அரும்புகள் மலரட்டும்: இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டவர்கள். அதிகாரம் செய்ய அல்ல!

Wednesday, 8 April 2015

இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டவர்கள். அதிகாரம் செய்ய அல்ல!

மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த பிரதிநிதி ஆளுகிறார் எனும் சொல் கொஞ்சமும் பொருத்தமானதாக தோன்றவில்லை எனக்கு. மக்களிடம் வாக்கு கேட்கும் போது எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று காலில் விழாத குறையாக கெஞ்சியும் (சில நேரங்களில் காலிலும் விழுகிறார்கள்).

உங்கள் வீட்டு பிள்ளைக்கு வாக்களியுங்கள், மக்களுக்கு சேவை செய்ய என்னைத் தேர்ந்தெடுங்கள், மக்கள் தொண்டன் என்றெல்லாம் சொல்லி வாக்கு வாங்கியவர்கள் வெற்றி பெற்றதும் ஆளும் கட்சி, இக்கட்சி இந்தியாவை ஆளுகிறது எனும் வார்த்தை இடிக்கிறது தானே நண்பர்களே!

அரசியல்வாதிகள் நம்மை ஆளுகிறார்கள் என்பது தான் தற்சமயம் உண்மையாக இருப்பது வேடிக்கை தான். ஆனால் மக்களால் தேர்ந்தெடுத்த பிரதிநிதி மக்களுக்கு சேவகம் செய்கிறார் என்பது தான் உண்மைப் பொருள். எவரும் நாங்கள் மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறோம் என்று உண்மையை உணர்ந்து சொல்வதில்லை. பேச்சுக்காக வேண்டுமானால் சேவகன் நாங்கள் என்று புகழ் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய அரசியல்வாதிகள் பலருக்கும் நாம் மக்களை ஆளுகிறோம் என்ற நினைப்பு தான் இருக்கிறது. மக்கள் வாக்களித்து கொடுத்த வாய்ப்பு இது என்பதை வசதியாக இங்கு பலர் மறந்து விடுகிறார்கள். வாக்கு வாங்க மட்டும் வாசல் வந்த அரசியல்வாதிகள் வெற்றி பெற்றதும் ஏணிப்படியை எட்டி உதைத்து விடுகிறார்கள். ஆனாலும் ஏற்றத்துக்கு அவர்கள் சென்று விடுவது தான் இங்குள்ள சனநாயக முரண்.

தனக்கு கிடைத்திருக்கும் அதிகாரம் மக்களுக்கு தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டுமென்பதாக தான் இருக்க வேண்டும். எளியவனை மிரட்டி அவனின் உடைமைகளைப் பிடிங்கிக் கொள்வது, பொது சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றிக் கொள்வது எனும் அநியாயங்கள் இன்றைய அரசியல் சூழலில் அழகாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்பது கண்கூடு.

இம்மனப்பாங்கு அரசியல்வாதிகளுக்கு மட்டுமில்லை. அதிகாரத்தில் இருக்கும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் இருப்பது தான் கவனிக்கத் தகுந்தது. வங்கி முதல் பள்ளி தலைமை ஆசிரியர் வரை இம்மனப்பாங்கு தொடர்கிறது. தன்னை சர்வ பலம் படைத்த நபராக நினைத்துக் கொண்டு தன்னிடம் சேவை கேட்டு வரும் வாடிக்கையாளர்களை/ நபர்களை ஏளனப் பார்வை பார்ப்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.  வாடிக்கையாளர்கள் இல்லையென்றால் வங்கி ஏது? அவர்கள் இருப்பதனால் தான் ஒரு வங்கிக்கு மேலாளர் என்பது சம்பந்தப்பட்டவர்கள் புத்திக்கு வசப்படவில்லை என்பது வேதனை.

நான் உதாரணத்திற்கு வங்கி மேலாளரை எடுத்துக் கொண்டேன்.  அனைத்துத் துறைகளில் இப்பட்ட மனப்பாங்கு படைத்த அலுவலர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்களே ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இவர்களின் மனங்களில் மாற்றம் வர வேண்டும். மக்களுக்கான சேவகனாக தன்னை உணர வேண்டும். தன்னை நாடி வருபவர்கள் நாடி அறிந்து விதிமுறைகளுக்கு உட்பட்டு உதவ வேண்டும். அதை விடுத்து அவர்களை ஏளனமாக பார்க்கக் கூடாது என்பது தான் எனது கருத்து.

மக்களால் தேர்ந்தெடுத்த பிரதிநிதி மக்களை ஆளுகிறார் எனும் வார்த்தை எப்படி பொருத்தமானதாக இருக்காதோ அது போல அதிகாரம் படைத்த அலுவலர்கள் தன்னை நாடி வருபவர்களை இரவல் வாங்க வந்தவனாக பாவித்து அவர்களைக் கடிந்து கொள்வதும், அவமதிப்பதும் பொருத்தமானதாக இருக்காது.

குறைகளைச் சொல்லி விட்டோம் நிறைகளைப் பாராட்டுவதும் நமது கடமை. இன்றைய தலைமுறையினர் அரசியலைச் சாக்கடையாக நினைக்கும் சூழலில் அந்த சாக்கடையில் (அரசியலில்) எதிர் நீச்சல் போட்டு தான் அணிந்திருக்கும் ஆடைக்குள் எந்த வித கறையும் குடியேறாமல் பார்த்துக் கொள்ளும் நல்ல அரசியல்வாதிகள் இருப்பதனால் தான் சனநாயகத்தின் மீதான நம் பார்வை இன்னும் மங்கிப் போகாமல் இருக்கிறது.

 அவர்களுக்கு நமது பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும். அனைத்துத் துறைகளில் நல்ல அலுவலர்கள் இன்னும் இருப்பதனால் தான் மக்கள் மனு கொடுத்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை ஏற்படுத்திய அனைத்து மக்கள் சேவகர்களுக்கும் நமது வாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடரட்டும் நல்லவர்களின் நற்பணி.






கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

5 comments:

  1. வணக்கம்
    சகோ

    விரிவான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றித.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மக்களுக்கு சேவை செய்வது என்பதை அரசியல் வாதிகள் மறந்து பல காலம் ஆகிவிட்டது. பணம் சம்பாதிக்கவே அரசியலுக்கு வருகிறார்கள்.சாதரண வார்டு உறுப்பினர்கூட ஐந்து ஆண்டுகளில் கோடிக்கணக்காக சொத்து சேர்த்து விடுகிறார்கள்.நேர்மை நாணயம் என்பது அவர்கள் மறந்து போனவை . நல்ல கட்டுரை பாண்டியன்

    ReplyDelete
  3. ஆங்காங்கு சில நல்லவர்கள் இருப்பதால்தான் உலகம் இயங்குகிறது. நல்லவர்களின் எண்ணிக்கை பெருகும் நாளை எதிர்பார்ப்போம்.

    ReplyDelete
  4. சுயநலமே பிரதானமாக இருக்கும் போது...

    மாற்றம் வர வேண்டும்...

    ReplyDelete