அரும்புகள் மலரட்டும்: உயிரைக் கட்டணமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகள்

Sunday, 23 March 2014

உயிரைக் கட்டணமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகள்


பள்ளி கட்டணம் செலுத்தாததால், வகுப்புக்கு வெளியே நிறுத்தி வகுப்பு ஆசிரியர் அவமானப்படுத்தியதால், மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். மணலி சிபிசிஎல் நகர் 9வது தெருவை சேர்ந்தவர் மாறன். கூலி தொழிலாளி. இவரது மனைவி பொற்கொடி. இவர்களது மகள் பூஜா (13). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். 3 மாதத்துக்கு ஒரு முறை கட்டவேண்டிய, பள்ளி கட்டணத்தை பூஜா செலுத்தவில்லை பள்ளி நிர்வாகம் கண்டித்ததால் இச்சோகமான சம்பவம் நடந்துள்ளது எனும் செய்தி கேட்டு மனம் பதைபதைக்கிறது. பிஞ்சு குழந்தைகளைத் தற்கொலைக்குத் தூண்டும் கல்வி முறை இன்னமும் நமக்கு வேண்டுமா! எல்லாமும் இலவசமாக கொடுக்கும் இந்த அரசாங்கம் கல்விக்கும் மருத்துவத்தும் அதிகப்படியான பணம் வசூலிக்க அனுமதிப்பது எவ்வளவு முரணாக உள்ளது என்பதை சிந்திக்கையில் ஆட்சியாளர்களின் மீது அவநம்பிக்கையைத் தான் ஏற்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிக்கூடங்கள் வசூலிக்க வேண்டிய கல்விக்கட்டணம் எவ்வளவு என்பதை நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்து அறிவித்தது. இந்த கட்டணத்தை நடப்பு கல்வி ஆண்டு முதலே அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த கமிட்டி சென்ற ஆண்டே அறிவித்தது. இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி கே.பி.கே.வாசுகி, நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். இந்த இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் கூடுதல் தலைமை வக்கீல் வில்சன் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். பெற்றோர் தரப்பிலும் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் இந்த அப்பீல் மனுக்களை விசாரித்தனர். நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்தும், புதிய கல்வி கட்டணத்தை நடப்பு ஆண்டு முதலே நடைமுறைப்படுத்தும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்

இவ்வளவும் நடந்தும் ஆங்காங்கே தனியார் பள்ளிகளில் முறைகேடாக கட்டணங்கள் அளவுக்கதிகமாக வசூலிப்பது நடந்து கொண்டு தான் உள்ளது. கட்டணக்கொள்ளையை வைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். மாணவர்கள் கூப்பிட்டு மிரட்டுவது, பெற்றோரிடம் பணம் வாங்கிவரச் சொல்வது, அவர்களை வெளியில் நிற்க வைப்பது போன்ற தொல்லைகளை எல்லாம் கொடுக்கிறார்கள். இவ்வாறு கூடுதலாக வசூல் செய்யும் பள்ளிகளின் மீது புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி விட்டு இதுவரை குறிப்பிடும்படி எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தனியார் பள்ளிகள் துணிச்சலாக வசூலிக்கின்றனர். அரசு உடனடியாக இந்த பள்ளிகளின் அங்கிகாரத்தை ரத்து செய்து நீதிமன்ற அவமதிப்பாக கருதி நிர்வாகிகளை கைது செய்திருந்தால் பூஜா இன்று உயிரோடு இருந்திருப்பாள். (மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது ஏற்றுக் கொள்ளக்கூடியது இல்லையென்றாலும் அந்த நிலைக்கு பிஞ்சு குழந்தையின் மனநிலையை நோகடித்து அழைத்து சென்றது பள்ளி நிர்வாகத்தின் குற்றம் தான்)

ஏறக்குறைய 90 சதவீதப் பள்ளிகளில் கோவிந்தராஜன் கமிட்டிக்கு எதிராகத்தான் வசூலிப்பதாக சொல்லப்படுகிறது. மிக சிறிய பள்ளி! அதுவும் தட்டிக் கட்டி, ஒரே அறையில் தான் தொடக்கக்கல்வி பிரி கே ஜி யிலிருந்து 5 வது வகுப்பு வரை நடத்துறாங்க. அந்த பள்ளி கிட்டதட்ட 3000 ரூபாய் அதிகமாக கட்டணம் வசூலிக்கிறாங்க! அந்த தொகையும் ஒரே தவணையில் கழுத்தில் கத்தியை வைக்காத குறையாய் வசூலித்து விடுகிறார்கள். ஆனால் கமிட்டி நிர்ணயித்த கட்டணமே ஆயிரம் ரூபாய் தான்!.

பெற்றோர்களும் நிறையவே மாற வேண்டும் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளி நல்ல பள்ளி , பிறகு அதுவே ஒரு கௌரவமாக பார்க்கப்படுவது, குறிப்பிட்ட பள்ளியில் படித்தால் அவர்கள் நாகரீகமானவர்கள் என்ற தவறான எண்ணத்தை கொள்ளை அடிக்கும் எண்ணம் கொண்ட பள்ளி முதலாளிகளும் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இன்றுவரை கொள்ளை கொள்ளையாய் அடித்து தனது செல்வங்களைப் பெருக்கிக்கொண்டு செல்வா சீமான்களாக, கல்வித்தந்தைகளாக வலம் வருகின்றனர்.   குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் நடுத்தர வகுப்பு பெற்றோர் கூட தங்கள் வருமானத்தின் பெரும் பகுதியை தங்கள் குழந்தைகளின் படிப்பு செலவிற்காக செலவிடுகின்றனர். ஆனால் தனியார் பள்ளி நிர்வாகங்களோ மென்மேலும் அட்டையைப் போல அந்தப் பெற்றோரை உறிஞ்சுவது மனிதாபிமானமற்ற செயலாகவே இருக்கிறது. தன் குழந்தைக்கு கல்வி உரிமையைப் பெற்று தர எவனின் கால்களையெல்லாம் விழுகின்ற சூழலும், தாயின் தாலியை விற்று கல்வி பெறும் சூழலும் இங்கு தான் காலங்காலமாக அரங்கேறி வருகிறது.

இந்நிலை மாற வேண்டுமானால் அரசு பள்ளிகளில் உங்கள் குழந்தைகள் படிப்பது தான் தீர்வு. அரசு பள்ளிகளில் உங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் ஏன் இவ்வளவு யோசனை?. அரசுப் பள்ளிகளின் மீது இந்த நம்பிக்கை ஏன் வர மறுக்கிறது?  இவ்வளவுக்கும் பல அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். நல்லாசிரியர் பலர் அரசுப் பள்ளிகளில் பணியாற்றுகிறார்கள். என்றாலும், அரசுப் பள்ளி என்றாலே, பொதுப்புத்தியில் அது தரமற்ற கல்வி என்ற எண்ணமே இருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும்.

முதலில் அரசு பள்ளிகள் பற்றிய தவறான புரிதலும் ஏளனப்பார்வையும் பெற்றோர்களிடமிருந்து மாற வேண்டும். அரசு பள்ளிகளில் போதுமான கட்டுமான வசதிகள் இல்லையென்று அரசாங்கத்திடம் போராடி பெறுங்கள். இதை விடுத்து தனியார் பள்ளி தாளாளர்களின் காலில் விழுந்து கிடப்பதில் என்ன நியாயம்?. இன்று உயர்பதவியில் இருப்பவர்கள் எல்லாம் அரசு பள்ளியில் படித்தவர்கள் எனும் உண்மையைப் பார்க்க தவறியதன் விளைவு தான் தனியார் பள்ளிகளின் வளர்ச்சி. ஏற்கனவே கல்வித்துறையைத் தனியார் மயமாக மாற்றத்துடித்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு வலு சேர்க்கும் விதமாக பெற்றோர்களின் நடவடிக்கைகளும் அமைவது வேதனை தான்.


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

35 comments:

  1. கமிட்டி நிர்ணயம் செய்ததை யார் மதிக்கிறார்கள்...? எல்லா இடத்திலும் இதே வியாபாரம் தான்... பல விசயங்களில் முதலில் மாற வேண்டியதும், எதிர்க்க வேண்டியதும் பெற்றோர்கள்... இந்நிலை மா(ற்)றுவதற்கு அதுவே சாத்தியம்... பூஜாவின் நிலை மிகவும் வருத்தத்தக்கது...

    ReplyDelete
    Replies
    1. படித்ததும் வேதனையின் உச்சம் என்னை இடைமறித்து செயல்களில் ஈடுபட விடாமல் தடுத்ததை எப்படி சொல்வேன். இனியும் இது போன்ற நிகழ்வு வேண்டும். அரசு விழித்துக் கொண்டால் நல்லது. நன்றி சகோதரர்.

      Delete
  2. மது விற்பதில் தீவிரம் காட்டும் அரசு - தன் மக்களுக்கு நல்ல கல்வியை நடைமுறைப்படுத்துவதில் பாராமுகமாக இருப்பது அவமானம்..

    எத்தனையோ சம்பவங்கள் கடந்த சிலவருடங்களாக!.. கல்வியலாளர்கள் பலமுறை இதைப் பற்றிப் பேசி விட்டு ஓய்ந்து விடுகின்றனர்.

    அனைத்தும் கேளாச் செவியில் காதில் சங்கு ஊதிய கதையாகி விட்டது..

    எது எதற்கோ மாணவர்களைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் அமைப்புகள் - இந்த அவலம் தீர முனைந்தாரில்லை.

    இத்தனை தூரம் வருந்தி பதிவிடும் தாங்கள் அந்தப் பள்ளியையும் ஆசிரியரையும் குறிப்பிட்டிருக்கலாம். இனி தகவல் ஊடகங்கள் - கண் மறைத்து விளையாடுவார்கள்..ஆனாலும் -

    பெற்ற வயிற்றில் பற்றி எரியும் நெருப்பு இவர்களை சும்மா விடாது!..

    ReplyDelete
    Replies
    1. நம்மில் பலர் ஏதாவது அசாம்பிவித சம்பவம் நடந்தால் மட்டும் பேசி விட்டு பின்னர் தனது வழக்கமான பணிக்கு திரும்பி விடுவதே இது போன்ற செயல்கள் மீண்டும் அரங்கேறுவதற்கு காரணமாகின்றன என்பது ஒரு வகையில் உண்மை. வழுவான போராட்டம் மற்றும் கோரிக்கைகள் மூலம் அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க ஐயா.

      Delete
  3. கொள்ளை அடிப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர்கள் பெற்றோர்கள் கொள்ளைகள் இன்று கொலையாகவும் மாறிக்கொண்டுஇருக்கிறது காசுகொடுத்துவிட்டு காலில் வேறு விழ வேண்டுமா?எப்பவுமே உள்ளூரில்மாடு விலை போகாது என்பார்கள் அரசுப்பள்ளிகளின் அனுபவம் புரியவில்லை...........நன்றிசகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர்
      பேற்றோர்கள் தன் நிலை அறிந்து செயல்பட்டால் இது போன்ற இழப்புகள் வெகுவாக தவிர்க்கப்படும். அரசு பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்து வருவது பெற்றோர்களின் மனநிலையை மாற்றும் என்று நம்புகிறேன். நன்றீங்க அம்மா..

      Delete
  4. இதையேதான் நானும் பல வருடங்களாக கேட்டு கொண்டிருக்கிறேன்.யாரும் திருந்துவதாக தெரியவில்லை.
    கலாகார்த்திக்

    ReplyDelete
  5. இதையேதான் நானும் பல வருடங்களாக கேட்டு கொண்டிருக்கிறேன்.யாரும் திருந்துவதாக தெரியவில்லை.
    கலா கார்த்திக்

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து குரல் கொடுங்கள் உங்கள் போன்ற இளைஞர்களின் குரலுக்கு சக்தி அதிகம். தொடர்ந்து இணைந்திருப்போம் நன்றி நண்பரே!!

      Delete
  6. விரலுக்கேற்ற வீக்கம் என்று சொல்லுவார்கள். வருமானம் குறைவாக இருந்தாலும் தனியார் பள்ளியில் பிள்ளைகளை சேர்த்துவிட்டு இப்படி அவதிப்படுகிறார்கள். அரசுப்பள்ளிகளில் இப்போது பிள்ளைகளே இருப்பதில்லை! இந்த அவலம் தமிழ்நாட்டில் மட்டுமே! பெற்றோர்கள் மனம் மாறுதல் வேண்டும். அரசுபள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பெற்றோர்கள் மாறி விட்டால் தனியார் பள்ளிகள் அடங்கி விடும். விழிப்புணர்வோடு கல்வி பற்றிய புரிதல் பெற்றோர்களுக்கு அவசியம் வேண்டும். நன்றீங்க சகோதரர் தங்கள் கருத்துக்கும் வருகைக்கும்..

      Delete
  7. முதலில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும் ஐயா.

    ReplyDelete
  8. வேலையைத்தவிர வேற எதுவும் கவர்மெண்ட்ல வேண்டாம் நம் மக்களுக்கு! ஆனால் இதுபோல பள்ளி நடத்தும் முதலாளிகளை கல்வித்தந்தை என வாய்கூசாமல் புகழும் மனோபாவம் மாறவேண்டும் சகோ! நாமும் நம்மை நிரூபிக்கத்தொடங்கியுள்ளோம் ! வேரவில் மாற்றம் வரும், வரத்தான் வேண்டும்! அருமையான சிந்தனை சகோ!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. விரைவில் நம்மைப் போன்றோர்களின் மூலம் மாற்றம் ஏற்பட்டால் அந்த சமூகம் சிறந்ததாக அமையும் என்பதில் துளியும் ஐயமில்லை. மக்கள் மனங்களில் கல்விப் பற்றிய தெளிவு வெகுவாக உயர வேண்டும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க சகோதரி..

      Delete
  9. நெஞ்சை நெகிழ வைத்த பகிர்வு .பிஞ்சுக் குழந்தைகளின் மனமும்
    இவ்வாறு நொந்து நூலாகி மரணத்தைத் தேடும் அளவிற்கு அப்படி
    என்ன தான் இருக்கிறது பணம் புரட்டும் பாடசாலைகளில் ?.!இதற்கு
    நீங்கள் சொன்ன கருத்தே வரவேற்கத் தக்கது .அன்றும் இன்றும்
    என்றுமே அரசு பள்ளிகளில் கல்வி கற்றோரே கற்போரே மிக்கச்
    சிறந்த கல்வியாளர்களாகவும் விளங்குகின்றார்கள் .ஆதலால் மக்கள்
    தான் இதனைச் சரியாகப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும்
    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரா மேலும் தங்களின் ஆக்கங்கள் சிறந்து
    விளங்க என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா
      எனது கருத்துக்கு உங்கள் கருத்தால் வலு சேர்த்தமைக்கு மிக்க நன்றி. தங்கள் வருகையும் கருத்தும் மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றீங்க அம்மா.

      Delete
  10. மிகவும் வருத்தத்திற்குரிய விடயம் இனிமேலும் இப்படி நடக்காமல் இருக்க அரசு ஆவன செய்யவேண்டும்.எல்லாமே வியாபாரமாகி விட்டது கல்வியையும் வியாபாரம் ஆக்குவது கொடுமை தான்.கல்வி எல்லோரையும் இலகுவாக சென்றடைய வேண்டும். அல்லது
    குறிப்பிட்ட வருமானத்திற்கு உட்பட்டவர்களுக்கு இலவசமாக்க வேண்டும் இல்லையேல் கட்டணத்தை குறைக்கவேண்டும். அல்லது அவர்கள் அரசாங்க பாடசாலைகளை நாடவேண்டும். விரலுக்கு ஏற்ற வீக்கம் தானே இருக்க வேண்டும். இல்லையேல் வேதனையை அனுபவிக்க வேண்டிதான் இருக்கும் அல்லவா?
    உங்கள் ஆதங்கம் புரிகிறது சகோதரா என்ன செய்ய முடியும் !
    பதிவுக்கு நன்றி ! வாழ்த்துக்கள்......!

    ReplyDelete
    Replies
    1. பெற்றோர்கள் தங்கள் பொருளாதார நிலை அறிந்து நடக்க வேண்டும். தனியார் பள்ளிகள் மீதான தாகம் தணிய வேண்டும். வருகையும் கருத்தும் மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றீங்க சகோதரி

      Delete
  11. பொற்றோர்கள் மாறவேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ. மாற்றம் வேண்டும் அனைவரிடமும். வருகையும் கருத்தும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி. தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றீங்க.

      Delete
  12. மிகவும் சோகமான நிகழ்ச்சி! நடக்கக்கூடாத ஒன்று! தங்கள் பதிவு
    அவர்கள் கண்ணை திறக்குமா?

    ReplyDelete
    Replies
    1. வேதனையான விடயம் ஐயா, வேண்டவே வேண்டாம் மீண்டும் இது போன்ற நிகழ்வு. நன்றீங்க ஐயா.

      Delete
  13. மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது ஏற்றுக் கொள்ளக்கூடியது இல்லையென்றாலும் அந்த நிலைக்கு பிஞ்சு குழந்தையின் மனநிலையை நோகடித்து அழைத்து சென்றது பள்ளி நிர்வாகத்தின் குற்றம் தான் - இதில் எனக்கு மாற்றுக்கருத்திலலை பாண்டியன், ஆனால், துணைக்குற்றவாளிகளாக அரசும், பெற்றோரும் நிற்கிறார்களே? இது பற்றி “இலவசங்கள் யாருக்காக?” என்றொரு கட்டுரையை எழுதி “காக்கை“ இதழுக்கு அனுப்பிவிட்டுப் பாரத்தால்... உங்கள்செய்தி நெஞ்சைப் பிழிகிறது. “என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?” என்ற பாரதியின் கேள்விக்கு வயது நூறாகப் போகிறது... பதிலை இதுபோலும் பிஞ்சுக் குழந்தைகள் தம் உயிர் தந்து சொல்லவேண்டிய துர்ப்பாக்கியநிலையில் நம் சமூகம்!.. நனறிநண்பா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      ஆம் ஐயா பெற்றோரின் பங்கும் அரசின் பங்கும் தான் இதில் பிரதானம். பெற்றோர்கள் மனதில் கல்வி பற்றிய ஆழ்ந்த புரிதல் அவசியம். அதற்கான காலம் கனிந்து வர வேண்டும் அதில் நம் போன்றோரின் பங்கும் இருக்கும் என்று நம்புகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க ஐயா.

      Delete
  14. நல்ல அலசல். இன்னும் திருமணம் ஆகாத நான் பெறாத எனது செல்வங்களை அரசு பள்ளியில் தான் படிக்க வைக்கப் போகிறேன் என்று நண்பர்கள் இடம் பல முறை தர்க்கம் செய்து உள்ளேன். ஆனால் இந்த தனியார் மய தாராள வாத உலகின் நெருக்கடியை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகளில் , என் எண்ண ஓட்டத்தை உள் நோக்கும் போது சுயநலம் என்னும் பேய் ....பொதுவுடமை வாதம் பேசும் என்னிடம் ஒளிந்திருப்பதை உணர முடிகிறது. இதற்கான தீர்வை நோக்கிய பயணத்தில் நம் அனைவரின் பங்கு உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. எனது அன்பு நண்பனுக்கு வணக்கம்
      சமூக சிந்தனைக் கொண்ட உம்மை நண்பராக பெற்றதில் அளவற்ற மகிழ்ச்சி. உனது எண்ண ஓட்டங்கள் கூர்மையானதாக இருப்பதை நேரில் கண்டு மகிழ்ந்தவன். நம் பிள்ளைகள் படிக்கும் போது அவசியம் அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து நல்ல நிலையில் இருக்கும் என்று இத்தலைமுறை கல்வியாளர்களின் மீது நம்பிக்கை கொண்டு சொல்கிறேன். பார்ப்போம் நண்பா! நன்றி..

      Delete
  15. சிறந்த விளிப்புணர்வைத் தரும் பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து கருத்திட்டு ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றீங்க ஐயா. தங்கள் தமிழ்ப்பணிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இத்தனையும் ஒரு ஆளாக செய்ய முடியுமா என்று வியந்து பார்க்கிறேன் தங்களை!

      Delete
  16. அரசாங்கப் பள்ளியைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாதது மிகவும் வருந்தத்தக்கது. என்று தணியும் இந்த தனியார் பள்ளிகளின் மோகமோ???

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அதே ஆதங்கம் தான். இந்த மோகம் மாற அரசு பள்ளிகளும் தரம் உயர்த்திக்கொள்ள வேண்டும். அதற்கு அரசு உதவ வேண்டும். மிக்க நன்றி சகோதரர்..

      Delete
  17. பொறுப்பிலாத பள்ளி நிர்வாகத்தால் சிறுமி மறைந்தது பதைபதைக்கச் செய்கிறது. ஆனாலும் இந்த நிலைக்கு பெற்றோரின் பொறுப்பின்மை தான் முதல் காரணமாக ஆகி விட்டது. இருவரின் தவறால் சிறுமி இறந்தது பெருங்கொடுமை!

    அருமையான விழிப்புணர்வு பதிவு!

    ReplyDelete
    Replies
    1. சகோதரிக்கு வணக்கம்
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்வளிக்கிறது. வருகை தொடரட்டும். ஆம் சகோதரி அலட்சியம் என்பது பள்ளி நிர்வாகம், பெற்றோர், அரசு என பலதரப்பிடமும் இருக்கிறது. இந்த அவலம் மாற வேண்டும்.

      Delete
  18. மனம் வலிக்கும் பதிவு..
    என்னத்தை சொல்லவது
    செய்வதற்கு நிறையவே இருக்கின்றன...

    ReplyDelete