அதற்கேற்ப அவர்களால் படிக்க முடியவில்லை. கல்லூரிகள் ஒரு பக்கம் நெருக்கடி, பெற்றோர்கள் ஒரு பக்கம் நெருக்கடி என்பதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உச்சக் கட்ட வெறுப்பிற்கு அவர்களை கொண்டு செல்கிறது.

தமது விருப்பத்தை வழுக்கட்டாயமாக பெற்றோர்கள் குழந்தைகளிடம் திணிக்க வேண்டாம் என்பதே பலரின் கருத்தும்.

குழந்தைகளுக்கு சுயமாக சிந்திக்கும் சுதந்தரத்தைக் கொடுங்கள். அவன் முடிவு எடுத்த பின் அதில் ஒரு சில ஆலோசனைகள் கூறுங்கள். அப்போது அவன் பெற்றோர்கள் மீது எரிச்சல் அடைய மாட்டான்.

இன்னும் நிறைய இல்லங்களில் பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசுவதே இல்லை, அவன் நடத்தையை கவனிப்பதும் இல்லை. இது போன்ற செயல்கள் மாறினாலே நல்ல குழந்தைகளை உருவாக்க முடியும்.

இன்றைய சூழலில் திரைப்படங்களில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வன்முறைக் காட்சிகள் பெருகி விட்டன, அதைப் பார்த்தே குழந்தைகள் தவறு செய்வதாக நிறைய கேள்விப் படுகிறோம். ஊடகத்துறைகளும் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பள்ளியிலிருந்தே ஒரு மாணவனை தயார்படுத்துவதோடு சகிப்புத் தன்மையையும் சேர்த்து வளர்க்க வேண்டும்.ஒரு மாணவனை சகிப்புத் தன்மையோடு வளர்க்கக் கற்றுக் கொண்டால், நிச்சயம் எதிர்கால சமுதாயம் சிறப்பானதாக அமையும். இதில் மிகப் பெரிய பங்கு ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை மறந்து விட வேண்டாம்.

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

48 comments:

  1. பொறுப்பான கட்டுரை சகோ,

    எதிகாலத்தின் சந்ததியை கொஞ்சமேனும் மாற்ற விரும்பினால் விமர்சன்மில்லாது புதிய மதிப்பீட்டு முறையை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை ஆசிரியர் சமூகத்திற்கு என்று தோன்றுகிறது எனக்கு ... விழுமியங்களுக்கும் முக்கியத்துவம் தரும் ஒரு தரப் பட்டை உண்டல்லவா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோததரே!
      கருத்திட்ட சில நிமிடங்களே வருகை தந்து அசத்தி விட்டீர்கள். புதிய மதிப்பீட்டு முறை நல்ல நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் அருமை இனி வரும் காலங்களில் புரியும். விழுமங்கள் தரப்பட்டையோடு முடிந்து விடாமல் மாணவர்களின் மனங்களில் குடிபுக வேண்டுமென்பதே எனது விருப்பம். அனைவரது விருப்பமும் கூட. கருத்துரைக்கு நன்றீங்க சகோததரே..

      Delete
  2. அனைவரும் யோசிக்க வேண்டிய அலசல் கட்டுரை.

    //இன்றைய சூழலில் திரைப்படங்களில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வன்முறைக் காட்சிகள் பெருகி விட்டன, அதைப் பார்த்தே குழந்தைகள் தவறு செய்வதாக நிறைய கேள்விப் படுகிறோம்.//

    இதுதான் உண்மையான காரணமாகும்.இவை நன்கு கண்காணிக்கப்பட வேண்டும். தணிக்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

    // ஊடகத்துறைகளும் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.//

    பண வசூல் பாதிக்கப்படும் என்பதால் அவர்களாக முன்வந்து மாற்றிக்கொள்ளவே மாட்டார்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யாவிற்கு வணக்கம்
      தங்களது கருத்துரை இக்கட்டுரையை ஆழப்படித்து அலசியுள்ளதை தெரிவிக்கிறது. வருகை புரிந்து கருத்துரை வழங்கியதற்கு நன்றி அய்யா.

