அரும்புகள் மலரட்டும்: அலட்சியமாகும் சாலை விதிகள்

Sunday, 15 December 2013

அலட்சியமாகும் சாலை விதிகள்


வணக்கம் நண்பர்களே
இன்று மாலை நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டு வீடு திரும்புகையில் விராலிமலையில் சாலையில் ஒரே கூட்டமாக இருந்தது. நானும் எனது நண்பர்கள் இருவரும் என்னவென்று சென்று பார்க்கையில் விபத்து நடந்துள்ளது விபத்தில் அடிபட்டவர் சுமார் 38 வயது மதிக்கத்தக்கவரும் எட்டாம் வகுப்பு படிக்கும் அவரது மகளும் விபத்துக்குள்ளாகி உள்ளனர். கூடி நின்ற கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

விபத்துக்குள்ளானவருக்கு தலையிலும் மார்பிலும் அடிப்பட்டிருந்தது தலையில் குருதி ஒழுக்கு ஏற்பட்டு வெளியேறுகிறது ஒரு துண்டினால் அந்த பகுதியைக் கட்டி ஒழுக்கைக் குறைத்தனர். இருப்பினும் அவரே பேசினார் ஊர்ப்பெயர் தெரிவித்தார். எனது நண்பர் 108 ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்து வரவழைத்து விட்டார். நாங்களும் அங்கிருந்த நல்ல உள்ளங்களும் வாகனத்தில் ஏற்றி கூட்டத்திலிருந்த அவரது ஊர்க்காரர் ஒருவரை துணைக்கு அனுப்பி பெருமூச்சு விட்டு வீடு திரும்பினோம்.
அதன் பிறகு இரவு எனது நண்பர் அலைபேசியில் அழைத்து விபத்துக்குள்ளாவனர் இறந்து விட்டார் எனும் அதிர்ச்சி செய்தியை வேதனையோடு பகிர்ந்து கொண்டார். என் மனம் உறைந்து போனது அடிப்பட்ட போது அவரது மகள் அப்பா அப்பா என்று அலறித் துடித்தாளே அவளை அப்பாவிற்கு ஒன்னும் ஆகாது என்று சமாதானம் படுத்தினோமே இப்ப எல்லாம் பொய்யாகிப் போனதே என மனம் அதிர்ச்சியில் உறைந்து போனதை என்னவென்று சொல்வேன். விபத்திற்கு காரணம் எதிரே கோழி ஏற்றி வந்த வாகனத்தின் அதிவேகம் தான். பயணித்தவர் தலைக்கவசம் அணியவில்லை. அணிந்திருந்தால் உயிரழப்பைத் தவிர்த்திருக்கலாம். என்ன செய்வது?

அந்த நிகழ்வில் இருந்து மீளாமல் விபத்துகளைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளைப் பகிர்கின்றேன்..

இந்த விபத்துகளுக்கு இரண்டு முக்கியமான காரணங்களைச் சொல்லலாம். முதலாவது மோசமான சாலைகள்; இரண்டாவது ஓட்டுனர்களின் அஜாக்கிரதை. சாலை விதிகளின்படி நீங்கள் வாகனத்தை ஓட்டினாலும்கூட, நீங்கள் சற்றும் எதிர்பாராத வகையில் சாலையின் குறுக்கே ஒரு பெரிய பள்ளம் எதிர்ப்படக்கூடும் அல்லது பைக்கோ, காரோ, ஒரு சைக்கிளோ திடீரெனக் குறுக்கே வரக்கூடும். எனவே, பாதுகாப்பாக ஓட்டுவது உங்கள் கையில் மட்டுமே இருக்கிறது. இதற்கு உதவுவதுதான் தற்காத்து ஓட்டுதல் (டிஃபென்ஸிவ் டிரைவிங்).

ஏன் – தற்காத்து ஓட்டுதல்?

