Sunday, 15 June 2014

போலி சாமியார்களும் பொல்லாத சோதிடர்களும்


வணக்கம் நண்பர்களே! ஆத்தா, வீடுகாத்த பேச்சி, ராக்காயி, சீலைக்காரி, பெத்தன்னா, மூலக்கார பாண்டி, அங்காள ஈஸ்வரி, அங்காளம்மா, கங்கங்கம்மா, ஒச்சக்கா..கா... கா ஏய்...... இப்படி கூவி பக்கத்துல இருக்கிறவனை பயமுறுத்திட்ட அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டதுண்டா? தன் பிழைப்புக்காக சாமியர்களும் சோதிடர்களும் அடுத்தவர்களின் வாழ்க்கையில் விளையாடிய கதைகள் ஏராளமாக நம் சமூகத்தில் பரந்து பட்டு இருக்கிறது.

இதில் பெண்களைப் பெற்றவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே கூறலாம்.தன் பெண்ணுக்கு மணவயது கடந்தும் இன்னும் வரன் அமையவில்லையே எனும் ஏக்கத்தில் அவர்கள் வந்து விழுவது போலி சாமியார்களிடம் தானே! அதற்கு அந்த சாமியார் அவர்களிடம் கேட்பது கூவுற சேவல் ஒன்னு, கூவாத சேவல் ஒன்னு, இளம் வெள்ளாட்டு நெஞ்சுக்கறி இல்லைனா கழுத்துக்கறி, ஆச்சி மட்டன் மசாலா 2, கருப்பன் விரும்பி சாப்பிடுற குவாட்டர், வடநாட்டு சுருட்டு ஒரு பண்டல், கடைசியா கருப்பனுக்கு குளோபல் கூலிங் கிளாஸ் ஒன்னு.

இப்படிப்பட்ட சாமியார்கள் கூட பரவாயில்லை. உன் பிள்ளைக்கு திருமணம் கைகூட வேண்டுமானால் அர்த்த ராத்திரி பூசை நடத்த வேண்டும் அதில் அவள் உடலில் ஒரு ஆடை கூட இருக்க கூடாது என்று சொல்லி தன் இச்சைகளைத் தீர்த்துக் கொண்ட சாமியார்களின் கதைகள் நம் காதுகளுக்கு எட்டியிருக்கிறது தானே!

தீராத வயிற்று வலி இருப்பவர்கள் கூட கிராமப்புறங்களில் மருத்துவமனை செல்வதில்லை. அவர்கள் செல்வதெல்லாம் அந்த ஊர் பூசாரியிடம் அவர் திருநீறு போட்டு விட்டால் சகல வியாதிகளும் குணமாகும் கைராசிகாரர், தெய்வ அருள் வாய்க்கப்பட்டவர்கள் என்று சொற்கள் இன்று வழக்கத்தில் உள்ளது. ஒரு பெண் வாலிபனுடன் பேசியதற்காக அவளின் தாய் கண்டித்திருக்கிறாள். அதற்காக அந்த பெண் விஷம் குடித்து விட்டாள் .அதை அறியாது அவளை ஒரு சாமியாரிடம் கூட்டிச் சென்றுள்ளனர்.

அதற்கு அந்த சாமியார் டேய் கருப்பா கண்ணைத் திறந்து பாருடா! அவளைப் பிடிச்சுருக்க காத்து, கருப்பு, பேய், பிசாசு, திட்டு, புறப்பாடு, பில்லி சூனியம் அதை விட்டு விலக்கி உன் பிள்ளையைக் காப்பாத்துப்பானு வேப்பிலை இலையில் விசிறி விட்டுக்கிட்டே அவளது இறுதி மூச்சு நிற்கும் வரை நடித்துள்ளார். முடிவில் அவள் மரணம் தான் மிஞ்சியது. அவளின் பெற்றோர்களையும், உறவினர்களையும் என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை. இப்படிப்பட்ட அறியாமையைத் தான் சாமியார்களும் சோதிடர்களும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

படித்தவர்கள் மத்தியில் கூட ஜாதகம் பார்க்கும் பழக்கம் இன்னும் மாறவில்லை. தன் பெண்ணுக்கோ அல்லது மகனுக்கோ திருமணம் செய்ய அவர்கள் முதலில் பார்ப்பது ஜாதகம் தான். இதில் ஜோதிடர்கள் விளையாடும் விளையாட்டுக்கு அளவே இல்லை. குறிப்பிட்ட ராசிக்கு மைத்துனன் இல்லாத வீட்டில் தான் பெண் எடுக்க வேண்டும். மூல நட்சத்திரம், செவ்வாய் என்று தன் வெறுவாயால் கட்டம் போட்டு பலருக்கு கட்டம் கட்டிய கதைகள் கேட்கும் போது அவர்களின் முகத்தில் காரி உமிழ்ந்து விட தான் தோணுகிறது.