      Delete
  3. கல்வி என்பது வியாபாரம் ஆக்கப் படும் போது வன்முறைகள் வெளிப்படுவது சாத்தியமே. கல்வியைப் போதிப்பவர், பெறுவோர் ஆகிய இரு தரப்பும் அதனை மூலதனமாகவும், பண்டமாற்றாகவுமே கருதுகின்றனர். கல்வியைத் தரும் கல்விச்சாலைகளில் வியாபாரப் போட்டியின் காரணியாய் கல்வி அளவுக்கதிமாய் திணிக்கப்படுகின்றன, அத் திணிப்பு இளம் மக்களை மூச்சு முட்டச் செய்வதோடு, அதனைக் கிரகிக்கும் சந்தர்பங்கள் வழங்கப்படுவதில்லை. நம் சமூகம் தொன்று தொட்டே வன்முறைச் சார்ந்த சமூகமே, நம் வாழ்வியலும், பண்பாடும், அதுவே, அதனைக் குறைக்க கல்வியும் சமூகமும் கூட முயலவில்லை மாறாக நெய்யிட்டு வளர்த்தே உள்ளன. விழுமிய நெறி கற்கையும், வியாபாரமாக்கப் படாத சேவை நிலையிலான கல்விச் சாலைகளும், திறமை விருப்பத்துக்கு ஏற்ப இலகுவான படிப்புகளும், பெற்றோருக்கான அறிவுறுத்தல்களும் அவசியம். அது வரை சிக்கல்கள் பெருகுமே தவிர குறையப் போவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!
      தங்களது முதல் வருகை கண்டு மகிழ்ச்சி. தங்களது தளம் அருமையாக உள்ளது. வந்து கவனமுடன் படித்து கருத்திட்டமைக்கு நன்றீங்க நண்பா..

      Delete
  4. நண்பரே, ஒரு தொழிற் சாலையில், உற்பத்தி செய்யப் படவேண்டிய பொருள்களுக்கு இலக்கு நிர்ணயிக்கலாம். ஆனால் பள்ளிகளுக்கு, தேர்ச்சி சதவீதத்தில் இலக்கு நிர்ணயிக்கலாமா?
    தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் பள்ளியின் தரத்தினை நிர்ணயிக்கின்றோம். எனக்கு ஒரு சந்தேகம், பள்ளிகளுக்கு தேர்ச்சி சதவீதமே தர நிர்ணயம் செய்யும் அளவீடாக இருக்கையில், ஏன் பொறியியல் கல்லூரிகளில் அது ஒரு அளவீடாக இல்லை. எந்தப் பொறியியல் கல்லூரியாவது, இந்த ஆண்டு எம் கல்லூரியில் படித்த மாணவர்களில் இத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என விளம்பரப் படுத்தியதை பார்த்துள்ளீர்களா?
    பெற்றோர்கள் உணர வேண்டும். தங்களது குழந்தைகளை குழந்தைகளாகவே பார்க்க வேண்டும். தங்ளது ஆசைகளை குழந்தைகளின் மீது திணித்தல் கூடாது.
    மாணவர்கள் ஒன்றும் இயந்திரங்கள் அல்லவே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா.
      பதிவிட்ட உடனே வருகை தந்தது கருத்திட்டது மகிழ்வாக உள்ளது. தங்களது கருத்துரையில் நல்ல கருத்துக்களை முன் மொழிந்துள்ளீர்கள். அத்தனையும் நண்பர்கள் கவனத்தில் கொள்வார்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க அய்யா.

      Delete
  5. முதல் பள்ளிக்கூடம் வீடு தான்... பாடங்கள் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்... பெற்றோர்கள் உணர வேண்டும்... நல்லதொரு சிந்தனை ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அன்பு அய்யாவிற்கு வணக்கங்கள்.
      தங்கள் கருத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன். அனைத்திற்கும் ஆசிரியரே பொறுப்பு எனும் மனோபாவம் பெற்றொர்களிடைய உள்ளது. அவைகள் மாற வேண்டும் வீடுகள் பள்ளிகளாய் ஆக வேண்டும் என்பதே எனது கருத்தும். கருத்துரைக்கு நன்றீங்க அய்யா.

      Delete
  6. உண்மையில் சிந்திக்க வேண்டிய விஷயம். சமூக அக்கறையுடன் எழுதி இருக்கிறீர்கள் . திரைப்படங்களும் இது போன்ற வன்முறைகள் நிகழ்வதற்கு தூண்டுகோலாக அமைகிறது என்பது கவலைக்குரியது.பெற்றோரும் மாணவரின் விருப்பம் அறியாது அவர்களுடைய விருப்பங்களை திணிக்கின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கங்கள் அன்பு அய்யாவிற்கு.
      நன்றாக சொல்லியுள்ளீர்கள். அனைவரும் சிந்தித்து நல்லதொரு தீர்வு காண வேண்டும். கருத்துக்கு நன்றீங்க அய்யா.

