அரும்புகள் மலரட்டும்: அரிதான தலைவர் கக்கன் அவர்களின் பிறந்த நாள்

Wednesday, 18 June 2014

அரிதான தலைவர் கக்கன் அவர்களின் பிறந்த நாள்


வணக்கம் நண்பர்களே! இன்று ஜீன் 18 வாழ்ந்து வரலாறு ஆன எளிமையின் உருவமான திரு.கக்கன் அவர்களின் பிறந்த நாள்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தும்பைப்பட்டி எனும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் தோன்றினார் இவர். சேரிப்பகுதியின் கோயிலுக்கு கக்கன் அவர்களின் தந்தை தான் பூசாரி. அந்த கோயிலில் பெருக்கி, சுத்தம் செய்து பூஜையில் ஈடுபடுகிற பழக்கம் கக்கன் அவர்களுக்கு இளம் வயதிலே இருந்தது.

பள்ளிக்கல்வியை படிக்க அமெரிக்க மிஷன் வருடத்திற்கு அவருக்கு பதினெட்டு ரூபாய் உதவித்தொகை தந்தது. அதற்காக மிஷனுக்கு சொந்தமான நிலத்தில் கற்கள் பொறுக்கி,முட்கள் நீக்கி வேலை பார்த்தார். பள்ளி இறுதி தேர்வில் ஆங்கிலத்தில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வியுற்றார். பள்ளிக்கூடத்தில் கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட தொண்டர்கள் உறங்க பள்ளிக்கூட பகுதிக்கு வருகிற பொழுது காந்தியின் போராட்ட முறைகளை அறிந்து கொண்டார் இவர். 1932லேயே சொர்ணம் பார்வதி என்கிற கிறிஸ்துவ பெண்ணை தோழர் ஜீவானந்தம் தலைமையில் திருமணம் செய்து கொண்டார்.

வைத்தியநாத ஐயரின் வழிகாட்டுதலில் எண்ணற்ற போராட்டங்களில் பங்கு கொண்டார். சிறை சென்று கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாகவும் செய்தார். ஒரு முறை சவுக்கால் அடித்தும்,குதிரையின் கீழே படுக்க வைத்தும் கொடுமைப்படுத்துகிற அளவுக்கு தீர்க்கமாக விடுதலைப்போரில் பங்கு கொண்டார். வைத்தியநாத ஐயருடன் இணைந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆலய நுழைவு போராட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தினார்.

1945-ல் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் ஊழியர் மகாநாட்டில் காமராஜரை சந்தித்த பொழுது இருவரும் நெருக்கமானார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்,சட்ட சபை உறுப்பினர்,அரசியல் அமைப்பு குழு உறுப்பினர் என்று பல்வேறு பதவிகள் வகித்த இவர் காமராஜர் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் அமைச்சரவையில் பொறுப்பேற்று கொண்ட துறைகள் என்னென்ன தெரியுமா ? அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, தாழ்த்தப்பட்டோர் நலன்,பொதுப்பணி, உள்துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை ஆகியன !

அரசு வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் போக அனுமதிக்க மாட்டார். மனைவி ஒரு நாள் அரசு ஊழியரை மண்ணெண்ணெய் வாங்கிவர அனுப்பிய பொழுது கடுமையாக கண்டித்தார். அவரின் தம்பி விசுவநாதன் வேலையில்லாமல் இருந்த பொழுது சிபாரிசு செய்ய மறுத்தார் அவர்.

அரசு அதிகாரி லயோலா கல்லூரிக்கு அருகில் அவரின் தம்பிக்கு மனை ஒதுக்கிய பொழுது அந்த கோப்பை வாங்கி கிழித்துப்போட்டு விட்டு ,”எத்தனையோ ஏழைகள் மழைக்கு ஒதுங்க கூட இடமில்லாமல் நோகிறார்கள்..இப்படி ஒரு இடம் தேவையா ?" எனக்கேட்டார்.