மூலநட்சத்திரம், செவ்வாய் என்று காரணம் காட்டி வீட்டின் மூலையில் முடங்கிப்போயிருக்கும் முதிர்கன்னிகளின் (மன்னிக்கவும்) அவலங்களுக்கு யார் பதில் சொல்வது! நன்றாக உறவு பாராட்டிய என் நண்பர் ஒருவரின் மாமா திடீரென்று என் நண்பர் குடும்பத்துடன் 6 மாதங்களாக பேசவில்லையாம். ஒரு வழியாக அதற்கான காரணம் அண்டை வீட்டார் மூலம் என் நண்பரின் குடும்பத்தின் காதுகளுக்கு விழுந்துள்ளது.

காரணம் என்னவென்றால் மாமா ஒரு சோதிடரிடம் சென்றிருக்கிறார் அவர் உன் பிறந்தவள்கள் எல்லாம் வாய்ல தான் இனிக்க இனிக்க பேசுவாங்க ஆனா உள்ளூற வயித்தெரிச்சல் கொண்டவர்கள் எனும் கற்பனையைத் தட்டிவிட அதன் விளைவு ஆறு மாதங்கள் பேசாமல் இருந்தது தான். நண்பர் குடும்பத்தினர் வலியச்சென்று அப்படி எல்லாம் இல்லை என்று விளக்கம் சொல்லி மனுசன் பேசியிருக்கிறார்.

நான் பணிபுரியும் பக்கத்து ஊரில் சோதிடர் இருக்கிறார். ஒரு மனுசன் தன் குடும்பக் கஷ்டத்துக்கு ஒரு வழி சொல்லுங்கள் என்று சொல்ல அவர் நீ இன்னும் ஒரு வாரத்துல இருக்க மாட்ட செத்துப் போயிருவ என்று தடாலடியாக அறிவிக்க அவர் அதே பயத்தில், மன உளைச்சலில் மூன்றாவது நாள் தற்கொலை செய்து கொண்டார். இப்பொழுது அந்த சோதிடருக்கு சரியாக கணிக்கக் கூடியவர், உண்மையை அப்படியே சொல்லிடுவார் எனும் பட்டங்கள். அவரை சந்திக்க முன் அனுமதி வாங்க வேண்டுமெனும் சூழல்.

எத்தனை பெரியார்கள் வந்தாலும் நீங்க திருந்தவே மாட்டீங்கடா எனும் விவேக் சொன்ன திரைப்பட வசனம் தான் எனக்கும் நினைவுக்கு வருகிறது. என்னால் முடிந்த வரை இது பற்றிய விழிப்புணர்வை என் மாணவர்களுக்கு ஏற்படுத்துவது என்று முனைந்துள்ளேன் அதுவும் போதிக்கிறோம் என்று தெரியாதவாறே அவர்களின் மனங்களில் இதற்கான விதைகளைத் தூவ வேண்டும் என்பதே என் எண்ணம்.

ஒரு சாமியார் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த காட்சியை உலகமே பார்த்த பின்பும் நாங்கள் ஆன்மீகத்திற்கான ஆழமான தியானத்தில் இருந்தோம் என்ற அந்த சாமியாரின் தன் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு இன்னும் அவர் போன்ற சாமியார்களின் பின்பே காட்சிகள் இச்சமூகத்தில் நிலவும் வரை கருப்பனுக்கு வேட்டிச் சட்டை, கருப்பன் பொண்டாட்டிக்கு சடைசட்டை, மூத்த மகனுக்கு லுங்கி சட்டை, நடுமகனுக்கு பேண்ட்சட்டை, இளைய மகனுக்கு 7 ஜாக்கி சட்டி, 4 பனியன், 9 ஆம் நம்பர் பேட்டா செருப்பு ஒரு சோடி எனும் பட்டியலை நீட்டும் சாமியார்களும் சோதிடர்களும் வளமோடு நம்முடனே பயணம் செய்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்..

குறிப்பு: 
இப்பதிவில் என் வசதிக்காக சில திரைப்பட வசனங்களை எடுத்துக் கையாண்டுள்ளேன். உதாரணங்களும் நீங்கள் நேரில் கண்ட காட்சிகளை விட இது குறைவு தான்.  ஏமாற்றுகிறார்கள் என்று தெரியாமலேயே சாமியார்கள்./ சோதிடர்களிடம் சென்று வாழ்க்கையைத் தொலைத்தவர்களை எண்ணி என் நண்பர்களும் சற்று சிந்திக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

24 comments:

 1. சமூகத்தின் அவலத்தை சாட்டையடி கொண்டு அடித்திருக்கிறீர்கள் வரவேற்கத்தக்க விசயம் ஆனால் நண்பரே இந்தசவுக்கடியை சாமியார்களுக்கு கொடுப்பதைவிட அவர்களை போற்றும் ஆசாமிகளை அடிப்பதே சாலச்சிறந்தது.
  குறிப்பு-அதுசரி நண்பரே எந்தஊரு சாமியாரு ஆச்சி மட்டன் மசாலா 2 கேட்டாரு ? அவரு விலாசம் தந்தீங்கன்னா ? அவரு விலா எழும்பை முறிக்கலாம்னு இருக்கேன்.

  ReplyDelete
 2. உண்மைதான் சகோ..!!
  நல்ல பகிர்வு..

  ReplyDelete
 3. என்னடா அமெரிக்காவில் கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டி இருக்கிறதே என்று நினைத்த போது மிக எளிதாக சம்பாதித்து வாழ இன்னும் தமிழ்நாட்டில் வழி இருக்கிறதே என்று அறிய முடிந்தது.. பேசாம நானும் சாமியாராக ஆகிவிடலாம என்று யோசனையாக இருக்கிறது... சாமியாரையும் ஜோசியகாரரையும் குற்றம் சொல்லுவது தப்புதான் அவர்கள் பிழைப்புகாக அவர்கள் பொய் சொல்லி வாழ்க்கை நடத்துகிறார்கள் நம்ம அரசியல் தலைவர்களை போல.. அதனால் குற்றம் சொல்லுவதானால் மக்களை தான் குற்றம் சொல்ல வேண்டும்...

  பாண்டியன் உங்கள் தளத்தில் பதிவுகள் ஒரே மாதிரி இல்லாமல பல விஷயங்கள் மாறி மாறி வருகின்றன. அதுவும் நன்றாக .....பாராட்டுகள்

  ReplyDelete
 4. பகுத்தறிவுப் பாசறையில் வந்தோம் என்போர் எல்லாம் மறைவாக மஞ்சள் துண்டுடன் யாகம், பூசை,நல்வாக்கு என அலையும் போது, அன்றாடம் காச்சிகள் நிலை பரிதாபமே!
  இந்த நூற்றாண்டிலும் இந்த அவலம் நம்மை விட்டகலுமோ தெரியாது, ஆனால் நாம் முடிந்தவரை உணர்த்துவோம்.

  ReplyDelete
 5. சாமியார்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை
  ஏமாறுகிறவ்ர்கள் இருக்கும்வரை ஏமாற்றுகிறவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்
  நாம்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
  அருமையான பதிவு நண்பரே

  ReplyDelete
 6. வணக்கம்
  சகோதரன்

  உண்மைதான் நல்ல விழிப்புணர்வுப்பதிவு.

  இந்த இரண்டு விசக்கிருமிகளின் உருவாக்கம் இந்தியாவில்தான் அதிகம் இப்படியான போலி வாழ்க்கை வாழும் சாமியர்களையும் ஜோதிடர்களையும்.. மக்க எதிர்க்க வேண்டும்
  ஏமாறுகிறவ்ர்கள் இருக்கும்வரை ஏமாற்றுகிறவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்
  மக்கள் தொலைக்காட்சி.சன்தொலைக்காட்சி. பார்த்தால் இதுதான் செய்தியாக வரும்...
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. வணக்கம்
  த.ம 3வது வாக்கு

  ReplyDelete
 8. இதுவும் ஒரு தொழில்...! அவ்வளவே...!

  ReplyDelete
 9. அருமை சகோதரரே!
  வேதநாயகம் பிள்ளையின் சர்வசமய சமரசக் கீர்த்தனைகளில் படித்ததாய் நினைவு.....

