Thursday, 22 May 2014

துன்பத்திற்கு காரணம் ஆசையா?


ஆசை தான் துன்பத்திற்கு காரணமென்று புத்தர் கூறி பல ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் இந்த ஆசை உலக மக்களை விட்டு வெளியேறி விட்டதா! அப்படி வெளியேற எண்ணுபவன் ஆசையே இல்லாமல் நான் வாழ வேண்டும் என்று எண்ணுவதாக எடுத்துக் கொள்வோம். ஆசையை ஒழித்து விட ஆசைப்படுவதாக தானே அர்த்தம். எல்லாம் துறந்த முனிவரிடம் உங்களுக்கு என்ன ஆசை இருக்கிறது என்று கேட்டால் பெரிதாக எனக்கு ஆசை ஒன்றும் இல்லை நான் கண் மூடுவதற்குள் கடவுளை கண்டு விட வேண்டும் என்று கூறுவதாக எடுத்துக் கொண்டால் இது எவ்வளவு பெரிய பேராசை தெரியுமா!

தன்னைப் படைத்தவனையே பார்த்து விட வேண்டுமென்பது சாதாரண ஆசையா? இப்படி முற்றும் துறந்தவர்களாகக் கருதப்படும் முனிவர்களும் பேராசைப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆக ஆசை என்பதை முற்றிலும் நம்மால் ஒழித்து விட முடியாது என்பது புலப்படுகிறது. ஆசை ஆளாளுக்கு வேறுபடுகிறது. ஒரு நகரத்தில் வாழுபவனுக்கு பக்கத்து வீட்டுக்காரன் கார் வைத்திருந்தால் அது போல நாம் இரு கார்கள் வாங்கி விட வேண்டுமென்று ஆசை. இவை எல்லாம் புரியாத கிராமத்து மனிதராக இருந்தால் பக்கத்து வீட்டுக்காரன் இரண்டு எருமை மாடுகள் வைத்திருந்தால் நான்கு எருமை மாடுகள் நாம் வாங்க வேண்டுமென்று ஆசை. இப்படி படித்தவனுக்கும் பாமரனுக்கும் ஆசையின் அளவுகோள் மாறியுள்ளது. ஆனால் ஆசை என்பது ஒன்று தானே!

ஆசை தான் துன்பத்திற்கு காரணம் என்று ஒரு முடிவுக்கு வந்து ஆசையை விட முயற்சி செய்து தோற்று போய் விட்டோம். ஆசையை விட முடியவில்லை அதனால் ஆசையின் அளவைக் குறைத்துக் கொள்ளலாமா? அது எப்படி? மாடி வீடு கட்டி காரில் செல்ல வேண்டுமென்று ஆசை உங்களுக்கு என்று வைத்துக் கொள்வோம் ஆசையைக் குறைத்துக் கொள்வோம் என்றால் சின்னதாய் ஒரு ஓட்டுவீடு கட்டி சைக்கிளில் செல்லலாம் என்று முடிவெடித்து விட்டீர்கள். இப்போது உங்கள் துன்பம் குறைந்து விட்டதாக உணர முடிகிறதா! நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை. அப்பவும் வாழ்க்கை துன்பமயமாகவே இருக்கிறது.

இப்படி தனது ஆசையைச் சுருக்கியும் துன்பம் போகவில்லை ஆனால் உங்கள் மாடி வீடு, கார் என்கிற உயர்ந்த குறிக்கோள் இங்கு உடைக்கப்பட்டு இருக்கிறதே? ஒரு வேளை நீங்கள் முயன்றிருந்தால் உங்கள் இலக்கினை நீங்கள் எட்டிப் பிடித்திருக்கலாம் இல்லையா! அப்படியானால் ஆசையைப் பாதியாக குறைப்பது தவறான வழிமுறை தானே!! அது வேண்டாம் என்று முடிவுக்கு வந்து விடுவோம்.

சரி அடுத்ததாக தகுதிக்கு மீறி ஆசைப்படாமல் இருந்தால் நமக்கு துன்பம் வராமல் இருக்குமா! ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் குழந்தை மருத்துவராக வேண்டும் என்பதே எனது ஆசை என்று கூறுகிறான். அவனிடம் தம்பி நீ தகுதிக்கு மீறி ஆசைப்பட கூடாது என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய அபத்தம்.

