அரும்புகள் மலரட்டும்: முகேஷ் சிங் மட்டுமா குற்றவாளி...?

Saturday, 7 March 2015

முகேஷ் சிங் மட்டுமா குற்றவாளி...?


நிர்பயா வழக்கில், ‘பாலியல் பலாத்காரத்துக்குப் பெண்கள்தான் பொறுப்பு. பெண்கள் கண்ணியமான ஆடை அணிய வேண்டும். இரவு ஒன்பது மணிக்கு மேல் வெளியில் செல்லும் பெண் ஒழுக்கமானவள் அல்ல' என குற்றவாளி முகேஷ் சிங் தெரிவித்துள்ள கருத்துகள் கடும் கண்டனங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு தனது நண்பருடன் சினிமாவுக்கு சென்றுவிட்டு, இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டார். 13 நாட்கள் சிகிச்சைக்குப் பின் பரிதாபமாக உயிரிழந்தார் நிர்பயா.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக ‘இந்தியாவின் மகள்' என்ற தலைப்பில் ஆவணப்படம் எடுக்கப்பட்டது. இதில் நிர்பயா பலாத்கார வழக்கில் மரண தண்டனை பெற்ற குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டியும் இடம் பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே, இந்த ஆவணப்படத்தை வெளியிட இந்தியா தடை விதித்தது. ஆனால், தடையை மீறி முன்கூட்டியே வெளிநாடுகளில் இந்த ஆவணப்படத்தை வெளியிட்டது பிபிசி. இது தொடர்பாக பிபிசிக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த ஆவணப்படத்தில் பலாத்காரத்திற்கு பெண்கள் தான் பொறுப்பு என்ற தொனியில் பேசியுள்ள தூக்கு தண்டனைக் கைதி முகேஷின் பேட்டிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன

நம் முன் நிற்கும் கேள்வி...
 தண்டனைகள் என்பது குற்றவாளியின் மனம் மாற வழி வகுக்கிறதா, இல்லையா என்பதை இந்த பேட்டி கேள்வியாக நம் முன் வைக்கிறது. மேலும், இது முகேஷின் கருத்து மட்டும் தானா, பெரும்பான்மையான ஆண்களிடம், பெண்கள் குறித்த மதிப்பீடு இவ்வாறு தானே உள்ளது என வேதனைப்பட வைக்கிறது.


மனம் மாறாத குற்றவாளி...
முகேஷ் சிங் நிர்பயாவைப் பலாத்காரம் செய்த போது என்ன மனநிலையில் இருந்தாரோ, தொடர்ந்து அதே நிலையில் தனது தவறை உணராதவராகவே உள்ளார் என்பதையும் இந்த பேட்டி தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

கடவுளாலும் தடுக்க முடியாது...
நிர்பயா படுகொலைக்குப் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் நம் இந்திய அரசியல்வாதிகள் பலர், முகேஷை விட மோசமாக பேசியதை நம்மால் மறக்க முடியாது. "பாலியல் பலாத்காரச் சம்பவங்களைக் கடவுளாலும் தடுக்கமுடியாது" என்றார் உத்திரப்பிரதேச முன்னாள் ஆளுநர் அஜிஷ் குரேஸி.

கூகுளில் தேடினால்...
" 21 கோடி மக்கள் தொகை கொண்ட உத்திரப்பிரதேசத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், அது மிகக்குறைவான நிகழ்வுதான்" என்றார் முலாயம் சிங் யாதவ். "உத்திரப் பிரதேசத்தில் மட்டுமல்ல, கூகுளில் தேடினால் மற்ற இடங்களிலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடப்பதை அறியலாம்" என இதற்கு பதில் தந்தார் அகிலேஷ் யாதவ்.

மற்ற மாநிலங்களை ஒப்பிட்டால்...
மகாராஷ்டிரா (அப்போதைய) உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டில் கூறுகையில், "வீட்டுக்கு வீடு ஒரு போலீஸ்காரரைப் பாதுகாப்புக்கு போட்டாலும் பாலியல் பலாத்காரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாகவே உள்ளன'' என்றார்.


