அரும்புகள் மலரட்டும்: சுற்றுச்சூழலைக் காப்போம்! சுகமாய் வாழ்வோம்!

Thursday, 1 October 2015

சுற்றுச்சூழலைக் காப்போம்! சுகமாய் வாழ்வோம்!


அறிவியல் யுகத்தில் காலச்சக்கரம் கடுமையாகச் சுழன்றுக் கொண்டிருக்கிறது, உலகம் உள்ளங்கையில் சுருங்கியிருக்கிறது. கூடவே நம் சூழலும் பாலாகியிருக்கிறது. நீர், நிலம், காற்று என அனைத்தையும் மாசடையச் செய்திருக்கிற பெருமை நம்மையே சாரும். உலகம் வெப்பத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது. கமழி அடுக்கு(ஓசோன் மண்டலம்)மெல்லியதாகிப் போகியிருக்கிறது, சுத்தமான காற்றுக்கு ஆக்ஸிஜன் செண்டருக்கு அலைந்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம், துருவப்பணி பாறைகளெல்லாம் உருகி கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது.நெகிழியைப் பயன்படுத்தி பற்பல நோய்களோடு இலவசமாக இணைந்திருக்கிறோம். இயற்கையைக் காக்க தவறியிருக்கிறோம். இனி மேலும் விழித்துக் கொள்ளா விட்டால் அடுத்த தலைமுறை தான் என்னவாகுவது?.

பருவகால மாற்றத்திற்கு 99 சதவீதம் மனிதச் செயல்பாடுகள் தான் என்று ஆணித்தரமாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. பசுமைப் புரட்சி தொடங்கி ஒரு பக்கம் தன்னிறைவைப் பெற்றுத் தந்தாலும் மறுபக்கம் சுற்றுச்சூழலில் மாசுக்களை உற்பத்தி செய்திருக்கின்றன. கரியமில வாயுக்கள் அதிகமாக கலப்பதினால் தான் வளிமண்டலம் வெப்பமாகியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் கடலில் பவளப்பாறைகள் முதற்கொண்டு அழிந்திருக்கின்றன. கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது.

பிரிட்டீஸ் அண்டார்டிக் சர்வே நிறுவனம் ஆய்வு நடத்தியதில் காற்றில் கார்பன் - டை -ஆக்சைடு அளவு உயரும் போது அண்டார்டிக் கடல் பகுதியில் 6 டிகிரி அளவுக்கு கூடுதலாக பனிக்கட்டிகள் உருகுவது தெரிய வந்துள்ளது. இதனால் கடல்நீரின் மட்டம் 6 மீட்டர் உயரும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அவ்வாறு கடல் நீர் அளவு உயரும் போது கடற்கரை நகரங்களான லண்டன், நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்-கோ உள்ளிட்ட நகரங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளது.

சர்வதேச அரசியல் நாடகம்
உலக வெப்பமாயதலில் வளர்ந்த நாடுகளின் பங்கு தான் அதிகமாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் உலக மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் இருக்கிறார்கள். ஆனால் உலகை மாசுபடுத்துவதில் அவர்களின் பங்கு 50 சதவீதமாக இருக்கிறது. பெருமளவு கரியமில வாயுக்களை அவர்களது தொழிற்சாலைகளே உமிழ்கின்றன. உலகம் வெப்பமாகுவதைத் தடுக்க வளர்ந்த நாடுகள் கிளீன் நுட்பத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால் வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இதில் சர்வதேச அரசியல் அரங்கேறுகிறது. சுற்றுச்சூழல் ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் வளர்ந்த நாடுகள் தனது உற்பத்தி பாதித்து பொருளாதாரம் பாதிக்கும் என்பதால் அவ்வொப்பந்தைகளைப் பெயரளவில் வைத்துக் கொள்கிறார்கள்.

மாற்று வழி தேவை
உலகம் வெப்பமயமாதலில் தொழிற்சாலை, வாகனப்புகை தான் அதிக பங்கு வகிக்கிறது. அவைகளிலிருந்து வெளிவரும் வாயுக்களே வெப்பத்தை அதிகரிக்கின்றன. வெளியேறும் வாயுக்களைக் கட்டுப்படுத்தவும், வடிகட்டவும் புதிய தொழில்நுட்பங்கள் கண்டறியலாம். இயற்கை விவசாயம், தொழில் நுட்பங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம். கார்பன் மோனாக்சைடை உறிஞ்சிக் கொள்ளும் கேரட் வகைகளை அதிகமாக பயிரடலாம். ஜெர்மனியில் நடைமுறையில் இருக்கும் வாயு குளிர்விப்பான் குளங்களை நாமும் அமைக்கலாம்.