      Delete
  7. தொழிற்சாலையில், உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருள்களுக்கு இலக்கு நிர்ணயிக்கலாம். ஆனால் பள்ளிகளுக்கு, தேர்ச்சி சதவீதத்தில் இலக்கு நிர்ணயிக்கலாமா? //

    கரந்தை ஜெயகுமார் அவர்கள் சொல்வது நிதர்சனமான உண்மை.

    பிள்ளைகளை நல்லவர்களாக வளர்ப்பதில் - பெற்றோரின் பங்கு தான் முதன்மையானது. ஆசிரியர்கள் இயன்றவரை செம்மைப் படுத்துகின்றனர். அதை ஊடகங்கள் உருக்குலைக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா.
      //பிள்ளைகளை நல்லவர்களாக வளர்ப்பதில் - பெற்றோரின் பங்கு தான் முதன்மையானது. ஆசிரியர்கள் இயன்றவரை செம்மைப் படுத்துகின்றனர். அதை ஊடகங்கள் உருக்குலைக்கின்றன.//நன்றாக விளக்கியுள்ளீர்கள். கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றீங்க அய்யா.

      Delete
  8. இனிய வணக்கம் நண்பரே...
    அருமையான கட்டுரை ஒன்றை படைத்திருக்கிறீர்கள்.
    நிச்சயமாக விவாதித்து நல்ல தீர்வை விரைவில் எடுத்தே ஆகவேண்டிய
    நிர்பந்தத்தில் இருக்கிறோம் நாம்.
    இயல்பாக பள்ளிகளும் கல்லூரிகளும் வியாபார சந்தைகள் ஆகிப்போயின
    என்ற வாதங்கள் ஒருபுறம் இருந்தாலும்.
    வரும் துன்பங்களையும் அழுத்தங்களையும் தாங்கிக்கொள்ள முடியாத
    அளவுக்கு மாணவர்களின் குணம் மழுத்துப் போய்விட்டதா???
    எங்கே ஆரம்பிக்கிறது அவர்களின் இந்த குணம்.
    அடிப்படையை ஆராய்ந்து அவர்களை நல்வழிக்கு ஆற்றுப்படுத்த வேண்டும்.
    உளவியல் மற்றும் மனோவியல் ரீதியான பகுப்புகளும் வகுப்புகளும்
    எடுக்கப்பட வேண்டும்...
    சீர்மிகு மாணவ சமுதாயம் உருவாக வேண்டும்....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோததரே!
      தங்களது வலைப்பக்கம் அருமை. தொடர்ந்து வருவேன். நல்ல சிந்தனைகளை இங்கே கருத்துரையாக விதைத்துள்ளீர்கள். சீர்மிகு மாணவ சமூதாயம் மலரும். வருகைக்கும் பயனுள்ள கருத்துக்கும் நன்றீங்க சகோததரே...

      Delete
  9. நல்ல சமூக அக்கறையை வெளிப்படுத்தி சொல்லியிருக்கிறீர்கள்... என்னுடைய கருத்தும் முதல் பள்ளிக்கூடம் வீடுதான்! பெற்றோர்களின் வளர்ப்புதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்...

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோதரிக்கு வணக்கம்..
      பெற்றோர்களின் வளர்ப்பு நிச்சயம் கவனிக்கத் தக்கது தான். நல்லதொரு சிந்தனையைக் கருத்துரையாக வழங்கியமைக்கும், வருகைக்கும் நன்றீங்க சகோதரி..

      Delete
  10. உளவியல் மற்றும் மனோவியல் ரீதியான வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும்...பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசுவதே இல்லை, அவன் நடத்தையை கவனிப்பதும் இல்லை. இது போன்ற செயல்கள் மாறினாலே நல்ல குழந்தைகளை உருவாக்க முடியும்.
    அருமையான கட்டுரை
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி..
      கடல் கடந்த வருகைக்கு முதலில் நன்றிகள். இன்றைய மாணவ சமுதாயம் சீரியதாக அமைய வேண்டுமானால் தாங்கள் கூறியது போல் உளவியல் மற்றும் மனோவியல் ரீதியான வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும்..ஆக்கப்பூர்வமான கருத்துரைக்கு நன்றீங்க சகோதரி..

      Delete
  11. அருமையான கட்டுரை... ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. மாணவர்களுக்கு கல்வியோடு பண்பையும் சேர்த்து வளர்க்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோததரே! வருக!! தங்களது முதல் வருகை கண்டு மகிழ்ச்சி. பண்பு தான் ஒரு மாணவனை மனிதனாக்கும். அவன் மனிதன் ஆவதே கல்வியின் நோக்கம். நல்லதொரு கருத்துரைக்கு நன்றி நண்பா..

      Delete
  12. திருமதி வேதா மிகச்சிறந்த கருத்தை முன் வைத்திருக்கிறார். பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் பேசுவதே இல்லை என்பது இன்றைய நடைமுறை. அம்மாவும் அலுவலகம், அப்பாவும் அலுவலகம் சென்றுவிட்டால் குழந்தைகள் யார் கவனிப்பில் இருக்கும்? அவனது நடத்தையை கவனிப்பவர் யார்?

    உங்கள் பதிவை ஒவ்வொரு மாணவனும், பெற்றோரும் படிக்க வேண்டியது அவசியம்.
    சமூக அக்கறையுடன் எழுதியதற்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா..
      பதிவினை நன்கு படித்து நயமான கருத்துக்களைத் தந்திருப்பது கண்டு மகிழ்ச்சி. //உங்கள் பதிவை ஒவ்வொரு மாணவனும், பெற்றோரும் படிக்க வேண்டியது அவசியம்.// படித்து மனம் மாற்றங்கள் ஆக வேண்டுமென்பதே எனது விருப்பமும். சிறப்பான கருத்துக்கும் வருகைக்கும் நன்றீங்க அம்மா.

      Delete
  13. நினைத்துப் பார்க்க முடியாதவை... எம்மவரின் எதிர்காலம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதென்றே புரியவில்லை...

    ReplyDelete
    Replies
    1. வருக வணக்கம் சகோதரி..
      மாணவ சமுதாயம் இயல்பாக குற்ற உணர்வுகளை சுமப்பவர்கள் அல்ல. அறியாமல் சூழ்நிலை காரணமாக, சரியான வழிநடத்த ஆட்கள் இல்லாமல் தவறான பாதைக்கு செல்கிறார்கள். அவர்களை நல்வழிபடுத்தி விட்டால் இது போன்ற செயல்கள் வெகுவாக குறையும். நாளைய தலைமுறை சிறப்பாக அமைய நம்மால் ஆன முயற்சிகள் எடுப்போம். கருத்துரைக்கு நன்றீங்க சகோதரி.

      Delete
  14. ஆசிரியரின் மனோபாவத்திலும் நிறைய மாற்றம் வரவேண்டும் .எல்லா துறையும் நுகர்வோரை சார்ந்து இயங்க த்தொடங்கிவிட்டது.நாம் மாறவேண்டுமென்றே தோன்றுகிறது சார்

    ReplyDelete
    Replies
    1. சகோதரிக்கு வணக்கம்
      வருகை கண்டதும் மகிழ்ச்சி. கண்டிப்பாக ஆசிரியர்கள் மனபாவமும் மாற வேண்டும், பிள்ளைகளின் மனநிலை புரிந்து கொள்ளாது தங்களது ஆசையை அவர்கள் மேல் திணிக்கும் பெற்றோர்களின் மனங்களும் மாற வேண்டும். மாற்றம் வேண்டும் அனைவரிடத்திலும். நம்மிடமிருந்தே (ஆசிரியர்கள்) ஆரம்பிப்போம். கருத்துக்கு நன்றீங்க சகோதரி.

      Delete
  15. ஒழுக்கத்தை விட திறமைக்கு
    அதிக முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கிவிட்டோம்
    நல்லவனென்றால் ஏமாளி
    வல்லவனே வாழத்தக்கவன் என்கிற
    மனோபாவம் இன்று அனைவரிடத்தும்
    குடிகொண்டுள்ளது ............

    இன்றைய சூழலுக்குத் தேவையான பிரச்சனையை
    ஆழமாக அலசியது மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருக அய்யா. வணக்கம்..
      தங்களது வருகையும் கருத்தும் தன்னம்பிக்கையைத் தருகிறது. மனிதம் மறந்து வல்லவனாக இருந்து என்ன பயன் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்கிற தங்களது கருத்தே எனதும். வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றீங்க அய்யா.

      Delete
  16. அருமையான பதிவு சகோதரரே!..

    நிச்சயம் பிள்ளைகளின் கற்றல் வீட்டிலிருந்தே ஆரம்பிப்பதால் முதலில் பெற்றார் தகுந்தமுறையில் அவர்களுக்கு போதித்தல் வேண்டும்..