விசுவநாதனுக்கு காவல் துறை வேலை கிடைத்த பொழுது ,”இது நேர்மையாக கிடைத்திருந்தாலும் என் சிபாரிசால்தான் கிடைத்தது என்பார்கள் ! இந்த வேலைக்கு இவன் வேண்டாம் “ என்று தடுத்துவிட்டார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் பல்வேறு அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். தாழ்த்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தார்.

அம்மக்களுக்கு வீட்டு வசதி வாரியம் அமைத்து வீடுகள் கட்டிகொடுத்தது ஒரு புறம் என்றால்,லஞ்ச ஒழிப்புதுறையை தமிழகத்தில் கொண்டு வந்ததும் கக்கனே !

கலவரங்களை தடுக்க ரகசிய காவலர் முறையைக்கொண்டு வந்தார். அமைச்சராக இருந்த கக்கன் அரசு விடுதியில் தங்கப்போனார் அங்கே வேறொரு அதிகாரி தங்கியிருந்தார். ஒன்றுமே சொல்லாமல் நண்பரின் வீட்டில் போய் தங்கிக்கொண்டார். அறுபத்தி ஏழு தேர்தலில் கடன் வாங்கி போட்டியிட்டார். தேர்தலில் தோற்றுப்போனார். அவருக்கு நிதி திரட்டி இருபதாயிரம் தந்தார்கள். அதை முழுக்க தேர்தல் செலவுகளை அடைக்க கொடுத்துவிட்டு அரசு வாகனத்தை தொடாமல் அரசு பேருந்துக்கு காத்திருந்து வீட்டுக்கு போனார்.

சொந்த மகளை கான்வென்ட் பள்ளிகளில் சேர்க்காமல் அரசு பள்ளியில் படிக்க வைத்தார் ,”எனக்கு எங்கே அங்கே எல்லாம் படிக்க வைக்க சக்தியிருக்கு ?” என்று கேட்டார். விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்டார் அவர்.

அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் வாடகை வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கே பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

எம்.ஜி.ஆர் மதுரை முத்துவை பார்க்க வந்தவர் செய்தி கேட்டு இவரைக்கண்டு கலங்கினார் ,”நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் !” என்று அவர் கேட்டுக்கொள்ள ,”நீங்கள் பார்க்க வந்ததே போதும் !” என்று இயல்பாக மறுத்தார். யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார்.
சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன அவரின் பிறந்தநாள் இன்று.

நன்றி: விகடன் செய்திகள், பூ.கொ.சரவணன்

குறிப்பு:
இன்றைய தலைவர்கள் பேராசை கொண்டு பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதும், மகனுக்கு ஒரு சீட், மகளுக்கு ஒரு சீட், பேரனுக்கு என நீண்ட பட்டியலோடு காத்திருப்பதையும் கண்கூடாக பார்க்கிறோம். ஆனால் ஒரு தலைவர் இப்படியெல்லாம் வாழ முடியுமா என்பதற்கு கக்கன் அவர்கள் தான் எடுத்துக்காட்டு உண்மையில் இவர் வியப்பின் சரித்திரம்.


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

24 comments:

  1. அருமையான தகவல்கள் சகோ.. நல்ல பணி தொடர்க ...

    கள்ளிப்பட்டி குப்புசாமி என்று நினைக்கிறன் வெறும் பத்து ரூபாய்க்கு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

    கக்கன் பற்றிய பல அறிய தகவல்கள் நிறைந்து இருந்தது.

    பொதுவாக ஒரு வாக்கியம் எழுதவேண்டும் என்றாலும் கூட Kakkan is a great leader. என்று எழுதி இது ஒரு செய்தி வாக்கியம் என்று நடத்துவது உண்டு..

    பலர் காக்கன் என்று படித்து என்னை வேறுப்பேற்றுவார்கள்.