ஆசைப்பட வேண்டும் ஆனால் துன்பம் வரக்கூடாது இதற்கு என்ன வழி என்பதற்கான பாதையை நோக்கி நாம் பயணித்தால் அதற்கான விடை நமக்குள்ளே தான் இருக்கிறது. அது நமது மனம். எவ்வளவு வேண்டுமானால் நாம் ஆசைப்படலாம் அது நிறைவேறினால் வெற்றி. நிறைவேறா விட்டால் ஆசைப்பட்டோம் கிடைக்கவில்லை அவ்வளவு தானே அதனால் என்ன? எனும் மனப்பக்குவம் வர வேண்டும்.

அதற்கு நமது மனதைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். புறச்சூழ்நிலைகள் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் நமது அகச்சூழ்நிலை (மனம்)அமைதியாக இருந்து விட்டால் புறச்சூழ்நிலை நம்மைப் பாதிக்காது. அதற்கான மனநிலை மகான்களுக்கு மட்டும் தான் வாய்க்கும் என்றில்லை நமக்கு சாத்தியம் தான் முறையான பயிற்சியும், தியானமும், யோகாவும், மன ஆளுமையும் இருந்தால்.. சிந்தித்து பாருங்கள் நண்பர்களே நன்றி.


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

37 comments:

 1. அருமையான பதிவு

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ முதலாக வந்து கருத்திட்டமைக்கு.

   Delete
 2. இறைவன் என்றைக்குமே -
  குருவியின் தலையில் பனங்காயை வைப்பதேயில்லை..
  சைக்கிள் வைத்திருப்பவனுக்கு சைக்கிளின் அளவே துன்பம்..
  அதேபோலத் தான் - கார் வைத்திருப்பவனுக்கும்!..

  இதெல்லாம் - நமது மனதிற்குத் தெரியும். ஆனால் - ஆசையின் வசப்பட்டு, நுரை தின்ற தவளையாய் வறட்டுச் சத்தம் இடுகின்றது.

  நல்லதொரு பதிவு.. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. வாஞ்சையோடு வருகை தந்து கருத்திட்டமைக்கு எனது அன்பான வணக்கங்களும் நன்றிகளும் ஐயா. தொடர்வோம். நன்றி.

   Delete
 3. சிறந்த உளநல வழிகாட்டல்
  பேராசை பெரும் தொல்லை தான்
  ஆசை இல்லை என்றால் சடப்பொருளே
  அப்படியாயின்
  ஆசை இருக்க வேண்டும்
  அதுவும்
  அளவோடு இருக்க வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. மிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா. வருகை தந்து கருத்திட்டு மகிழ்ந்தமைக்கு நன்றிகள். தொடர்வோம் ஐயா..

   Delete
 4. மன ஆளுமைப்பற்றி மிக அருமையான பதிவாகிறது எனக்கு. வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ. வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி,.

   Delete
 5. ஆசை மீது ஆசை கொள்ளாமல் இருப்பதே துன்பத்தில் இருந்து விலகும் வழி என்று அழகாக சொல்லி இருக்கீங்க

  ReplyDelete
  Replies
  1. சகோதரருக்கு வணக்கம். வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்

   Delete
 6. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் எனும் திருக்குறளைப் பின்பற்றி ஆசைப்படுவோம். இயலாத பட்சத்தில் உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்று கண்ணதாசனின் வரிநீழலின் கீழ் ஆறுதல் அடைவோம். அருமையான கருத்துப் பகிர்வு நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. அன்பின் சகோதரரின் வருகையும் கருத்தும் மிகுந்த மகிழ்வைத் தருகிறது. கண்ணதாசன் அவர்களின் வரிகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.