  “கையிலே பிடிப்பது ஜெபமாலை
  கக்கத்தில் வைப்பதுவோ கன்னக் கோலை
  மெய்யாகப் படிப்பது தர்ம நூலை
  மேலும் மேலும் நமக்குத் துன்மார்க்க வேலை!

  ஒருபெண் வேண்டாமென்று கொள்வோம் சந்நியாசம்
  ஊரிலுள்ள பெண்கள் மீதெல்லாம் நேசம்!
  பருகப் பசியில்லாத போது உபவாசம்!
  பசிவந்தால் ஒருபானை பருக்கையும் நாசம்!

  கடவுளைத் துதிப்பது போலவாய் பாடும்!
  கண்ணுங் கருத்துங்கண்ட இடமெங்கும் ஓடும்!
  திடமாகக் கோயிற்குள்ளே தேகம் போய்க் கூடும்!
  சிந்தனை வெளியிலே திரிந்துதிண் டாடும்!

  ஆன தலையில் வளர்ப்பது ஜடைமுடியே!
  அனுதினமும் கெடுப்ப தாயிரம் குடியே!
  தானம் பிறர் அறியக் கொடுப்பதோர் நொடியே!
  தனித்து வந்தவனுக்குத் தான்தர்ம அடியே!

  அடித்திடும் கொடுமையில் புலிக்குநாம் மேலே!
  ஆகையினால் ஆசனம் புலித்தோலே!
  நடித்திடும் குரங்குநாம் நம்சேட்டையாலே!
  நமக்குள்ள குறைவு பின்புறத்தொரு வாலே!

  (நினைவினின்று எழுதுதலால்ஒரு சில வார்த்தைகள் மாறி இருக்கலாம்)
  நக்கலும் நையாண்டியுமாக இன்னம் நீளும் அந்தப் பாடல்!
  இதற்குப் பொழிப்பு வேண்டுவோர்க்குத் தங்கள் கட்டுரையைக் காணுமாறு இனிக்கூறலாம்.
  சாமியார்தான் பாவம்!
  அவர் ஆழ மான தியானத்தில் இருந்தது தெரியாமல் அவமானப் படுத்திவிட்டார்கள்1
  ரொம்ப நீட்டி விட்டேனோ.... பின்நீட்டம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. “குரங்குக்கு வால்நீண்டால்தான் நல்லா இருக்காது, மயிலுக்குத் தோகை நீண்டால் அழகுதானே?” - ராஜாஜி (பொன்னியின் செல்வன் முன்னுரை) நனறி விஜூ.

   Delete
 10. மூட மதியாளர்களுக்கு சரியான சவுக்கடி..
  போலி ஆன்மீகத்தைப் பரப்பி - சகலரையும் மூடர்களாக ஆக்கும் நிகழ்ச்சிகளை வழங்கியவாறே - கோடிகளில் புரண்டு களிக்கின்றன ஊடகங்கள்!..
  இதில் பாமரர்கள் திருந்துவது எந்நாளோ?..

  //..எத்தனை பெரியார்கள் வந்தாலும் நீங்க திருந்தவே மாட்டீங்கடா எனும் விவேக் சொன்ன திரைப்பட வசனம் தான் எனக்கும் நினைவுக்கு வருகிறது..//

  ஆனாலும் - நகைச்சுவையாளர் விவேக், 24/12/2011 அன்று திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் வழிபட்டார்.

  ReplyDelete
 11. வணக்கம் சகோதரரே.
  //என்னால் முடிந்த வரை இது பற்றிய விழிப்புணர்வை என் மாணவர்களுக்கு ஏற்படுத்துவது என்று முனைந்துள்ளேன் அதுவும் போதிக்கிறோம் என்று தெரியாதவாறே அவர்களின் மனங்களில் இதற்கான விதைகளைத் தூவ வேண்டும் என்பதே என் எண்ணம்.// உயரிய எண்ணம்..வெற்றிபெற வாழ்த்துகள்!

  ReplyDelete
 12. விழிப்புணர்வு பக்கம் அருமை. படித்தால் மட்டும் போதாது... !!!