    காலத்திற்கு உகந்த நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி. வருகை கண்டு மகிழ்ச்சி. நிச்சயம் பெற்றோர்கள் தான் முதல் ஆசான். சகோதரியின் வருகை தாமதப் படுகிறதே என்று எண்ணிக் கொண்டு தான் இருந்தேன். வருகையும் தந்து கருத்துரையும் அளித்து விட்டீர்கள் நன்றீங்க சகோதரி.

      Delete
  17. நானும் பெற்றோரைத்தான் குறைகூறுவேன்...பலபெற்றோர்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதை கடமையாக நினைப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே! தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்த நட்பில் இணைந்திருப்போம். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீங்க.

      Delete
  18. நானும் இச்செய்தியைக் கேள்விப்பட்டேன். இப்போ பிள்ளைகளுக்குத்தான் அதிக ஸ்ரெஸ். அவர்களை ஒரு போதும் தனிமையாக விடக்கூடாது. கண்டிப்பாக பெற்றோர் அவர்களுடன் நேரத்தை செலவிடுவது மிக அவசியம். இங்கு இதை ஒரு உளவியல் வகுப்பு மூலம் பாடசாலைபிள்ளைகளின் பெற்றோர்களுக்கு நடத்துகிறார்கள்.அதுவும் முக்கியமாக டீனேஜ் பிள்ளைகளுடன் எப்படி பேசுவது, பழகுவது, அவர்களுடன் பொழுதுபோக்குவது, போன்ற விடயங்களிற்கு ஆலோசனைகள் சொல்லிக்கொடுக்கிறார்கள். "எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...." இப்பாட்டுத்தான் ஞாபகம் வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      தங்களின் முதல் வருகை கண்டு மகிழ்ச்சி. தங்களது தளமும் நன்றாக உள்ளது. உங்கள் கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றீங்க சகோதரி.

      Delete
  19. சிறந்த கட்டுரை .குழந்தைகள் ஆசிரியரை பெற்றோராக நினைக்க ஆரம்பித்து விட்டால் போதும்.தலைமுறை சீராகும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி. வருக.
      மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிறைய இடைவேளை ஏற்பட்டுள்ளது உண்மை. அவை மாற வேண்டும். வருகை தந்தமைக்கும் கருத்துரை வழங்கியமைக்கும் நன்றீங்க சகோதரி.

      Delete
  20. அண்ணா நானும் ஒரு பொறியியல் மாணவன்தான் .சில நேரங்களில் எங்க கல்லூரியில் கொடுக்கும் அழுத்தம் மற்றும் மிரட்டல்கள் இப்படித்தான் சிந்திக்க வைக்குது . தன்னுடைய கல்லூரி மாநில அளவில் இடம்பெறுவதற்காக எங்களை மதிப்பெண் கறக்கும் மாடுகளாக பயன்படுத்துகிறார்கள் . ஆசிரியர்களை பெற்றோர்போல் நினைக்கவேண்டும் என்பது உண்மைதான் . ஆனால் பொறியியல் கல்லூரியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் வேறு எங்கும் வேலை கிடைக்காததால்தான் வாத்தியார் வேலைக்கு வருகிறார்கள் . பின்னே எப்படி அவர்களிடம் அன்பு , சகிப்புத்தன்மை , அற்பணிப்பை எல்லாம் எதிர்பார்ப்பது ...

    ReplyDelete
    Replies
    1. வருக சகோததரே! வணக்கம்.
      மாணவர்கள் மருத்துவராகவோ, பொறியாளராகவோ, இன்ன பிற சிறந்த தொழில்களில் தேர்ந்தவராக இருப்பதைக் கண்டு மனமகிழ்பவர்கள் ஆசிரியர்கள்.. ஆகவே அனைவரையும் ஒரு கோணத்தில் பார்க்க வேண்டாம். தங்கள் கல்லூரியில் நடக்கும் விடயங்கள் தங்களை பாதித்திருப்பது புரிகிறது இருப்பினும் சகிப்புத் தன்மையை கடைபிடியுங்கள். இன்று கசப்பது நாளை இனிக்கலாம். எதுவும் கடந்து போகும். பொருமை காத்து தங்களால் எவ்வளவு கடின உழைப்பை தர முடியுமோ தந்து படித்து முடியுங்கள் பலன் கண்டிப்பாக கிடைக்கும். சகோததரே எனது கருத்தை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நன்றி.