   Delete
 7. மிகச்சிறப்பாக சொன்னீர்கள்! அருமையான பதிவு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.
   தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   Delete
 8. ஆசைப்பட வேண்டும் ஆனால் துன்பம் வரக்கூடாது இதற்கு என்ன வழி என்பதற்கான பாதையை நோக்கி நாம் பயணித்தால் அதற்கான விடை நமக்குள்ளே தான் இருக்கிறது. அது நமது மனம். எவ்வளவு வேண்டுமானால் நாம் ஆசைப்படலாம் அது நிறைவேறினால் வெற்றி. நிறைவேறா விட்டால் ஆசைப்பட்டோம் கிடைக்கவில்லை அவ்வளவு தானே அதனால் என்ன? எனும் மனப்பக்குவம் வர வேண்டும்.//

  மிக மிகச் சரியே! நல்ல ஒரு ப்திவு நண்பரே!

  ஆசை இல்லையென்றால் நம்மால் வாழ்வில் எதையுமே செய்ய முடியாது!....அதாவது யதார்த்தமான இந்த வாழ்வில்! நாம் பாசாக வேண்டும் என்ற ஆசையும், இலட்சியமும் இருந்தால் தானே ஒரு மாணவன்/மாணவி தேர்வில் வெற்றி பெற முடியும்?! ஆசையும் அள்வோடு இருந்தால் வளமான வாழ்வுதான்! பேராசை பெருந்துன்பம்தான்!

  நல்ல ஆழமான கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   தங்களின் ஊக்குவிக்கும் இக்கருத்துக்கும் வருகைக்கும் எனது அன்பான நன்றிகள். தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றி.

   Delete
 9. தெளிவான பதிவுக்குப் பாராட்டுக்கள்.!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்மா.
   தங்கள் வருகையும் கருத்துடன் கூடிய பாராட்டும் மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றிகள் அம்மா.

   Delete
 10. ஆசைப்படாமல் யாராலுமே இருக்க முடியாது என்பதே உண்மை. அந்த ஆசை பேராசையாக இல்லாமல் ஓரளவு நியாயமாகவும், சாத்யப்படக் கூடியதாகவும் இருந்தால் நல்லது.

  அப்படியும் நாம் ஓரளவு நியாயமாக ஆசைப்பட்டது கிடைக்காவிடினும், தாங்கள் சொல்வதுபோல அதை நம் மனம் சுலபமாக ஏற்றுக்கொள்வது போன்ற நிலையில் நாம் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

  இது அவ்வளவு சுலபமல்ல. இதற்கு மனப்பக்குவமும், முறையான பயிற்சிகளும் மிகவும் தேவைதான். தெளிவான பதிவுக்குப் பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஐயாவிற்கு வணக்கம்
   தங்களின் இடைவிடாத பணியிலும் வருகை தந்து கருத்திட்டு மகிழ்ந்தமைக்கு நன்றிகள். தங்கள் அனுபவம் எங்களுக்கு உதவட்டும். நன்றீங்க ஐயா.

   Delete
 11. தகுதிக்கு தகுந்த ஆசைகள் நிச்சயமாக துண்பத்தை தராது பாண்டிய நண்பரே....
  Killergee
  www.Killergee.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நண்பரே
   தங்களின் நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. தங்களின் தளம் வருகிறேன். கருத்துக்கு மிக்க நன்றிகள்.

   Delete
 12. மிகவும் தெளிவான விளக்கங்கள்.... வாழ்த்துக்கள் சகோதரா...

  ReplyDelete
  Replies
  1. அண்ணா வணக்கம்
   மீண்டும் ஒருமுறை தங்களைச் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இதே எனது திருமணத்திலும் சந்திப்போம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

   Delete
 13. Replies
  1. வணக்கம் ஐயா
   மீண்டும் ஒருமுறை தங்களைச் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இதே எனது திருமணத்திலும் சந்திப்போம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

