Sunday, 4 January 2015

சகத்தினை அழித்திடலாமா?


கோவில்கள், பேருந்து நிலையங்கள், சாலையோரங்கள் என இப்படியாக எங்கு காணினும் கையேந்தும் பிச்சைக்காரர்கள் நிறைந்த இந்த பாரத திருநாட்டில் (குறிப்பாக தமிழ்நாட்டில்) வறுமை ஒழிக்கப்பட இன்னும் எத்தனை காலங்கள் ஆகும்? அனுமானமாக கூட யோசித்துப் பார்க்க முடியாத நிலையில் தானே இன்றிருக்கிறோம். வறுமையை ஒழிக்க வேண்டும் என்று 1951 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் இலக்கு வைக்கப்பட்டு இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆண்டாண்டு காலமாகி அரசியல்வாதிகள் மாறியிருக்கிறார்கள் வறுமைக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் வறுமை ஒழிந்திருக்கிறது அரசியல்வாதிகளின் குடும்ப வறுமை மட்டும். நாட்டின் வறுமை ஒழிப்பு என்பது வெறும் திட்டங்களில் மட்டும் வாழ்ந்து விட்டது போகிறதா என்றும் வறுமை ஒழிப்பு வாசகங்கள் எல்லாம் வெறும் வெள்ளைத்தாள்களின் இடங்களை நிரப்பிக் கொண்டே கடந்திருக்கிறதா எனும் சந்தேகம் ஆட்கொள்கிறது நமக்கு.

பசிக்காக கையேந்தும் இயலாதவர்களைக் கண்டும் காணாமல் போக மனம் கூசுகிறது நமக்கு. இருந்தாலும் சில நேரம் அப்படி கடந்து போகவும் துணிந்திருக்கிறோம். விலங்கினங்கள் கூட பங்கிட்டு உண்ணுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் எல்லாம் எனக்கு மட்டும் தான் எனும் மனநிலையில் நடமாடித் திரிகிறோம். தனக்கு கீழே இருப்பவர்கள் அருவருப்பாக பார்ப்பவர்களாக தான் வசதி படைத்தவர்கள் பலர் இன்று இருக்கிறார்கள். கை தூக்கி விடுபவர்கள் வெகு சிலரே.

வறுமை ஒழிக்க வேண்டியது வெகு சிரமமான காரியம் என்றாலும் குறைந்த பட்சம் உணவளிக்கும் திட்டமாவது நாடு விடுதலையிலிருந்து இன்று வரை பிறந்திருக்க வேண்டாமா? இந்தியாவில் உணவு பாதுகாப்பு என்பது மிகவும் கேவலமான நிலையில் இருப்பதாக அண்மை செய்திகள் நமக்கு உரைக்கின்றன.

கிடங்குகளில் பராமரிக்கும் உணவுப் பண்டங்களில் 40 சதவிகிதம் வீணாகி பயனற்றுப் போகிறதாம். மீதி உள்ள 60 சதவிகிதப் பண்டங்கள் கூட அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட நோயாளியைப் போல தான் வெளி வருகிறதாம். இவைகள் களையப்பட வேண்டியது யார் பொறுப்பு?

உலகில் பணக்காரர்களில் பல பேர் வசிப்பது இந்தியா தான். மொத்த மக்கள் தொகையில் ஏறத்தால 22 சதவிகிதம் மக்கள் வறுமையில் வாடுவதும் இந்தியாவில் தான். இப்படி ஏற்றத்தாழ்வு ஏற்படுமானால் வளர்ச்சிப் பணிக்கு வித்திட்டும் திட்டங்களில் ஓட்டை இருப்பது உண்மை தானே.

வேடிக்கையான சொன்னால் இத்திட்டங்களில் ஓட்டையில்லை. ஓட்டையில் தான் இப்படிப்பட்ட திட்டங்கள் இருக்கின்றன. அரசின் திட்டங்களும் வங்கிக் கடன்களும் பணமுதலைகளுக்கு தானே உதவி புரிகின்றன. விவசாயிகளைத் தொலைத்து விட்டு விவசாயத்தில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் எனும் வெற்றுக் கூச்சல்கள் இன்னும் எதற்காக?

விளைநிலங்கள் விலை நிலங்களாகிப் போனதற்கு அரசின் தவறான கொள்கைகளும் ஆட்சியாளர்கள் அடித்த கொள்ளைகளும் தான் காரணம். கொள்ளை என்பது அவர்கள் சுருட்டிக் கொண்ட செல்வங்கள் மட்டும் அடங்குவதில்லை சாமானிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கைமாறி போனதும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உணவுப்பண்டங்கள் முதலான வீணாகிப் போகும் வளங்களின் மதிப்புகளும் அதில் அடக்கம்.

இது போன்ற காட்சிகளை மாற்றக் கூடிய ஆளுமை மிக்க தலைவர்கள் இந்தியாவிற்கு தேவை. கிடைப்பார்களா என்பதும் கிடைத்தாலும் ஏழையின் வறுமை உணர்ந்து செயல்படுவார்களா என்பதும் மில்லியன் டாலர் கேள்விகள்.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்.. என்று பாரதி முழங்கி ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. காட்சிகள் மற்றும் தொடர்கிறது. அப்படிப்பட்ட வறுமை பாரதியையும் விட்டு வைக்கவில்லை என்பது கொடுமை. இன்றும் தனி மனிதன் ஒருவன் பசிக்கிறது என்று கையேந்துகிறானே தனி மனிதனாக நாம் என்ன செய்ய? ஒருவர் இருவருக்கு உதவலாம். இப்படி பல பேர்கள் என்றால் ஆட்சியாளர்களிம் குறைபாடுகளும் உழைக்க மறுக்கும் சோம்பேறிகளைத் தான் நாம் குறை சொல்ல முடியும்.

இலவசங்களில் மூழ்கிப் போன மக்களும் உழைத்து உண்ண மறுக்கும் மக்களும் உள்ளவரை கேயேந்தும் பழக்கும் தொடரும். தனது வேலையைச் செய்ய கையேந்தும் அலுவலர்களுக்கும் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள அடுத்தவர்களிடம் கையேந்தும் உழைக்க மறுக்கும் சோம்பேறிகளுக்கும் பெரிதான வித்தியாசம் இல்லை என்றே தோன்றுகிறது. உழைத்து வாழ வேண்டுமெனும் மனநிலை இப்படிப்பட்டவர்களுக்கு வந்தால் நாட்டு நிலைமை சொல்லிக் கொள்ளும்படி உயரும்.


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

28 comments:

 1. எதற்கும் ஒரு விடிவு காலம் வரும் (மா...?) நம்பிக்கையோடு இருக்க வேண்டியது தான்...!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்
   விரைவான முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

   Delete
 2. //இது போன்ற காட்சிகளை மாற்றக் கூடிய ஆளுமை மிக்க தலைவர்கள் இந்தியாவிற்கு தேவை. கிடைப்பார்களா என்பதும் கிடைத்தாலும் ஏழையின் வறுமை உணர்ந்து செயல்படுவார்களா என்பதும் மில்லியன் டாலர் கேள்விகள்.//

  இனி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை..

  அவனவனும் அவனளவுக்கு நியாயமாக வாழ்ந்து விட்டு புறப்பட வேண்டியதுதான்..
  காலம் தனது கடமையைக் கண்டிப்பாகச் செய்யும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றாக சொன்னீர்கள் ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்

   Delete
 3. சகத்தினை அழிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக நடந்து கொண்டு இருப்பதுபோல்தான் தோன்றுகிறது. நல்ல சமுதாய நோக்குள்ள கட்டுரை வாழ்த்துக்கள் பாண்டியன்

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. வருகை தந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு நன்றிகள் ஐயா