தற்காத்து ஓட்டுதல் என்பது சாலைக்கு ஏற்றவாறும், மற்றவர்கள் எப்படி மோசமாக ஓட்டி வந்தாலும், அதை உணர்ந்து உங்களையும் தற்காத்துக்கொண்டும், மற்றவர்களையும் பாதிக்காமல் ஓட்டுவது. இதுதான் உண்மையில் மிகச் சிறந்த டிரைவிங் திறன். இது, உங்களை மட்டுமல்ல, சாலையில் செல்லும் மற்றவர்களையும் காக்கும்.

முன்னே செல்லும் வாகனத்தை மிக நெருக்கமாகப் பின்தொடர்வது; கவனக்குறைவாக ஓட்டுவது; சூழ்நிலைக்கேற்ப ஓட்டும் ஸ்டைலை மாற்றிக்கொள்ளாமல் இருப்பது; டிரைவிங்கில் போதுமான முன் அனுபவம் இல்லாதது; ஒழுங்கில்லாமல் ஓட்டுவது; வாகனத்தைச் சரியாகப் பராமரிக்காமல் இருப்பது என விபத்துகள் ஏற்படுவதற்கான நிறையக் காரணங்கள் உள்ளன.

விபத்தைத் தடுப்பது எப்படி?

தற்காத்து ஓட்டுதலில் மிக முக்கியமானது, திட்டமிடுதல். காரை எடுத்தோம், போக வேண்டிய இடத்துக்குப் போனோம் என்று இல்லாமல், காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பு எவ்வளவு தூரம் பயணிக்க இருக்கிறோம்; கார் நல்ல நிலைமையில் இருக்கிறதா என ஒரு சின்ன செக் லிஸ்ட்டை மனசுக்குள் பூர்த்தி செய்துகொள்வது அவசியம்.

அதிக வேகம் எப்போதும் வேண்டாமே!

செய்தித் தாள்களில் படித்திருப்பீர்கள். ‘அதிக வேகத்தில் சென்ற கார், திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது!’ அதிக வேகத்தால்தான் 90 சதவிகித விபத்துகள் நடக்கின்றன. நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும்போது, ஓர் ஆடு குறுக்கே வந்தால்கூட தடுமாறிவிடுவோம். காரணம், வாகனத்தின் வேகம் கட்டுப்படுத்த முடியாதபடி அதிகமாக இருப்பதுதான்.

விழிப்பான நிலையில் இருங்கள்:

பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம், மோசமான சாலையோ அல்லது வாகனத்தின் தரமோ அல்ல; ஓட்டுபவரின் கவனக் குறைவே! விபத்து நடந்த பிறகு ‘அந்த மினி வேன் எப்படிக் குறுக்க வந்ததுன்னே தெரியலை சார்!’ என்பது போன்ற அங்கலாய்ப்புகள் நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்வதுதான்பொதுவாக, இது போன்ற விபத்துகள் ஓட்டுபவர்களின் கவனக் குறைவால்தான் ஏற்படுகின்றன. எதையாவது மனதில் நினைத்துக்கொண்டே ஓட்டினால், கவனக் குறைவுதான் ஏற்படும். எனவே, களைப்பைப் போக்கிவிட்டு புத்துணர்வுடன் வாகனத்தை ஓட்ட வேண்டும்.

யாரையும் நம்பாதீர்கள்:

உங்களைத் தவிர, வேறு யாருக்குமே சாலை விதிகள் தெரியாது என நினைத்துக்கொள்ளுங்கள். எதிரே வரும் இன்னொரு வாகனத்தால் வரும் பிரச்னைகளை, முன்கூட்டியே யூகித்துத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், எதிரில் வரும் வாகனத்தின் ஓட்டுனர் என்ன மன நிலையில் இருப்பார் என்பது உங்களுக்குத் தெரியாது.
யார் கண்டது… அவர் குடி போதையில்கூட இருக்கலாம்; அரைத் தூக்கத்தில்கூட வாகனத்தை ஓட்டிக்கொண்டு வரலாம்; ஓட்டப் பழகிக்கொண்டு இருக்கும் ஒரு சிறுவனாகக்கூட இருக்கலாம். அவர்களை நம்பாமல், அவர்களால் எது வேண்டுமானாலும் நடக்கும் என நினைத்துக்கொண்டு எச்சரிக்கையுடன் ஓட்டுவது நம் அனைவருக்குமே நன்மை!

.


21 comments:

  1. புதுக்கோட்டைப் புறநகரில், தஞ்சைச் சாலையில் இருக்கும் எங்கள் வீட்டிலிருந்து, புதுக்கோட்டை நகருக்குள் நுழையும் இடத்திலிருந்து ஜீவா நகர் என்னும் அடுத்த நிறுத்தத்தை அடைவதற்குள் கிடுகிடு இறக்கம்... எனவே, வாரத்திற்கு ஒன்றிரண்டு வாகன விபத்தைப் பார்த்துப் பார்த்து நொந்துபோயிருக்கும் எனக்கு உங்கள் பதிவு மிகவும் சரியாகப் படுகிறது. எல்லாவற்றையும் அரசே செய்துவிட முடியாது. மக்களுக்கும் பொறுப்பு உள்ளது - குறைந்தபட்சம் தன் உயிர்மீதாவது.

    ReplyDelete
  2. விபத்தில் இறந்தவருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...

    விபத்தை தடுக்கும் பொறுப்பு மக்களிடமும் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

    ReplyDelete
  3. //உங்களைத் தவிர, வேறு யாருக்குமே சாலை விதிகள் தெரியாது என நினைத்துக்கொள்ளுங்கள். எதிரே வரும் இன்னொரு வாகனத்தால் வரும் பிரச்னைகளை, முன்கூட்டியே யூகித்துத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், எதிரில் வரும் வாகனத்தின் ஓட்டுனர் என்ன மன நிலையில் இருப்பார் என்பது உங்களுக்குத் தெரியாது.

    யார் கண்டது… அவர் குடி போதையில்கூட இருக்கலாம்; அரைத் தூக்கத்தில்கூட வாகனத்தை ஓட்டிக்கொண்டு வரலாம்; ஓட்டப் பழகிக்கொண்டு இருக்கும் ஒரு சிறுவனாகக்கூட இருக்கலாம். அவர்களை நம்பாமல், அவர்களால் எது வேண்டுமானாலும் நடக்கும் என நினைத்துக்கொண்டு எச்சரிக்கையுடன் ஓட்டுவது நம் அனைவருக்குமே நன்மை!//

    மிகவும் அழகாக அருமையாகச் சொல்லி முடித்துள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்தப் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. வணக்கம்
    சகோதரன்
    சாலை விபத்து பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்...இறுதியில் சொன்னது

    உங்களைத் தவிர, வேறு யாருக்குமே சாலை விதிகள் தெரியாது என நினைத்துக்கொள்ளுங்கள்

    இயற்கையாக உயிர் இழப்பதை விட உலகம் முழுதும் சாலை விபத்தில் உயிர் இழப்பது அதிகம் அருமையான விழிப்புணர்வுப் பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. வணக்கம்
    சகோதரன்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. இறந்தவர் ஆத்மா சாந்தியடையட்டும். இனியொரு இழப்பு இதுபோல் ஏற்படாதிருக்க உங்கள் வழிகாட்டல் பயனளிக்கட்டும்

    ReplyDelete
  7. அன்புச் சகோதரா வணக்கம்
    மனம் வருந்தி எழுதியது எல்லோர்க்கும் பயன்படும .நீங்கள் சொல்வது சரியே விதி முறைகள் நமக்காக ஏற்படுத்தப் பட்டவையே. அதை சரியாக தொடர்ந்தாலே போதும் தவறுகளையும் விபத்தையும் தடுக்கலாம்.எல்லாம் திட்டமிட்டு அழகாக எழுதியிருகிறீர்கள் ஆசிரியர் அல்லவா. இப்படி ஒவ்வொருவரும் நினைத்தால். பிரச்சனையே இருக்காது .நல்ல விடயம் எடுத்து வந்தீர்கள். அருமை தொடர வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
  8. உங்களைத் தவிர, வேறு யாருக்குமே சாலை விதிகள் தெரியாது என நினைத்துக்கொள்ளுங்கள். எதிரே வரும் இன்னொரு வாகனத்தால் வரும் பிரச்னைகளை, முன்கூட்டியே யூகித்துத் தவிர்க்க வேண்டும்//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    நல்ல பயனுள்ள எச்சரிக்கைப் பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. மிக நல்ல பதிவு.... சகோ...
    இதை எழுதத் தூண்டிய காரணமும் மனதை வெகுவாக பாதித்தது ...
    தொடர்புடைய இன்னொரு விஷயம் சகோ...
    ஒரு நாலாம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்பில் படிக்க முடியாமல், கல்வி செயல்பாடுகளில் ஒன்ற முடியாமல் போகும் பலர் தேர்ந்தெடுக்கும் துறைகளில் ஒன்று ஓட்டுனர்..
    பள்ளியில் கல்வி முறை மாற்றம் கற்பித்தல் முறை மற்றம் அவசியம் வந்தால் இந்த மாதிரி மாணவர்கள் பள்ளியை விட்டு நிற்பது குறைந்தால் பாதி சாலை விபத்துக்கள் குறையும்...
    நல்ல பதிவு சகோ ... வாழ்த்துக்கள்

    விரைவில் ஒரு எழுச்சிக் கவிதையை எதிர்பார்கிறேன்...

    ReplyDelete
  10. பதிவை படித்ததும் மனம் அழுதது.....நீங்கள் சொன்ன அறிவுரைகள் படிக்க மட்டும்மல்ல அதை வாழ்வில் செயல்படுத்தவே என்பதை நாம் உணர்ந்தால் விபத்துக்களில் நாம் தப்பிக்கலாம்

    நல்ல பகிர்வை பகிர்ந்தற்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  11. முதல் தரமான ஆலோசனைகள். அருமை.
    //பயணித்தவர் தலைக்கவசம் அணியவில்லை. அணிந்திருந்தால் உயிரழப்பைத் தவிர்த்திருக்கலாம். என்ன செய்வது?//
    இங்கெல்லாம் தலைக்கவசம் அணிவது பற்றி சொன்னாலே முறைக்கிறாங்களே என்ன செய்வது:(

    ReplyDelete
  12. சரியாக மிகச் சரியாகச் சொன்னீர்கள்... அனைவரும் உணர வேண்டும்... நன்றி... பாராட்டுக்கள்...

    தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி...

    விளக்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

    ReplyDelete
  13. பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் ஓட்டுனர்களின் அஜாக்கிரதையே.அரசுதான் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்

    ReplyDelete
  14. நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு!! அதுவும் இறுதியில் சொல்லப்பட்டதுதான் ஹைலைட் "யாரையும் நம்பாதீர்கள்" என்று!!! தினமும் இது போன்று ஏகப்பட்ட விபத்துக்களும், மரணங்களும் குடும்பம் திணறுதலும். தமிழ் நாட்டின் சாலைகள் கொலைக்களங்கள் ஆகி வருகின்றனவா என்றும் சாலை விபத்துக்களில் இந்தியாவில் தமிழ்நாடுதான் முன்னோடி என்றும் செய்தித் தாளில் கூட செய்தி வந்தது தெரிந்ததே! நல்லதொரு பதிவு! வாழ்த்துக்கள்! தொடர்கிறோம்! நண்பர்களுடன் சேர்ந்து கட்டுரைப் போட்டி நடத்துவதற்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  15. சரியான வார்த்தைகள்..

    என்னதான் விழிப்புடன் இருந்தாலும் - மூடர்களாகிய சிலரால் விதிமுறைகளை மாறாதவர்களும் பாதிக்கப்படுவது உண்மைதான்!..

    ஒவ்வொருவரும் திருந்த வேண்டும். தஞ்சையில் பள்ளியக்ரஹாரம் பகுதியில் பல லட்ச ரூபாய் செலவில் ரவுண்டானா அமைத்தும் அங்கே விபத்துக்கள் தொடர்கின்றன. அருகேயே எமனின் ஏஜண்டுகளான டாஸ்மாக்!.. ஒழுங்காக வளைவில் சென்று திரும்புவதே இல்லை. சைக்கிள் காரனும் சரி.. மற்ற எவனும் சரி.. கொலை வெறியுடன் குறுக்கே பாய்ந்து செல்வதையே கொள்கையாகக் கொண்டிருக்கின்றார்கள். அங்கே போலீஸ் காவலும் இல்லை..

    வயிற்றெரிச்சலுடன் - நேரில் கண்ட காட்சி இது!..

    ReplyDelete
  16. உதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டீர்கள் என்பதை படித்ததும் நிம்மதியான நான்... அடுத்த தகவலை படித்து அதிர்ச்சியாகிவிட்டது. இதற்காகவே சாலை விழிப்புணர்வு கதை கூட எழுதி இருந்தேன். தற்காத்து ஓட்டுதலை பற்றி நன்றாக அறிவுறுத்தி உள்ளீர்கள். அதுவும் வேலூர் மாவட்டங்களில் அதிக விபத்துக்கள் நடந்து கொண்டிருப்பது வேதனையாக இருக்கிறது. எல்லோரும் திருந்தனும்.... நன்றி சகோ உங்க விழிப்புணர்வு கட்டுரைக்கு!

    ReplyDelete
  17. சாலை விபத்துக்களை தினமும் செய்தித்தாள்களில் படித்துப் படித்து மனம் ரொம்பவே நொந்து போகிறது. வாகனம் இருக்கிறதே என்று தாமதமாகக் கிளம்புகிறார்கள் - என்ன செய்வது இவர்களை? எல்லோரும் பொறுப்பு ஏற்கவேண்டும். அவசரமாகப் போகவேண்டுமென்று no entry ரோடுகளிலும் போகிறார்கள். ஒவ்வொருவரும் திருந்த வேண்டும். மனித உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

    ReplyDelete
  18. எதிரே இருப்பவர்க்கு சாலைவிதியே தெரியாது என்று எண்ணிக்கொள்ள வேண்டும்.சரியான ஆலோசனை .சாலையில் குறுக்கே திடிரென வெளிப்படும் நாய் ,ஆடு போன்றவற்றை என்ன செய்யலாம் .நாம் குறைந்த வேகத்தில் ஓட்டுவத்தை தவிர? நான் தினமும் இப்படி ஆடு மேய்த்து விட்டு தான் பள்ளி செல்ல வேண்டிஉள்ளது .!!??

    ReplyDelete
  19. விபத்துக்கள் விபரீதங்கள் விளையாடிவிடும் வாழ்க்கை
    மிக நன்றாகவே அறிவேன் சகோதரா!

    வாழ்வே இல்லாமல் வீணாகிப் போகுதே
    விபத்து நேர்ந்தவருக்கும் அவரோடு சேர்ந்தவர்களுக்கும்....:(

    மிக மிக அருமையான விழிப்புணர்வுப் பதிவு!

    வாழ்த்துகிறேன்! தொடரட்டும் உங்கள் தூய பணி!....

    இன்னொருவகை விபத்திற்கு விலையாகிப்போன வாழ்வோடு போராட்டம்...
    இங்குவந்து கருத்திடத் தாமதம் இம்முறையும்... :(

    ReplyDelete
  20. //உங்களைத் தவிர, வேறு யாருக்குமே சாலை விதிகள் தெரியாது என நினைத்துக்கொள்ளுங்கள்// நான் கார் ஒட்ட தொடங்கியதும் என் அண்ணன் எனக்கு சொன்ன அறிவுரை இதுதான்.

    ReplyDelete