   Delete
 14. கட்டுரைகளில் மூன்றாம் கட்டத்திற்கு வந்திருக்கிறீர்கள் பாண்டியன். எனக்கு மிகுந்த மகிழ்ச்சிதரும் கட்டுரை இது.கட்டுரையின் முதல்வகை - தகவல்களைத் தருவது. இரண்டாவது வகை, தகவல்களின் மீதான சிந்தனையைக் கிளறுவது. மூன்றாவது வகை சரியான தீர்வை நோக்கிச் செலுத்துவது. இந்த மூன்றாவது கட்டுரைவகைதான் நம் உலகத்தை வடிவமைக்கிறது. “பேராசை பெருநட்டம்“ என்பது ஏற்கெனவே பலவற்றைப் பெற்றிருப்பவர்கள், அதைப் பெறாதவர்கள் முன்னேறிவிடாமல் -இருப்பதில் திருப்தியடைய- எடுத்துச் சொன்ன சுயநலம் மிகுந்த சொற்கள். அதனால்தான், “பெரிதினும் பெரிதுகேள்“ என்றான் நம் ஆசான் பாரதி. நீங்கள் சொன்னது போல, “ஆசைப்படாதே“ என்பதே பேராசைஅல்லவா?. எனவேதான் “பற்றுக பற்றற்றான் பற்றினை“(குறள்-350) என்பது சரியான குறள் (குரல்) அல்ல என்பது என் கருத்து. இந்த வகையில், “எண்ணிய எண்ணியாங்கு எய்துப” (குறள்-666) என்பதுதான் சரி. ஆசை, செயல்படத் தூண்டுமானால் அது சரியான ஆசைதான். உங்கள் ஆசையை நான் வழிமொழிகிறேன் நம் ஆசைகள் வெல்லும் திசையில் நம் தோள்கள் இணைந்த பயணம் தொடரட்டும். நன்றி.

  ReplyDelete
 15. வணக்கம் ஐயா
  தங்களின் கருத்துரை பார்த்து மிகுந்த மகிழ்ச்சி ஐயா. எல்லாம் தங்களைப் போன்றோரின் உந்துதல் தான். வலைப்பூ என்றாலே எப்படினா என்ன என்று கேட்கும் நிலையில் தான் இருந்தேன். வலைப்பூ எனும் வார்த்தையை உங்கள் உதடுகளில் ஒலிக்க நான் முதன்முதலாய் கேட்டேன். உங்களின் கருத்துரை என்னை மென்மேலும் உயர்த்தும் ஊக்குவிக்கும். ரொம்ப நன்றீங்க ஐயா.

  ReplyDelete
 16. ஆசை ஆசையா படித்து முடித்தேன் ,சிந்திக்க வைத்த பதிவு !
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்
   நீங்கள் எப்பவும் மகிழ்ச்சியாய் இருப்பவர்/ மற்றவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துபவர். ஆசை ஆசையாய் ஓடி வந்து படித்தமைக்கு நன்றி.

   Delete
 17. தம்பி மணவை அ.பாண்டியன் அவர்களின் ஆசை பற்றிய அலசல்! கருத்துக்கள் சிறப்பாக உள்ளன.

  உங்கள் கட்டுரையில் // புத்தர் கூறி பல நூற்றாண்டுகள் > புத்தர் கூறி பல ஆண்டுகள் // என்று மாற்றவும். .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   புத்தர் கூறி பல நூற்றாண்டுகள் ஆகி விட்டது என்பது பொறுத்தமாக தானே இருக்கும் ஐயா. புத்தர் வாழ்ந்த காலம் கி.மு 563 முதல் கி.மு.483 வரை. இருப்பினும் தங்களின் வேண்டுகோளுக்காக மாற்றுகிறேன். தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும். கருத்துக்கு நன்றீங்க ஐயா.

   Delete
 18. துயரம் இல்லாத ஆசைகள் வேண்டும்
  நலம் பேணும் நினைவுகள் வேண்டும் அவ்வளவு தானே.

  \\ அதற்கு நமது மனதைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். புறச்சூழ்நிலைகள் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் நமது அகச்சூழ்நிலை (மனம்)அமைதியாக இருந்து விட்டால் புறச்சூழ்நிலை நம்மைப் பாதிக்காது. அதற்கான மனநிலை மகான்களுக்கு மட்டும் தான் வாய்க்கும் என்றில்லை நமக்கு சாத்தியம் தான் முறையான பயிற்சியும், தியானமும், யோகாவும், மன ஆளுமையும் இருந்தால்.. சிந்தித்து பாருங்கள் நண்பர்களே நன்றி.//
  உண்மை உண்மை.