   Delete
 4. இந்தியாவின் சனியே அங்கே உள்ள பணக்காரர்கள் தான். கிடைத்த வரை சுருட்டி கொண்டு பணத்தை கருப்பாக மாற்றி கொண்டு அரசியல்வாதிகளையும் விலை பேசி வாங்கி கொண்டு .... ஐய்யகோ ...
  என்றாவது ஒரு நாள் ஒரு டாட்டா அல்லது அம்பானி அல்லது இப்போது வந்துள்ள புது பணக்காரர் அடானி இவர்கள் யாராவது பொது நலத்திற்காக ஏதாவது நல்லது செய்து இருகின்றார்கள் என்று கேள்வி பட்டு இருகின்றோமா? இதுவரை அப்படி கேள்வி பட்டது இல்லை. சுயநலம் நாடு முழுவதும் தலை விரித்து ஆடுகின்றது. புதிதாக வந்துள்ள ஆட்சியாலவது ஏதாதவது நல்ல காரியம் நடக்கும் என்றால்.. கண்ணுக்கெட்டிய தூரத்தில் அதற்கான அறிகுறியே இல்லை.

  நெஞ்சு பொறுக்குதிலையே...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   என்னுடைய கருத்தும் தங்களுடைய கருத்தும் ஒத்திருப்பதில் மகிழ்ச்சி ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்

   Delete
 5. அருமையான பதிவு.. தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. எழுத தூண்டியமைக்கு மிக்க நன்றிகள் ஐயா

   Delete
 6. அண்ணா வறுமை காரணமாக பிச்சை எடுத்தால் சரி ..ஆனால் இங்கு பிச்சை எடுப்பதை ஒரு தொழிலாக செய்கிறார்கள். நான் இன்றைக்கு கோவிலுக்கு செல்லும் போது ஒரு பிச்சைக்காரன் தன்னுடை பஜாஜ் எம் -80 வண்டியை நிறுத்திவிட்டு ஒரு கிழிந்த உடையை உடுத்திவிட்டு வந்து வாசலில் அமர்ந்தான். அனைவருக்குமே தேவை இருக்கிறது அதில் வெகு சிலரே பிச்சை எடுப்பார் . மற்றவர் அனைவருமே அதை ஒரு குல தொழிலாக பண்ணுகின்றனர் .இன்னும் தொழிற்சங்கம் அமைக்கவில்லை அவ்வளவு தான் .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்
   நானும் பதிவில் பிச்சைக்காரர்களைக் கடிந்துள்ளேன். வறுமை ஒழிக்கப்படவில்லை எனும் ஆதங்கமும் அதில் அடக்கம். அழகான கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள் சகோ.

   Delete
 7. வேறு வழியில்லைதான் ..
  த ம +

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்து கருத்திட்டு வாக்கும் அளித்தமைக்கு நன்றி சகோ..

   Delete
 8. இந்திரா காந்தி அவர்கள் வறுமையே வெளியேறு என்று பிரச்சாரம் செய்தார் ,நமது கவிஞர் ஒருவர்கூட .வெளியேறு என்றால் எருமையே வெளியேறாது ,வறுமையா வெளியேறும் என்று பாடியது நினைவுக்கு வருகிறது :)
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்
   அழகான வரிகளையும் எடுத்துக்காட்டி கருத்திட்டமைக்கு நன்றிகள்..

   Delete
 9. மணவை ஆசிரியர் அ பாண்டியன் அவர்களின் சமுதாய அக்கறையைக் காட்டும் கட்டுரை. முதலில், இலவசங்கள் கொடுப்பவரை தடுத்து நிறுத்துங்கள். இந்த காலத்தில் பிச்சை எடுப்பவர்கள் உணவுக்காக கையேந்துவதில்லை. காசுக்காக, இதனை ஒரு தொழிலாகவே நினைக்கின்றனர்.
  த.ம.6

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   ஒரு தொழிலாகவே மாற்றி விட்டார்கள் என்பது முற்றிலும் உண்மை. அந்நிலை மாறுமா என்பதும் கேள்விக் குறியே! பார்ப்போம். கருத்துக்கு நன்றிகள் ஐயா.