    ஜீவா குறித்தும் நீங்கள் எழுதவேண்டும் சகோ..
    அருமையான பதிவு
    வாக்களித்துவிட்டேன்..

    ReplyDelete
  2. அருமை பாண்டியன். மிக உயர்ந்த ஒரு மனிதரை, தலைவரைப் பற்றிய கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி. அது சரி. அவருடைய பெயருக்கான காரணம் தெரியும்தானே? அதுவே ஒரு பெரும் வரலாற்றுக் குறிப்பு. நாளை மறுநாள் எழுதுகிறேன் (நாளை ஒருநாள் விடுப்பு!) நன்றி. தொடர்க.

    ReplyDelete
  3. பெருமைக்குரிய இம் மனிதரின் பிறந்த நாளை நினைவு கூறும் இப் பகிர்வின் மூலம் அறியாத பல தகவல்களை நாங்களும் அறிந்து பெருமை கொள்ளும் வண்ணம் படைக்கப்பட்ட இப் பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

    ReplyDelete
  4. தனக்கென வாழாத பெரும் பண்பாளர் கக்கன். தனது கடைசி காலத்தில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் படுக்க கட்டிலின்றி தரையில் வைக்கப்பட்டவர். அவரைப் பற்றிய விகடன் தந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்ட சகோதரருக்கு நன்றி!

    Tha.ma.4

    ReplyDelete
  5. இத்தனை பெருமைக்குரியவரைப் பற்றி மிக அருமையான விடயத்தைத் தேடித் தொகுத்துத் தந்துள்ளீர்கள்.

    இதுவரை இவரை நான் அறிந்தே இருக்கவில்லை. உங்களால் இன்று அறியக் கிடைத்தமையிட்டு மிக்க மகிழ்ச்சி சகோதரரே!
    உங்கள் பணியும் பாராட்டப் படவேண்டிய ஒன்றே!

    நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரரே!

    ReplyDelete
  6. இதுவரை அறியாத பல அரிய தகவல்களை
    தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

  7. தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப்போய், தி. மு. க பதவிக்கு வந்த சில மாதங்களே இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    ஏதோ ஒரு வேலை நிமித்தமாக எங்கள் எல்.ஐ. சி. நிறுவனத்திற்கு வந்திருந்தேன். வேலை முடிந்ததும், மவுன்ட் ரோட் ( அண்ணா சாலையின் அந்தக் காலத்துபெயர்) பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தேன். அருகில் ஒருவர் வெள்ளை வேட்டியும் வெள்ளை சட்டையும் அணிந்து இருந்தவரை அடிக்கடி பார்த்தேன். அவரது முகம் எனக்கு மிகவும் பரிச்சயமாக இருந்தது. அவருடன் யாரும் இல்லை.

    அவரிடம் போய், நீங்கள் யார் ? எங்கோ பார்த்தாற்போல் இருக்கிறது என்று இன்று கேட்பது போன்ற தைரியம் அன்று இல்லை.

    ஒரு பஸ் வந்தது. அதில் அவர் ஏறிச் சென்றார்.

    அவர் சென்ற பின்னும் அந்த மனிதரின் எளிமைத் தோற்றத்தை என்னால் மறக்க இயலவில்லை. துணிந்து பக்கத்தில் இருந்த இன்னொருவரிடம் அவர் யார் எனக்கேட்டேன்.

    அவர் தான் மந்திரியாக இருந்த கக்கன் என்றார்.

    ஐம்பது வருடங்கள் ஆகி இருக்கலாம். இது நடந்து.

    இன்னமும் என்னால் மறக்க இயலவில்லை.