பூமி உள்ளவரை...
"பூமி உள்ள வரை பாலியல் பலாத்காரம் நடந்து கொண்டு தான் இருக்கும்" - திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் தீபக் ஹால்தார். ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களின் மனைவிமார்களைப் பாலியல் பலாத்காரம் செய்ய நமது கட்சித் தொண்டர்களை அனுப்புவேன்' என்றார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி தபஸ் பால்

பதிலுக்கு பதில்...
‘கர்நாடக முதல்வர் சித்தராமையா மகளை யாராவது பாலியல் பலாத்காரம் செய்திருந்தால் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்திருப்பார்களா?" எனக் கேவலமாக கேள்வி எழுப்பினார் கர்நாடக மேலவை எதிர்க்கட்சித்தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா (பாரதிய ஜனதா). ‘நான் பாஜக தலைவர் ஈஸ்வரப்பாவின் மனைவியை பலாத்காரம் செய்தால் என்ன நடக்கும்?' என அதற்கு அதை விட படு கேவலமாக, நாராசமாக பதில் கேள்வி கேட்டார் கர்நாடகா மூத்த காங்கிரஸ் தலைவர் இவான் டிசோசா

செல்போன் தான் காரணம்...
'பாலியல் பலாத்காரங்களுக்கு செல்போன்கள்தான் காரணம். எனவே பள்ளி, கல்லூரிகளில் பெண்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும்' என கர்நாடக அரசுக்கு எம்.எல்.ஏ.க்கள் குழு பரிந்துரை செய்தது. ‘செல்போன், ஆபாச உடை, டிவி, மேற்கத்திய கலாசாரம் ஆகியவைதான் பெண்கள் மீதான பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பதற்கு காரணம்' என உத்தரபிரதேச போலீசார் அறிக்கை வெளியிட்டனர்.

பெண்ணை தூக்கிலிட வேண்டும்... பெண்கள், சிலர் தங்களை தொட்டால் புகார் அளிக்கின்றனர். சிலவேளையில் தொடாவிட்டால் கூட புகார் அளிக்கின்றனர். பிறகு இது பிரச்சினையாக எழுகிறது. பலாத்காரம் பெண்ணின் சம்மதத்துடனோ அல்லது சம்மதம் இல்லாமலோ எவ்வாறு நடந்தாலும் அது தண்டிக்கப்பட வேண்டும். ஏதாவது ஒரு பெண் திருமணம் ஆகியோ அல்லது ஆகாமலோ வேற்று ஆணுடன் உறவு வைத்தால் அப்பெண் தூக்கிலிடப்பட வேண்டும்" - சமாஜ்வாடி கட்சித் தலைவர்களில் ஒருவரான அபு ஆஸ்மி.

கிரகங்கள் தான் காரணம்...
"யாரும் வேண்டுமென்றே கற்பழிப்பதில்லை. வஞ்சகத்தால்தான் பலாத்காரம் நடந்து விடுகிறது'' எனத் சத்தீஷ்கர் மாநில உள்துறை அமைச்சர் ராம்சேவக் பாய்க்ரா. (பாரதிய ஜனதா கட்சி). ‘‘நாடு முழுவதும் பலாத்கார சம்பவங்கள் பெருகுவதற்கு காரணம், கிரகங்களின் மோசமான நிலைதான்'' எனத் தெரிவித்தார் சத்தீஷ்கர் மாநில முன்னாள் அமைச்சர் நாங்கி ராம் கன்வார் (பாரதிய ஜனதா கட்சி)

ஆடைகள், நடத்தை... "நிர்பயா உண்மையிலேயே இரவு 11 மணிக்கு நண்பருடன் படம் பார்க்கச் சென்றாரா? சக்தி மில் சம்பவத்தை எடுத்துக்கொண்டால், பெண் பத்திரிகையாளர் 6 மணிக்கு அதுபோன்ற தனிமையான இடத்திற்கு ஏன் சென்றார்? எனவே, பெண்களின் ஆடைகள், நடத்தை மற்றும் அவர்கள் பொருத்தமற்ற இடங்களுக்கு செல்வதாலும் பாலியல் பலாத்காரங்கள் நடக்கின்றன" என்றார் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகளிர் உரிமை ஆணைய உறுப்பினருமான ஆஷா மிர்கே.