  மனப் பக்குவம் அவசியம் தான். பாண்டியரே ஆசைகள் நிச்சயம் தேவைதான் மனிதருக்கு இல்லையேல் சோம்பேறிகளாக மூலையில் முடங்கி விடுவார்கள் . ஆசைகள் நலத்திற்கு கேடு விளைவிக்காதபடி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் இல்லையா. அதற்கு போட்டிக்கும் பொறாமைக்கும் உள்ளாகாமல் இருக்க வேண்டும். பொறாமை வராமல் இருக்க எல்லா நல்ல விடயங்களையும் திறமைகளையும் ஆத்மர்த்தமாக பாராட்டவும் வாழ்த்தவும் வேண்டும். விரலுக்கு ஏற்ற வீக்கம் தேவை. செய்ய வேண்டும் என்னும் ஆசை தவறல்ல இன்னொருவரோடு ஒப்பிட்டு அவரை விடவும் நான் உயரவேண்டும் வாழவேண்டும் என்று நினைப்பது தான் பிழைப்பைக் கெடுக்கும். அவரவர் வாழ்வை அவர்கள் வாழவேண்டும். மன வலிமை, உடல் வலிமை, அறிவு ,ஆரோக்கியம், உறவு, சூழல் எல்லாமே வேறு வேறு அவர்களைப்போல் ஒரு நாளும் வாழமுடியாது, அதை பலர் புரியாமல் வாழ்வை நரகமாக்கிக் கொள்கிறார்கள். அவர்களைப் போல் வாழவேண்டும் என்னும் எண்ணம் தவிர்க்கப் பட வேண்டும். எங்களுடைய சந்தோஷம் எங்கள் கையில் தான் இல்லையா பாண்டியா. நல்லதும் வேண்டிய பதிவும் தான் சகோ என்ன ஒரு பக்குவம் இந்த வயதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்க பாண்டியா .என்றும் நலமுடன்....!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி
   தங்களின் இந்த வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதலுக்கும் முதலில் எனது சிரம் தாழ்த்திய வணக்கங்கள். பதிவை ஆழமாக படித்து நுட்பமான கருத்துகளைப் பின்னூட்டமாக தந்தமைக்கு நன்றி சகோதரி. நீங்கள் கூறியது போல் நமக்கு என்ன வேண்டுமோ அதை நமது சக்திக்கு ஏற்றார்போல் வாழ்க்கையை வடிவமைத்து வாழ்வது தான் புத்திசாலிதனம். எவ்வளவு ஆசை பட்டாலும் அதன் எதிர் விளைவு நம்மை பாதிக்காத வகையில் நமது மனதைப் பழக்கி விட்டோமானால் வானம் நமக்கு வசப்படும். நன்றி சகோதரி.

   Delete
 19. வாழ்த்துக்கள்

  ரொம்ப தத்துவமாக சிந்திக்றீங்க

  சரி திருமணத்திற்கு முழுவதாக தயார் ஆகிவிட்டீர் என்று நாங்கள் மகிழ்கிறோம்


  http://www.malartharu.org/2013/03/catch-me-if-you-can.html

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ
   இப்ப இருக்கிற வாழ்க்கைக்கும் திருமணத்திற்கு பிறகான வாழ்க்கைக்கும் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் வித்தியாசமாகத் தான் தெரியும்.எப்படிப்பட்ட சூழலையும் சிறு புன்னகையோடு கடந்து செல்ல பழகிக் கொண்டால் ஏது துன்பம்? அதற்கான முயற்சியில் எனது மனதைத் தயார்படுத்தி வருகிறேன் என்பதும் உண்மையே. கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் சகோ.
   ------------------
   தங்களின் ஹாலிவுட் பட விமர்சனங்கள் மேலும் மேலும் மெருகேறி வருவது கண்கூடாகத் தெரிகிறது சகோ. சினிமா துறை இல்லாது கல்வித் துறையில் பணியாற்றிக் கொண்டிருப்பினும் சினிமா பற்றிய தங்களின் பார்வை மிகவும் பாராட்டதலுக்குரியது சகோ. தொடருங்கள். நன்றி.

   Delete