    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. மனசை வலிக்கிறது

      அவரைக் கண்ணால் பார்த்ததே உங்களின் பிறவியின் பெரும் பயன்களில் ஒன்று ...
      வாழ்த்துக்கள் அய்யா

      Delete
  8. வணக்கம் சகோதரரே.
    அருமையான ஒரு தலைவரைப் பற்றிய பதிவு. இதுபோல மேலும் எழுதுங்கள்.
    மதுவிலக்கிற்கு ஒரு துறை இருந்திருக்கிறது...இன்று?
    த.ம.7

    ReplyDelete
  9. மக்கள் மறந்து போனாலும் இறந்தும் வாழ்கின்ற மாமனிதர் கக்கன் !
    வாழ்க!

    ReplyDelete
  10. பல தகவல்கள் அறியாதவை... சிறப்பான கட்டுரை... நன்றி சகோதரா...

    ReplyDelete
  11. மிகச் சிறந்த தியாக சீலரைப் பற்றிய பதிவு..
    மாமனிதர் கக்கன் போன்ற நல்லோர்கள் இந்த மண்ணை ஆட்சி செய்ததனால் தான் -இன்னும் இது வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

    ReplyDelete
  12. தங்களின் இந்த பதிவால், எளிமையான ஒரு தலைவரைப் பற்றி தெரிந்து கொண்டேன்.

    நீங்கள் இறுதியில் சொன்னது போல், இப்போதிருக்கும் மானங்கெட்ட தலைவர்கள் எல்லாம் இவரை மாதிரியுள்ள தலைவர்களைப் பின்பற்றமாட்டார்களா என்ற ஏக்கம் தான் வருகிறது.

    ReplyDelete
  13. உள்ளத்தை உருக்கும் தகவல்! வாழ்க கக்கன்!

    ReplyDelete
  14. காணக்கிடைக்காத செய்தி பகிர்வுக்கு நன்றி சகோ.

    சகோ எப்படி இருக்கிங்க.. திருமணஏற்பாடுகள் எவ்விதம் உள்ளது.. இல்லத்தில் அனைவரையும் கேட்டதாக சொல்லவும்.

    ReplyDelete

  15. வாழும் போதும் இறக்கின்ற சிலருள்ளே
    இறந்தாலும் வாழுகின்ற இதயங்கள் உண்டு !

    நல்ல பகிர்வு

    ReplyDelete
  16. சுயநலம் மிக்க தலைவர்கள் வாழும் இந்நாளில் கக்கன் போன்றோரின் தியாகங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது! இன்று இவரது பிறந்தநாளைக்கூட யாரும் கண்டுகொள்ளாதது வருத்தமான ஒன்று!

    ReplyDelete
  17. வணக்கம்
    சகோதரன்.

    சமுகத்தின் விழிகளை திறந்த பெருமகன் பற்றிய தகவல் அறியத்தந்தமைக்கு வாழ்த்துக்கள். இவரைப்பற்றி நான் அறிந்ததில்லை தங்களின் பதிவின் வழி அறிந்தேன் தேடலுக்கு பாராட்டுக்கள் சகோதரன்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  18. அரசியலும்,அரசியல்வாதியும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அரிச்சுவடியாய் விளங்கிய கக்கனை பற்றிய அருமையான பதிவு

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  19. உங்கள் கட்டுரைக்கு வலு சேர்ப்பதாய் இருக்கிறது சுப்பு சார் கருத்து. எனக்கு மிகவும் பிடித்த தலைவர், நான் முன் ஒரு முறை சொன்னது போல நம் தெருவும் பெயரே இவரால் தானே, சரியான நேரத்தில் சரியான பதிவு சகோ! வாழ்த்துகள் !!

    ReplyDelete
  20. சிறந்த அறிஞரைச் சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு எனது பாராட்டுகள்

    ReplyDelete
  21. காலம் நமக்கு தந்த பொக்கீஷம் அய்யா
    கக்கன் அவர்களை வணங்குகிறேன்.

    ReplyDelete
  22. காலம் தந்த அரும் பொக்கிஷம் அய்யா
    கக்கன் அவர்களை வணங்குகிறேன்.

    ReplyDelete