      Delete
  21. அருமையான கட்டுரை.
    குழந்தைகள் நல்ல பழக்க வழக்கங்களை பெற்றோர்களிடமிருந்து தான் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களை அன்பாய் ஆதரவாய் கனிவாக பார்த்துக் கொண்டாலே குற்றங்கள் செய்ய மாட்டார்கள். வீட்டில் அன்பும் ஆதரவும் கிடைக்காத பிள்ளைகள் தான் இப்படி வெளியில் கூடா நட்பை பெற்று தடம் மாறுகிறார்கள்.
    ஆசிரியர் மாணவர்கள் உறவும் நன்றாக இருந்தலும் அவசியம்.
    பள்ளியில் வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாய் இருந்தால் ஆசிரியர் ஒவ்வொரு மாணவனையும் தனி பட்ட முறையில் கவனிக்க முடியும். பள்ளிகளில் வகுப்பில் இப்போது இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாய் இருக்கிறது. பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கையை அதிக படுத்த வேண்டும். அடிப்படைக் கல்வி நன்றாக அமைத்தால் தான் மேல் வகுப்பு போகும் போது பணிவு , கனிவு எல்லாம் வரும். முதல் வகுப்பு ஆசிரியர் கனிவாக , அன்பாக இருந்தாலே போதும்.
    பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பு மரியாதை கொடுக்க பழக்க வேண்டும். வீட்டில் உன் வாத்திக்கு என்ன தெரியும் என்று மரியாதை குறைவாய் பேசினால் பிள்ளைகள் எப்படி வாத்தியாருக்கு மரியாதை கொடுப்பார்கள். பெற்றோர், ஆசிரியர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டால் இம் மாதிரி நிகழ்வுகள் நடக்காது. ஆசிரியர் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்பணி என்று சமூகத் தொண்டாய் உணர்ந்து செய்தால்
    நல்லது.
    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா
      தங்களது கருத்துரையில் இடம்பெறும் அனைத்து விடயங்களும் ஏற்கத் தக்கது, சிந்திக்கத்தக்கது. முதலில் பெற்றோர்கள் மாற வேண்டும் எனும் தங்களது கவனிக்கத் தக்கது. நல்லதொரு நீண்ட கருத்துரைக்கு நன்றீங்க அம்மா. தொடர்ந்து வருகை தந்து கருத்திட்டு ஊக்கப்படுத்த வேண்டுகிறேன். நன்றி.

      Delete
  22. இணைப்பில் பார்க்கவும்... http://ilayanila16.blogspot.in/2013/10/blog-post_23.html

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றீங்க அய்யா. சகோதரியின் தளத்திற்கு என்று எனது நன்றியைப் பதிவு செய்து விட்டேன். என் இனிய நண்பர் அ.பாண்டியன் தங்கள் கருத்துரையில் என்னைக் கூறியது கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன் அய்யா. தங்களது அன்புக்கு நன்றிகள் ஆயிரம்...

      Delete
  23. வருங்கால சமுதாயத்தை வளப்படுத்த விரும்பும் சகோதரா ..!

    அருமை அருமை அதிலும் மாணவர்களை குற்றம் சொல்லாது அதற்கு மூலகாரணம் தேடுவது இன்னும் அருமை. சுற்றாடலில் ஏற்படுகின்ற பாரபட்சம், அலட்சியம், அவமானப் படுத்தல் போன்ற மன உளைச்சலை அறியாது ஆராயாது படிக்கவில்லை பழக்கவழக்கம் சரியில்லை என்று பெற்றோரும் ஆசிரியரும் திட்டுவதும் வெறுப்பதும் மேலும் அவர்களை நொறுங்கடிக்கும் அல்லவா? நல்ல சமுதாயம் உருவாக எல்லா பெற்றோரும் ஆசிரியரும் முன்வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அன்பு சகோதரி
      வருகை கண்டதும் உள்ளூற மகிழ்ச்சி அரும்புகிறது.
      //வருங்கால சமுதாயத்தை வளப்படுத்த விரும்பும் சகோதரா ..! // ஆஹா தங்களது நம்பிக்கையாவது யாவருக்கும் பயனுள்ளக் கருத்துக்களை தர முயல்கிறேன். தங்கள் கருத்து கண்டு உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது, வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி..

      Delete
  24. வணக்கம்
    சகோதரன்

    நல்ல விழிப்புணவு உள்ள கட்டுரை இந்த கருத்துக்கள் சமுக மட்டத்தில் சென்றடைய வேண்டும்..... பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. சகோததரின் வருகையும் கருத்தும் கண்டதும் மனதில் ஒரு வகை மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றீங்க சகோததரே...

      Delete