சில நேரங்களில் சரியே...
‘‘பலாத்காரம் என்பது சில நேரங்களில் சரியானது. சிலநேரங்களில் தவறானது" என்றார் மத்தியப் பிரதேச பா.ஜ.க. அமைச்சர் பாபுலால் கவுர்.

என்னத்தச் சொல்ல...
மக்களின் பிரதிநிதியாக பணியாற்ற வேண்டிய அரசியல் தலைவர்களே இவ்வாறு கருத்துக்கள் தெரிவித்திருப்பது வேதனை தரும் ஒன்றே. பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்திலேயே தாங்கள் இருப்பதாக பல ஆண்கள் நினைத்துக் கொள்கின்றனர். அதன் வெளிப்பாடு தான் மேற்சொன்னக் கருத்துக்கள்.

வீட்டிலேயே தொடங்கும் குற்றங்கள்...
வீடு எனும் பாதுகாப்பான கூண்டிற்குள் இருப்பது தான் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது அவர்களின் கண்ணோட்டம். ஆனால், பெரும்பாலான வன்கொடுமைகள் பெண்களுக்கு வீட்டில் இருந்து தான் தொடங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சமூகத்தின் பிம்பம்...
முகேஷின் கருத்தை சமூகத்தின் பிரதிபலிப்பாகவே கருதலாம். இது பெண்கள் குறித்து நம் சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பம்.

மறைமுக மிரட்டல்...
கொடுமைகளைப் பழகிக் கொள்ள வேண்டும், அதைத் தட்டிக் கேட்க முற்பட்டால் விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும் என சமூகத்தின் சார்பில் பெண்களை மறைமுகமாக மிரட்டுவதாக இருக்கிறது முகேஷின் இந்த பேட்டி.

முகேஷை திட்டினால் போதுமா...?
ஆனபோதும், இதை விட பலசமயங்களில் மோசமான கருத்துகளைச் சொல்லும் நம் அரசியல்வாதிகள், சமூகப் பிரபலங்கள், மதத் தலைவர்கள், அடிப்படைவாதிகள், சினிமாக்கள் இவர்களைக் குறித்துப் பேசாமல் நாம் முகேஷ் சிங்கை மட்டும் திட்டிக் கொண்டிருப்பதால் ஒரு மாற்றமும் வந்து விடப் போவதில்லை. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது !

நன்றி : ஒன் இந்தியா


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!


5 comments:

  1. அன்புள்ள அய்யா,

    முகேஷ் சிங் மட்டுமா குற்றவாளி...? பாலியல் பலாத்காரத்துக்குப் யார் பொறுப்பு? குற்றவாளியிலிருந்து... அரசியல்வாதிகள் வரை யாரும் தங்களின் கருத்தை மாற்றிக் கொள்ளாமல் பெண்களையே காரணம் என்று கூறுவது கண்டிக்கத் தக்கது.
    சமூகத்தின் பிம்பம்...
    முகேஷின் கருத்தை சமூகத்தின் பிரதிபலிப்பாகவே கருதலாம். இது பெண்கள் குறித்து நம் சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பம்.

    நல்ல பகிர்விற்கு நன்றி.
    த.ம.2

    ReplyDelete
  2. இத்தனை நாள் கழித்து,அட்டகாசமான ஒரு கருத்தோடு வந்திருகிறீர்கள் சகோ! மிக சரியான பார்வை. தெளிவான கேள்விகள்! நான் நினைத்தத்தை எல்லாம் நீங்கள் கேட்டுவிட்டீர்கள் சகோ, மனம் கனக்கிறது.

    ReplyDelete
  3. ம்ம்ம் லேட்டா வந்தாலும்...லேட்டஸ்டா வருவோம் அப்படினு நச்சுனு ஒரு நல்ல பதிவோடு!! அருமையான கேள்விகள்.....

    பெண்களைப் பற்றி இந்த சமூகம் மட்டுமா வீட்டிலும் தான் இப்படித்தானே வளர்க்கின்ரார்கள்.....தைரியமற்றவர்களாக.....நல்லதொரு பதிவு நண்பரெ!

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு.

    சமுதாயத்தில் இப்படி எத்தனை எத்தனை முகேஷ்கள்.....

    ReplyDelete