  ReplyDelete
 13. வணக்கம் தோழரே. தங்களின் பகிர்வு சமுதாயத்திற்குத் தேவையானது. என்னதான் இன்னைக்கு கம்ப்யுட்டர் முன்னாடி உக்காந்துருந்தாலும் ஒரு காலத்துல குரங்காட்டி முன்னாடி உக்காந்து கைதட்டின கூட்டம் தானே என்ற விவேக்கின் காமெடி நினைவுக்கு வருகிறது. நானும என் மாணவர்களுக்கு இதை உணர்த்த முயற்சிக்கிறேன். தொடர்க தொடர்வேன்

  ReplyDelete
 14. படித்தவர்களும்கூட இவ்வாறானவர்களை நம்பி மோசம் போகிறார்களே என்று நினைக்கும்போது வேதனையாக உள்ளது. இவ்வாறான மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட எத்தனை புத்தன் வந்தாலும் முடியாது.

  ReplyDelete
 15. படிக்காதவர்கள் கூட சில நேரம் நல்ல் முடிவை எடுத்துவிடுகிறார்கள் பாண்டியன், இந்தப் படித்தவர்கள்தான் “எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாய்“ சோதிடம், சாமியார், வாஸ்து, சீட்டுக்கம்பெனி என ஏமாந்து அவ்வப்போது தொலைக்காட்சிகளில் கதறுகிறார்கள்... இதைத்தான் ப.கோ.க.சொன்னார் -
  “ஆறறிவில் ஓரறிவு அவுட்டு- மிஞ்சும்
  அஞ்சும்கூட மிஞ்சுமின்னா அதுவும் கூட டவுட்டு” உங்கள் சாட்டையடி தொடர்ந்து வீழட்டும். எருமைத் தோல்களுக்கு உறைக்கட்டும். நன்றி.

  ReplyDelete
 16. நம்மைபோன்ற ஆசிரியர்களின் தலையாய பணி விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்.சமூக அவலங்களை,மூடப் பழக்கவழக்கங்களை,மாணவர்களுக்குத் தெளிவுபடுத்துவது நாம் செய்யவேண்டிய அவசியமான பணி.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 17. எவ்வளவு தான் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினாலும் அவர்கள் இந்த மாதிரி போலி சாமியார்களிடம் போகாமல் இருந்தால் தானே!!!!

  ஆனால், தாங்கள் இந்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துவது, கண்டிப்பாக மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எண்ணுகிறேன்.
  தங்களுடைய இந்த சீரிய பணிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. இந்தப் பதிவை எடுத்து வந்ததுக்கு மிக்க நன்றி! இது பற்றி அனைவருக்குமே போதிப்பது அவசியமே. துன்பம் என்று வந்தவுடன். ஏதாவது பரிகாரம் சொல்லமாட்டர்களா தீர்வு கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு செல்பவர்கள் பாவம் தான் அதை பயன் படுத்தி வாழ்க்கையை கெடுப்பவர்களை என்ன செய்வது. இனி வரும் சமுதாயம் ஆவது இதிலிருந்து விடு பட தெளிவு படுத்துவது அவசியமே மிக்க நன்றி ! மிக்க மகிழ்ச்சி பாண்டியா எடுத்துவரும் ஒவ்வொரு விடயமும் சிறந்தவையே இதனால் இன்னும் இன்னும் தங்கள் மீதுள்ள மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது பாண்டியரே.
  தொடர வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
 19. த.மா ஆறு ...
  நல்ல சமூக பொறுப்புள்ள பதிவு சகோ...
  வாழ்த்துக்கள்
  ஜாக்கி ஜோக் நான் விழுந்து விழுந்து சிரித்த காட்சி..
  http://www.malartharu.org/2014/05/x-men-days-of-future-past.html

  ReplyDelete
 20. வணக்கம்
  இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/12/ar-2011.html?showComment=1419016437833#c8701066033669350162

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 21. அன்புள்ள அய்யா,

  ‘போலி சாமியார்களும் பொல்லாத சோதிடர்களும்’
  போலிகளைக் கண்டு ஏமாறும் மூடர்களுக்கு....
  படிப்பறிவில்லா பாமரர்களுக்கு...
  படித்த முட்டாள்களுக்கு...
  நல்ல சவுக்கடி...
  சோதிடர்களுக்கோ சாவுமணி...
  சாமியார்களுக்கோ நெத்தியடி...
  ஏமாறுகிறவர்கள் இருக்க எத்தனை நித்திகள்...?
  அவர்கள் நத்தம் இருக்க நித்தம் வேண்டும் பெரியார்!

  நன்றி.

  ReplyDelete
 22. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete