அரும்புகள் மலரட்டும்: இதுவே இறுதி

Wednesday 2 March 2016

இதுவே இறுதி


அன்றாட வாழ்வில் பெரும்பாலான பணிகளை நாளைக்கு ஒத்தி வைக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. நாளைக்காக இன்றைய சந்தோசத்தைத் தொலைத்துக் கொண்டிருப்பவர்களும் நாம் தான். எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் நிகழ்காலத்தின் இன்பங்களைப் பருக மறுப்பதும்/ மறப்பதும் நாம் தான். வாழ்வில் நமக்கு கிடைக்கிற ஒவ்வொரு தருணங்களாக இருந்தாலும் சரி வாய்ப்புகளாக இருந்தாலும் சரி இதுவே நமக்கு கிடைத்த இறுதி தருணமாகவும் வாய்ப்பாகவும் நாம் பார்க்கத் தொடங்கினால் நிச்சயம் பயன் கிட்டும்.

எவன் ஒருவன் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பினை இறுதி வாய்ப்பாக எண்ணி செயல்படுகிறானோ அவனே வெற்றி பெறுகிறான். எவன் ஒருவன் ஒரு நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் பொன்போல் மதித்து பயன்படுத்துகிறானோ அவனே அந்நாளின் கதாநாயகன் ஆகிறான் என்பது உண்மை.

போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் அன்று தான் இணையதள மையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்றே இப்படம் கடைசி எனும் அறிவிப்பு அன்று தான் திரையரங்கங்கள் நிரம்பி வழியும். நாளை நாளை என்று நாள்களைக் கடத்தி விட்டு இறுதி நாளில் முட்டி மோதுவதை வழக்கமாக கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும்.. நாளை என்ற ஒன்று இருப்பதால் தான் இன்று என்பது அலட்சியமாகப் பார்க்கப்படுகிறது.

நாளை என்ற ஒன்று இல்லை, இன்று என்பதே நிஜம் என்பதை நாம் மனதளவில் ஏற்றுக் கொண்டு செயல்பட்டால் காரியங்கள் கைகூடுவது நிச்சயம். இன்று மட்டும் நிஜம் என்று எண்ணுகிறவனுக்கு நாளை என்பது கனவு. நாளை என்பது கூட இன்று என்று ஆகிற போது தான் அது நிஜமாகிறது. ஆகவே ஒவ்வொரு நாளும் இன்று என்றெண்ணி அன்றைய வேளையை அன்றே முடித்துக் கொள்பவனுக்கு நாளை பற்றிய சிந்தனைகளும் இல்லை பயமும் இல்லை.

நன்கு உழைப்பவனுக்கு நாளை என்பது இன்றைய நீட்சியே என்பதை நாமும் உணர்ந்து நாளைக்கு பார்ப்போம் எனும் வாசகத்தை வாழ்க்கையிலிருந்து அகற்றி விட்டால் வாழ்வெனும் சோலையிலே ஒவ்வொரு நாளும் வசந்த பூக்கள் மலர்ந்து மணம் பரப்புவது நிச்சயம். உங்களது வாழ்க்கையிலும் வசந்த பூக்கள் வாசம் வீச வாழ்த்துகள். நன்றி.

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

1 comment:

  1. சிறப்பான எண்ணங்கள்.... பாராட்டுகள் நண்பரே.

    ReplyDelete