Tuesday, 28 January 2014

கொள்ளையடிக்கும் செல்போன் நிறுவனங்கள்


இன்றைய உலகில் அடிப்படை தேவையான உணவு, உடை, உறைவிடம் இவற்றோடு அலைபேசியும் சேர்ந்து கொண்டுள்ளது. செல்போன் இல்லாதவர்கள் செல்லாதவர்கள் என்றே சொல்லும் அளவிற்கு தற்போதைய நிலை உருவாகி வருகிறது. இதை பயன்படுத்தி செல்போன் நிறுவனங்கள் செய்யும் மோசடிகளைத் தான் இங்கு விழிப்புணர்வு கட்டுரையாக தரலாம் என்று எண்ணி எழுதியிருக்கிறேன். வலுவான காரணிகள் இருந்தாலும் அனைவரும் சந்தித்த சாதாரணமான காரணிகளையே எடுத்து எழுதியுள்ளேன்.

சிம் கார்டு வழங்கும் அதே நிறுவனங்களே தற்போது செல்போன்களும் விற்க தொடங்கி விட்டன. அவ்வாறு அவர்கள் விற்கும் செல்போன்கள் வாங்கினால் பலவிதமாக சலுகைகள் தருவதாக அறிவித்து தனது வியாபாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். இதில் தவறில்லை. ஆனால் அப்படிப்பட்ட செல்போன்கள் கதிர்வீச்சு அளவு பாதுகாப்பானதா என்பது நாம் கவனிக்க வேண்டியது. பெரும்பாலும் கதிர்வீச்சு அளவு குறித்து மொபைல்போன் விற்கப்படும் பெட்டியின் மீது அச்சடித்தோ, தனியாக அட்டையில் இணைத்தோ அறிவிப்பது இல்லை. இப்பொழுது தான் மத்திய அரசின் சுகாதார துறை செல்போன் நிறுவனங்கள் தங்களின் பொருளின் கதிர்வீச்சு அளவைத் தெரிவிக்க வேண்டுமென்று உத்தரவிட மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுருப்பதாக செய்தி. விரைவில் நடைமுறைக்கு வந்தால் நலமாக இருக்கும்.

நகர்புறங்களில் நன்றாக இருக்கும் டவர் கிராமப் புறங்களில் நன்றாக எடுப்பது இல்லை. ஆனால் அதே கட்டணத்தைத் தான் கிராமப்புற வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கின்றனர். அப்படியென்றால் நுகர்வோர் ஏமாற்றப்படுகிறார் என்று தானே அர்த்தம். எது எதுக்கோ பொதுநல வழக்கு தொடரும் நமது நண்பர்கள் இதையும் கவனித்தால் நன்றாக இருக்கும்.

வாடிக்கையாளருக்கு தெரியாமலே அவர்களின் பணத்தை எடுக்கும் வித்தையை செல்போன் நிறுவனங்களில் தனி அறையில் அமர்ந்து யோசிப்பாங்க போல.

பொதுவாக கடைக்கு சென்று சிம்கார்டு வாங்கும் பொழுது குறிப்பிட்ட நிறுவனத்திற்கு பேசினால் 10 பைசா மற்ற நிறுவனங்களுக்கு பேசினால் 30 பைசா என்றேல்லாம் கூறி நம் தலையில் கட்டி விடுகிறார்கள். ஆனால் நாம் பயன்படுத்தும் போது செல்போன் நிறுவனங்கள் கண்ணுக்கு தெரியாத சிறிய அளவில் போட்டிருக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது எனும் வாசகம் பெரிய அளவில் செயல்பட ஆரம்பித்து விடுகிறது. முதல் கால் கட்டாயம் ஒரு ரூபாய் அதற்கு அப்புறம் அழைக்கப்படும் கால்களுக்கு 10, 30 பைசா என்பது பொருந்தும் என்று கூறி நம்மை ஏமாற்றுகிறார்கள். அதுவும் முதல் குறிப்பிட்ட நொடிகள் பேசினால் மட்டுமே அந்த நாள் முழுவதற்கும் மேற்சொன்ன கட்டணம் பொருந்தும். நம்ம விவரமா ஒரு சில நொடிகளில் துண்டித்து விட்டு விட்டோமானால் அந்த நாள் முழுவதுக்கும் அந்த கட்டணம் பொருந்தாதாம்.

அதே போல குறுஞ்செய்தி அனுப்பதற்கும் தனியாக பணம் செலுத்தியிருந்தாலும் ஒரு நாளின் முதல் குறுஞ்செய்திக்கு 50 பைசா கட்டணம் பிறகு அனுப்பும் செய்திகளுக்கு பூஸ்டர் கார்டு வேலை செய்யும். அதுவும் விழாக்காலங்களில் கட்டணம் வசூலிப்பது கொள்ளையடிக்கும் நிகழ்வு இல்லையா! ஆண்டு முழுவதும் நம்மை வைத்து சம்பாரித்து சந்தோசமாக இருந்து விட்டு நாம் சந்தோசமாக இருக்கும் அந்த குறிப்பிட்ட விழா தினங்களில் கட்டணம் வசூலிப்பது கொள்ளை தான்.

நாம் ஒருவருக்கு அழைப்பு விடுக்கும் போது அவர் வைத்திருக்கும் காலர் டியூன் நமக்கு கேட்டால் பரவாயில்லை. அதற்கு முன்பு இந்த காலர் டியூன் பிடித்திருந்தால் ஒன்றை அழுத்துங்கள், இரண்டை அழுத்துங்கள் என்று சொல்லி நம்மை நேரத்தை வீணடிப்பது சரிதானா!
அவசரத்துக்கு போன் செய்து இது போன்ற கொடுமைகளையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது. கையை வைத்து தெரியாம அழுத்தி விட்டால் அந்த பாடல் (கொடுமை) நமக்கும் வந்து விடும். காசு பறிக்கப்படும்.

அது போல காலையில் முதல் தடவை நாம் அழைக்கும் போது கணினி குரல் அது என்னமோ பேசுது அது பேசி விட்டா தான் நாம் பேச முடியுது. நமக்கு ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் எண்ணிற்கு அழைத்தால் தமிழுக்கு ஒன்றை அழுத்தவும், பிரதிநிதியிடம் பேச 9 அழுத்துங்கள், அவர் பிஸியா இருக்கிறார் கட்டாயம் பேச வேண்டுமென்றால் 1 அழுத்தி உறுதி செய்யுங்கள் இவ்வளவும் செய்யறதுக்குள்ள அதுவாவே அந்த கால் கட் செய்யப்பட்டு விடும். இப்படி அவர்களை அழைப்பதற்கு மாதத்தில் மூன்று முறை தான் பயன்படுத்த வேண்டும் எனும் எழுதப்படாத விதி இருக்கிறதாம். அப்புறம் அழைத்தால் கிடைக்காது.

ஒவ்வொரு செல்போன் நிறுவனங்களும் வியாபாரம் என்ற பெயரில் நம்மிடம் கொள்ளையடிக்க பல்வேறு சூத்திரங்களைப் பயன்படுத்தி ஒரு விடையைத் (கொள்ளையைத்) தான் பெறுகிறார்கள். ஏமாறுவது என்னமோ நாம் தான். டிராய் அமைப்பு இதை கண்டும் காணாமலும் இருப்பது ஏன் என்பது அதன் செயல்பாட்டில் நமக்கு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. நாம் தான் விழித்தெழ வேண்டும். நன்றி.


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

50 comments:

 1. நியாயமான கருத்துக்கள்.. விழிப்புணர்வு பெறவேண்டும் மக்கள்.
  நல்ல பதிவினைத் தந்திருக்கின்றீர்கள்..

  ReplyDelete
  Replies
  1. விரைவான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஐயா. கண்டிப்பாக நம்மிடம் இது பற்றிய விழிப்புணர்வு அவசியம்.

   Delete
 2. செல் இல்லாதவன் புல் என்பதே புதுமொழி.

  ஆயிரத்துக்குக்கொஞ்சம் கூடுதலாக வச்சுருந்த கணக்கைக்கூட ஆறுமாசம் ஃபோனை பயன்படுத்தவில்லை என்ற காரணம் சொல்லி நம் எண்ணை வேறொருத்தருக்குக் கொடுத்துட்டு நம் பேலன்ஸை ஸ்வாஹா செஞ்சுருச்சு ஏர்டெல்:(

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா வருக
   கொள்ளையடிக்கும் செல்போன் நிறுவனங்கள் கொடுமை படுத்துவது சகித்துக்கொண்டும் இன்னமும் இருப்பது நமது அறியாமை தான்.

   Delete
 3. மிகச் சரியாகச் சொன்னீர்கள்
  விழிப்புணர்வூட்டும் அருமையான பகிர்வு
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   தங்களின் தொடர் வருகையும் கருத்தும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றீங்க.

   Delete
 4. என்ன தலை எழுத்தோ பில்லுக் காகவே உழைக்க வேண்டியதாக இருக்கிறது. அதுவும் வெளி நாடுகளில் சொல்லவே வேண்டாம் அப்பப்பா எத்தனை பில்.

  நல்ல விடயம் வழமை போல் நன்றி வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரியும் கருத்தும் வாழ்த்தும் என்றும் என்னோடு இருக்கும். வாழ்த்தியமைக்கு நன்றீங்க சகோதரி..

   Delete
 5. செல்லு இல்லாம போன நாம் சொல்லு எடுபடாம போயிடும் போல இருக்கே

  ReplyDelete
  Replies
  1. நன்றீங்க சகோதரர்
   சாதாரணமான செல் வைத்திருந்த கூட மதிக்கிறது இல்லை. விலை உயர்ந்த செல்போன் பயன்படுத்தனுமாம்.

   Delete
 6. இனிமே மாப்பிள்ளைவீடுகார்கள் வரதட்சணை கேட்குறதுக்கு பதிலாக 5 வருஷம் அல்லது 10 வருஷத்திற்கு மாமனார்தான் செல்போன் பில் கட்டணும் என்று கேட்க ஆரம்பிதுவிடுவார்களே

  ReplyDelete
  Replies
  1. இது கூட நல்லா தானே இருக்கு. இப்படி ஒரு சிந்தனை உங்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று நினைக்கிறேன். நகைச்சுவையோடு சிந்திக்க வைத்தமைக்கு நன்றி சகோதரர். தொடர்வோம்.

   Delete
  2. தன் பதிவுல மட்டுமில்ல பின்னூட்டம் போடும் போதும் கூட இந்த மாதிரி ஐடியாக்கள் எல்லாம் அள்ளித் தெளிக்க மதுரைத் தமிழனால்தான் முடியும் போல!

   Delete
 7. இந்தக் கொள்ளை அடிக்கும் கொடுமை எல்லா செல்போன் நிறுவனங்களும் ஆரம்பித்து பல வருடங்கள் ஆகி விட்டன... நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஆம் சகோதரர் ரொம்ப நாளா ஆகிடுச்சு நாமா சகித்துக் கொண்டு பழகியும் . நம்மைப் போன்றவர்கள் குரல் கொடுத்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும். நன்றி சகோதரர்.

   Delete
 8. trai இருக்கிறதா ?கொள்ளைக்காரனுக்கு காவல்காரனும் உடந்தை என்றால் மக்களின் கதி ?
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. ஆதாயம் இருந்தால் ஆகாயம் வரை கொள்ளை நடந்தாலும் கண்டுக்காத சூழல் தான் இங்கு பெரும்பாலும் நிலவுகிறது.

   Delete
 9. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு. போன் பேசாமலே நம் பணம கரைகிறது எப்படி என்று தெரியவில்லை. அலைபேசியில் சலுகை, அது இது என்று சொல்லும் நிறைய விஷ்யங்கள் புரியவே இல்லை.

  ReplyDelete
  Replies
  1. சலுகையெல்லாம் இல்லை அம்மா நம்மை காசு கரைப்பதற்கான திட்டங்கள் தான் அவைகள். வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி அம்மா.

   Delete
 10. செல்பேசி இல்லையென்றால் உலகமே இருண்டுவிடும் என்று நினைப்பவர்கள் இருப்பதால்தான் இத்தகைய நிறுவனங்கள் பிழைப்பு நடத்துகின்றன.

  ReplyDelete
  Replies
  1. நமது ஆசையை அவர்கள் காசுகளாக பார்த்து விடுகிறார்கள். அருமையாக சொல்லியுள்ளீர்கள் சகோதரர். நன்றி.

   Delete
 11. நியாயமான வாதங்கள். ஆனா, இதையெல்லாம் கேள்வி கேட்க நமக்கு நேரமில்ல!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி. நேரம் இல்லையென்று ஒதுங்கி கொள்வதால் தான் செபோன் நிறுவனங்கள் ரூம் போட்டு யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் போலும். வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றிக்ள்.

   Delete
 12. //சிறிய அளவில் போட்டிருக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது எனும் வாசகம் பெரிய அளவில் செயல்பட ஆரம்பித்து விடுகிறது.// உண்மை உண்மை உண்மை

  என்ன செய்வது நண்பா இந்தியராய் இருப்பதால் பெற்ற (அ)பாக்கியங்களில் இவையும் ஒன்று

  ReplyDelete
  Replies
  1. ஏன்.. வெளிநாடுகளில் மட்டும் என்ன வாழ்கின்றது?...

   Delete
  2. சகோதரின் வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றிகள்

   Delete
  3. ஐயாவிற்கு வணக்கம்
   நீங்கள் கூறுவது போல் எல்லா நாடுகளிலும் தான் நடக்கிறது. அங்கு கடுமையான சட்டங்களால் மக்கள் எதிர்ப்பு குரல் கொடுப்பதில்லை. ஆனால் நாம் தட்டிக் கேட்கவே யோசிப்பதில்லை.

   Delete
 13. இந்த கருமத்தை தொலைத்து கட்டி விட்டு பழைய நிலைக்கே திரும்ப முடியாதா!?..

  ReplyDelete
  Replies
  1. முற்றிலும் பயன்பாட்டைக் குறைக்க முடியாவிட்டாலும் பயன்படுத்தும் அளவைக் குறைத்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து.

   Delete
 14. செல்போன் கொள்ளை! ரொம்ப நாளாய் தொல்லை! நல்ல விழிப்புணர்வு பதிவு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரர்
   விழிப்புணர்வு ஏற்பட்டால் மகிழ்ச்சியே. நம்முள் பலருக்கும் தெரிந்த விடயத்தைத் தான் பதிவாக தந்துள்ளேன். கருத்துக்கு நன்றீங்க சகோ.

   Delete
 15. கொள்ளை போறது தெரிஞ்சாலும் வாரி கொடுத்துக்கிட்டேதான் இருக்கிறோம்.... தேவையில்லாம பயன்படுத்துவதை குறைச்சிக்கிட முடியுமா பாருங்க... நேர்ல பேசற நேரத்தை விட போன்ல மணிக்கணக்கா பேசறவங்கதான் அதிகம்.......

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரிக்கு நன்றி
   நீங்கள் கூறுவது போல் பயன்பாட்டைக் குறைத்தாலே பாதி பிரச்சனை முடிந்து விடும். ஆனால் மக்கள் செல்போனே கதி என்று இருப்பதால் நிறுவனங்கள் கொள்ளையடிக்கிறது. விழிப்பார்களா என்று பார்க்கலாம்.

   Delete
 16. வணக்கம்
  சகோதரன்....

  நீங்கள் சொல்வது உண்மைதான்....இந்தியாவில் மட்டும்மல்ல உலககெங்கும் உள்ளது..
  தங்களின் இந்த கட்டுரை பத்திரிகை மற்றும் மாத சஞ்சிகையில் வெளிவருமாக இருந்தால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும்... சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரர். பத்திரிக்கையில வருகிற அளவிற்கா என் எழுத்து உள்ளது. நீங்க காமெடி தானே பண்றீங்க. சும்மா. வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள் சகோதரர்

   Delete
 17. அரசியல்வாதிகளின் ஆதரவில் இருப்பதால் நம்மால் கேள்வி கேட்டும் பயனில்லாமல் போகிறது

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரர். நிச்சயம் பணபலம் வேலை செய்து விடுகிறது. இருப்பினும் நமது குரலை ஓங்கி ஒலிக்க செய்வோம்.