நெகிழி எனும் அரக்கன்
அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் நெகிழியின் சராசரி பயன்பாட்டு நேரம் வெறும் 12 நிமிடங்கள். ஆனால் அதன் வாழ்நாள் 1000 ஆண்டுகள் என்பதை பிரமிக்க வைக்கிறது, அவைகளைப் பயன்படுத்தினாலும் தீங்கு எரித்தாலும் தீங்கு. சுவாசக் கோளாறு, உணவு மண்டல பாதிப்பு, ஒவ்வாமை இவ்வாறாக புற்றுநோய் வரை இவை தோற்றுவிக்கும் நோய்கள் ஏராளம்.

நெகிழியை மக்களாகிய நாம் பயன்படுத்துவதை அறவே நிறுத்த வேண்டும். அதற்கு மாற்றாக துணிப்பைகளைப் பயன்படுத்தலாம். நெகிழி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை மூடி விட்டு அதற்கு மாற்றான வேறு தொழில்களில் அவர்களை ஈடுபடுத்துவது அரசின் கடமை.

ஓசோன் படலம் பாதிப்பு
புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் ஓசோன் மண்டலம் மெல்லியதாகிக் கொண்டிருப்பதால் புவி வழக்கத்துக்கு மாறான வெப்பத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. புற ஊதாக்கதிர்கள் உட்புகுவதால் தோல் புற்று நோய், கண்ணில் சதை வளர்தல், தோல் சுருக்கம், உடலில் எதிர்ப்பு சக்தி குறைதல் என்று பல நோய்களில் வருகிறது, கடல்வாழ் உயிரனங்களில் ஒரு செல் உயிரனங்கள் செத்து மடிவதற்கு புற ஊதாக்கதிர்களே காரணமாகிறது

குளிர்சாதன பெட்டியில் பயன்படுத்தும் குளோரோ ப்ளோரோ கார்பன் தான் ஓசோன் பாதிப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு ஈடாக சுற்றுச்சூழலைப் பாதிக்காத வேறு பொருளை நாம் குளிர்விப்பானாக பயன்படுத்த கண்டறிய வேண்டும். இதற்கு இந்திய விஞ்ஞானிகளை,ஊக்குவிக்க வேண்டும். பசுமை வீடுகள் கட்டுதல், அளவாக இருசக்கர வண்டிகளைப் பயன்படுத்துதல், சிக்னல்களில் வாகனங்களை புகைகளைக் கக்க விடாமல் நிறுத்தி வைத்தல்

நவீன விவசாயம்
இன்றைய நவீன விவசாய முறை முற்றிலும் மண்வளத்தைக் கெடுப்பதாகவும், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தவதாகவும் தான் இருக்கிறது. இரசாயண பூச்சிக் கொள்ளி மருந்துகள், தெளிப்பான்கள் என அனைத்தும் இயற்கையைப் பாழாக்குவதாகவும் உண்ணும் உயிரிகளுக்கு தீங்கு விளைப்பதாகவும் இருக்கிறது. இதற்கு நாம் இயற்கை விவசாய முறைக்கே திரும்ப வேண்டியிருக்கிறது. நிலத்தின் வளத்தை பாதிக்காத பயிர்சுழற்சி முறைகளும் அவசியமாகிறது, அதிக நிலச்சத்துக்களை உறிஞ்சும் பயிர்களை சுழற்சி முறையில் பயிரிட வேண்டும்.

சமூக அமைப்புகளை ஒருங்கிணைத்தல்
சுற்றுச்சூழல் விழி்ப்புணர்வை அனைத்து அமைப்புகளும் மக்களிடம் எடுத்துச் செல்ல ஏதுவாக அரசு சார் மற்றும் சாரா நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக தளங்கள், மீடியாக்கள் என அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைப்பது தலையாய பணியாக இருக்கிறது.

கேரளாவில் கழிவறைகள் கட்டவும், சுற்றுசூழலைப் பாதுகாக்கவும் மாதா அமிர்தானந்தமாயி அவர்கள் 100 கோடியை நன்கொடையை அவ்வரசுக்கு அளித்திருக்கிறார்கள். அது போலும் நாட்டிலுள்ள தொழில் அதிபர்கள் முதல் கொண்டு் பணம் படைத்தவர்களை நாடி நன்கொடை பெற்று சுற்றுச்சூழலைக் காக்க பெருமளவில் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துவது அரசின் கடமை.