   Delete
 10. **இலவசங்களில் மூழ்கிப் போன மக்களும் உழைத்து உண்ண மறுக்கும் மக்களும் உள்ளவரை கேயேந்தும் பழக்கும் தொடரும்** இதுதான் fact சகோ. விராலிமலையில் எங்க மாமா நல்ல அறிமுகமான ரியல்-எஸ்டேட் அதிபர். சென்ற முறை என் அத்தை ஏதோ வேண்டுதல் நிறைவேற்ற கோவிலுக்கு என்னையும் கூட்டிசென்ற போது, வாசலில் பிச்சை எடுத்துகொண்டிருந்த ஒரு வயோதிகர் எங்க மாமாவை தனியே கூப்பிட்டு ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார். என்னவென்று மாமாவை விசாரித்தேன். சமீபத்தில் லட்சங்களில் விற்பனைக்கு வந்த மனை ஒன்றை தனக்கு முடித்துத்தரும்மாறு கேட்டாராம்:)))

  ReplyDelete
  Replies
  1. அட கடவுளே! இது போன்று விராலிமலையில் ஒரு பிச்சைக்காரரின் வங்கிக்கணக்கில் பல லட்சம் இருப்பதாக கேள்விப் பட்டிருக்கிறேன். ஒருவேளை அவராக கூட இருக்கலாம். ரோட்டுல போகிற பிச்சைக்காரனு நாம யாரையும் திட்டினா அது ரொம்ப தப்பு. நம்ம விட அவங்க தான் சகல வசதிகளோடு உலாவுகிறார்கள். கருத்துக்கு நன்றி அக்கா.

   Delete
 11. ஒ! நிறைய பேர் என்னைபோல தான் சொல்லிருக்காங்க போல:)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அக்கா. நானும் பதிவில் அதனைக் கடிந்திருக்கிறேன். கருத்துக்கு நன்றிகள் அக்கா..

   Delete
 12. நம் அமைப்பு செய்து வைத்திருக்கிற வினைவகைதான் இது எனலாம்/

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் ஐயா. அமைப்பு சரியாக அமைந்து சரியாக செயல்பட்டால் எல்லாம் சுபமாகும். கருத்துக்கு நன்றி ஐயா.

   Delete
 13. சமுதாய விழிப்புணர்புப் பகிர்வு
  வாழ்த்துக்கள் நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தவறாது வந்து கருத்திடுவது கூடுதல் மகிழ்ச்சி ஐயா. தொடர்வோம். நன்றிங்க ஐயா.

   Delete
 14. தனது வேலையைச் செய்ய கையேந்தும் அலுவலர்களுக்கும் தன் “தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள அடுத்தவர்களிடம் கையேந்தும் உழைக்க மறுக்கும் சோம்பேறிகளுக்கும் பெரிதான வித்தியாசம் இல்லை“ - அப்படிப்போடு.. இப்பத்தான் எங்க பழைய பாண்டியன் திரும்ப வந்திருக்காரு... தொடரட்டும் உங்கள் சிந்தனைத் தூண்டல் த.ம.8

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   எனது சூழ்நிலை வலைப்பக்கம் வர ஒத்துழைக்கவில்லை. வெள்ளி இரவு ஊருக்கு சென்று திங்கள் காலை திரும்ப வருகிறேன். பயணக் களைப்பில் அன்று மாலை அயர்ந்து தூங்கி விடுகிறேன். இடையில் மூன்று இரவுகள் மட்டுமே. இதில் பள்ளி பணி வேறு. பள்ளிக்கான ஆன் லைன் வேலைகளில் என்னிடம் ஒப்படைக்கப்படுகிறது. இப்படியாக பணிகளில் நேரமின்றி தவிக்கிறேன். இடையில் உடல்நலக் கோளாறு அவ்வப்போது எட்டிப் பார்க்கிறது. இருப்பினும் தொடர்ந்து எழுத முயல்கிறேன். தவறுகள் இருப்பின் பொறுத்தருள்க. நண்பர்களுக்கும் இச்செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள் ஐயா..

   Delete