   Delete
 18. //செல்போன் இல்லாதவர்கள் செல்லாதவர்கள் //
  நான் செல்லாதவனாகவே காலத்தை ஓட்டுகிறேன். சென்ற யூலை இந்தியா வந்த போது, தொலைபேசி வசதியுடன் வீடு வாடகைக்குக் கொடுக்கும் வசதி அற்றுப் போனதால், எங்களுடன் வந்த இளைஞர்கள் "செல்" எடுத்து நீங்கள் சொன்ன அத்தனை தொல்லையும் அனுபவித்தார்கள். கனி,ராஜா, நிதிகளெல்லோரின் ஊழலில் திளைத்து வந்த "செல்" அதனால், நம்மைச் சுரண்டுகிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரர். நீங்கள் செல்லாதவர் இல்லை. உண்மையில் கொடுத்து வைத்தவர்கள். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்திருப்போம்.

   Delete
 19. ட்ராய் அமைப்பு என்று ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அது என்னவோ கேவலமான மாமியார் மாதிரி, “புள்ளை செத்தாலும் பரவாலல, மருமக தாலியறுக்கணும்” என்பது போலத்தான் இருக்கிறது! எல்லாம் பன்னாட்டுக் கைக்கூலிகளின் கைங்கர்யம்! நல்ல கட்டுரை பாண்டியன், தொடர்ந்து இதுபோலும் பொது விடயங்களில் உங்கள் எழுத்துக் கணைககள் பாயட்டும், வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   சரியாக சொன்னீர்கள். எல்லாம் பன்னாட்டு பணமுதலைகள் செய்யும் வேலை. தங்கள் கருத்து என்னை உற்சாகமடைய செய்வதோடு இன்னும் நிறைய எழுத வேண்டும் என்னும் உத்வேகத்தையும் அளிக்கிறது. நன்றீங்க ஐயா.

   Delete
 20. ஐயா!

  இப்படி இலங்கையிலும் இடம்பெறுகிறது.

  அது, இது, உது என உப்படித் தான் தொலைபேசி நிறுவனங்கள் மக்களைச் சுரண்டுகின்றன.

  சிறந்த பகர்வு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா வருக
   எல்லா நாடுகளிலும் இதே நிலைமை தான். கந்து வட்டியை விட கொடுமையாக வசூலித்து வருகிறார்கள். வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.

   Delete
 21. பொதுவாக எல்லோருடைய மனக்குறையையும் நீங்கள் ஒருவராக கொட்டிவிட்டீர்கள்...

  பாப்போம் விளைவுகளை.

  ReplyDelete
  Replies
  1. பொதுவாக எல்லோரும் அனுபவிக்கும் விடயங்களைப் பகிர்ந்திருக்கிறேன். பார்ப்போம் சகோதரர். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்..

   Delete
 22. மிகவும் நல்ல விழிப்புணர்வுப் பதிவு! தங்கள் கருத்துக்கள் எல்லாமே நியாயமே! நீங்கள் சொல்லுவது போல பொது நல வழக்குத் தொடுப்பவர்கள் இதையும் செய்தால் மிகவும் நன்றாகத்தான் இருக்கும்! யார் அதைச் செய்வார்கள்? எல்லா செல்ஃபோன் நிறுவனங்களும் அரசியல் பின்னணி இல்லாமல் இருக்குமா?

  ReplyDelete
  Replies
  1. டிராய் அமைப்பு வாடிக்கையாளர்களின் மீது அக்கறை செலுத்தி நடவடிக்கை எடுத்தாலே போதும். பார்க்கலாம் சகோதரர். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர்..

   Delete
 23. தங்களது கருத்துக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள கூடியவை. செல்போன் நிறுவனங்களின் தரப்பிலிருந்து இவற்றிற்கு என்னென்ன பதில்கள் சொல்ல போகிறார்கள் தெரியவில்லையே?

  உதாரணமாக கஸ்டமர் கேர் எண்ணிற்கு தேவையில்லாத போன்கால்களை தவிர்க்கவே மாதம் மூன்று முறை மட்டுமே பேச அனுமதி போன்ற விளக்கங்கள் முன் வைக்கப்படுகின்றன. மற்ற குறைகளுக்கும் அவர்கள் தயாராக பதில்கள் வைத்திருப்பார்கள். இவ்வளவு யோசித்து பணம் பறிக்க செய்பவர்களுக்கு பதில்கள் சொல்லவா தெரியாது?

  பகிர்வுக்கு மிக்க நன்றி.!

  ReplyDelete