தற்போது இருக்கிற தார் மற்றும் சிமெண்ட் சாலைகளை விடுத்து மழைநீரை அப்படியே உறிஞ்சிக் கொள்ளும் பிளாஸ்டிக் சாலைகளாக மாற்றலாம். இதனால் நிலத்தடி நீர் பல மடங்கு அதிகரிக்கலாம். நெதர்லாந்தில் ரோட்டர்டம் எனும் நகரில் பிளாஸ்டிக் கான்க்ரிட் சாலைகள் அமைத்து நிலத்தடி நீரை உயர்த்தும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தும் வகையிலான பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்பட்ட முதல் நகரம் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை விளக்கும் குறும்படங்கள் தயாரிக்க ரூ.5 கோடி நிதி வழங்கப்பட இருப்பது ஆரோக்கியமான விசயம். இதனை மிகச் சரியாக பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பது இயற்கை ஆர்வலர்கள் கடமையாக கருதிட வேண்டும்

அனைத்துக்கும் ஆதாரம் மழை

நிலம், நீர்,காற்று மாசுபாடுகள் தவிர்ப்பதற்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளில் ஒன்று மரம் வளர்த்தலாகும். காற்றின் கரியமில வாயுக்களின் தாக்கத்தைக் குறைக்க, இயற்கை விவசாயத்தை மேம்படுத்த என அனைத்து முயற்சிகளுக்கும் மழையே முதன்மையான காரணியாகும் என்பதை அனைவரும் உணர்ந்து மரம் மற்றும் காடுகள் வளர்ப்பது முக்கியமானதாகும்.

தமிழகத்தில் ஆயிரம் கிராமங்கள் ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் அறிவித்திருப்பது மகிழ்ச்சி. இதனை எந்தவித நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் செய்து முடிப்பதில் தான் வெற்றி இருக்கிறது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் மாதிரிக் காடுகள் அமைத்து காடுகளால் ஏற்படும் நன்மையை உணர்த்தி அவர்களையும் மரம் நட வழிகாட்ட வேண்டும். பூங்காக்களில் இருந்த குரோட்டஸ்களைப் பார்த்து தான் வீட்டில் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால் மாதிரிக் காடுகள் பார்த்தும் நம்மவர்கள் மரம் வளர்ப்பார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது.

1984 லிருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் இச்சட்டங்கள் அமலாக்கப்பட்டது மிகக் குறைவே என்பது இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீதான விழிப்புணர்வு இன்மையைத் தான் இச்செயல் காட்டுகிறது, இனிமேலும் இதே நிலை நீடிக்காமல் சூழலை மாசுபடுத்துவோர் மீது கடுமையான சட்டங்கள், பாதுக்காக்க முற்படுவோர்களுக்கு அதிகமான ஆலோசனைகளையும், நிதி உதவிகளும் அளிப்பது அரசின் கடமை. இவைகளைச் செய்தால் சுற்றுச்சூழலை பாதுகாப்பைக் குறைந்த பட்சமாவது உறுதிப் படுத்தலாம். பொதுமக்களாகிய நாமும் மரம் வளர்ப்போம். மழை பெறுவோம். அழிவிலிருந்து நமது சூழலைக் காப்போம்.
==============================================
வலைப்பதிவர் திருவிழா-2015”

மற்றும்

தமிழ் இணையக் கல்விக்கழகம்

நடத்தும்

“மின் தமிழ் இலக்கியப் போட்டிகள்-2015“ க்காகவே எழுதப்பட்டது. (வகை 2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது.

இதற்கு முன் வெளியான படைப்பல்ல, மேலும் இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதி கூறுகின்றேன்.





கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

9 comments:

  1. வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகள் அய்யா விழாவிற்கு வாருங்கள் சந்திப்போம் அய்யா.

      Delete
  2. வணக்கம் நண்பரே! தங்கள் தளத்திற்கு புதியவன்! அருமையான ஆக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பா. தொடர்ந்த நட்பில் இணைந்திருப்போம். வருகைக்கு நன்றி.

      Delete
  3. ஆக்க பூர்வமான கட்டுரை. நெகிழி தொழிற்சாலைகளை மூடுதல் ஒன்றே நெகிழி பயன்பாட்டை ஒழிக்கும். மற்ற எல்லாவற்றிற்க்கும் பெரிய அளவில் விழிப்புணர்வை கொண்டு வர வேண்டும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக அனைத்திற்கும் விழிப்புணர்வு தேவை. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரர்.

      Delete
  4. இணைத்துக் கொண்டமைக்கு நன்றிகள். விரைவான பணிக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  5. விழிப்புணர்வினை உருவாக்கும் பதிவு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    பௌத்த நல்லிணக்க சிந்தனைகளைக் காண எனது முதல் வலைப்பூவிற்கு அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2015/10/blog-post.html

    ReplyDelete
  6. என்ன ஆச்சு பாண்டியன்? நமது விழா அழைப்பிதழை உங்கள் தளத்தில் பகிர உரிமையோடு அழைக்கிறேன்

    ReplyDelete