அரும்புகள் மலரட்டும்: இயல்பு நிலை திரும்பட்டும்.

Friday 4 December 2015

இயல்பு நிலை திரும்பட்டும்.

வணக்கம் நண்பர்களே!
வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா 2015 முடிந்தவுடன் சகோதரர் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்து மழையில் மாட்டிக் கொண்டு அவரை மட்டும் பேருந்தில் அனுப்பி விட்டு நான் சுமார் 1.30 மணி நேரம் காத்திருந்தும் மழை நிற்காததால் நனைந்து கொண்டே வீடு சென்ற தருணமே எனக்கும் வலைப்பதிவர்களுக்குமான கடைசி சந்திப்பாக வெகு நாட்களாக இருந்து வந்தது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு நான் பணி மாறுதல் பெற்ற செய்தியறிந்து வலைப்பதிவர் தம்பதிகள் கஸ்தூரிரெங்கன் – மைதிலி இருவரும் முதன்மைக்கல்வி அலுவலர் வளாகத்திற்கே வந்து என்னை இல்லத்திற்கு அழைத்துச் சென்று உணவளித்தும் அனுப்பி வைத்த தருணம் இன்னும் என் நினைவில். இடையில் புதுககோட்டை செல்லும் போது சகோதரி திருமதி. மாலதி அவர்களை வழியில் சந்தித்ததும் மறக்க முடியாத நிகழ்வு.

அ.வே.நாராயணசாமி செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி- ஜி.அரியூரில் தற்போது பணிபுரிந்து வருகிறேன். வீட்டிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவு. நல்லபடியாக நாள்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்று வரை வலைப்பதிவர் திருவிழா பற்றி நான் எழுதவில்லை காரணம் எனது சூழல் என்பதை நண்பர்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். இனி காலம் தாழ்த்தி எழுவது நகைப்புக்குரியதாக அமைந்து விடும் என்பதால் விட்டு விட்டேன். இது குறித்து புதுக்கோட்டை நண்பர்கள் என் மீது வருத்தத்தில் இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். தங்களது வருத்தம் நியாயமானது தான். இருப்பினும் எனது சூழலும் என் மனமும் தங்களுக்கு புரியும். இது நிற்கட்டும்..



தற்போது சென்னை மழை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் எல்லாம் மிதந்து கொண்டிருக்கிறார்கள். எங்கெங்கும் உதவி உதவி எனும் குரலே ஒலித்துக் கொண்டிருக்கிறது. முதியவர்கள், கற்பிணி பெண்கள், குழந்தைகள் நிலையை நினைத்தாலே நெஞ்சம் பதைக்கிறது. உதவும் தூரத்தில் இல்லையெனும் ஏக்கமும் மனதில் குடி கொண்டிருக்கிறது. ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு எல்லாம் பொதுமக்களின் பேராசை என்று ஒற்றை வரியில் சொல்லி விடுகிறார்கள். அது மட்டுமல்ல உண்மை இதுவரை ஆண்ட அரசுகளே பொறுப்பு. அதிகாரிகள் பணம் வாங்கிக் கொண்ட கட்டிடங்கள் கட்ட அனுமதி அளித்திருக்காவிட்டால் அவர்கள் அதை மீறியா கட்டிவிட போகிறார்கள்?. அனுமதி அளித்ததும், கண்டு கொள்ளாமாலும் விட்டது யார் தவறு. தொழிற்சாலைகளை எல்லாம் சென்னையிலேயே தொடங்க அனுமதித்தது யாருடைய தவறு. தற்போது குறை சொல்வது பொறுத்தமாக இருக்காது என்பதால் இவற்றையெல்லாம் வேறொரு பதிவில் பார்த்துக் கொள்வோம். இதே போன்று கடலூரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்னபிற பகுதிகளுக்கும் நிவாரணம் தேவை. அதற்காக பொதுமக்களே நிதி திரட்டுவதும் அவர்களுக்கான உதவிகளைச் செய்வதும் இன்னும் மனிதம் உயிர்ப்புடன் இருப்பதை நிருபித்துக் கொண்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நிவாரணம், மறுசீரமைப்பு ஆகியவற்றை அரசு முடுக்கி விட வேண்டும். இரவு பகல் பாராது, தனது குடும்பம் மறந்து, உறக்கம் மறந்து வெள்ளத்தினால் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்டெடுக்கும் சென்னை மாநகர ஊழியர்கள், ராணுவம், காவல்துறை நண்பர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு நண்பர்கள், தேசிய மற்றும் மாநில இயற்கை பேரிடர் குழு நண்பர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஆங்காங்கே உணவு சமைத்தும், கொண்டு போய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வரும் நல்ல உள்ளங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். மனித நேயமிக்க நல்லவர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

சென்னை மற்றும் பிற நகரங்களில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட நமது பதிவர் நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்காக நமது இறை வேண்டல் தொடரட்டும். விரைவில் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பட்டும்.

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

7 comments:

  1. வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த அனைத்து இடங்களும் விரைவில் சீராக வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்...

    ReplyDelete
  2. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடர் தொடர்பாக வெளி வந்து கொண்டிருக்கும் செய்திகளும், புகைப்படங்களும் எமக்கு கவலை அளிக்கிறது. எங்கள் தொப்புள்கொடி உறவுகளின் துயர் மறைந்து அவர்கள் வாழ்வு வளம் பெற இறைவனை வேண்டுகிறோம்.

    ReplyDelete
  3. வணக்கம்

    வெள்ளத்தில் பாதிப்படைந்த மக்களின் இயல்பு வாழ்க்கை சீராக அமைய இறைவனை வேண்டு வோம் சகோ..
    ,ஈழத்தில் குண்டுமழையில் அழிந்தான் தமிழன்
    தமிழகத்தில் இயற்கையால் அழிகிறான் தமிழன்... கவலையான விடயந்தான்.. சகோ.. தொலைக்காட்சிகளை பார்த்த போது மனம் துடிக்கிறது.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வணக்கம்
    த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. மூன்று நாட்களாக சென்னை மாநகர மக்கள் வெள்ளத்தின் பாதிப்பில் சிக்கித் தவிப்பதைத் தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டுமே என்கின்ற கவலை வருத்துகிறது.

    ReplyDelete
  6. சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.
    பௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html

    ReplyDelete
  7. உடலால் தூர தேசத்தில் இருந்தாலும், ஆத்மார்த்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சென்னைவாழ் மக்களுடன் இருக்கின்றோம். விரைவில் அனைத்தும் சகஜநிலைக்கு திரும்ப வேண்டுகிறோம்.

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete