அரும்புகள் மலரட்டும்: பெண்மையே படி தாண்டு!

Tuesday 29 September 2015

பெண்மையே படி தாண்டு!


தாய் தந்தைக்கு நல்ல மகளாய், உடன் பிறந்தோர்க்கு பாசமுள்ள சகோதரியாய், நண்பர்களுக்கு நல்லதொரு தோழியாய், கணவனுக்கு அன்பு மனைவியாய், தம் பிள்ளைகளுக்கு பாலூட்டி, சீராட்டி வளர்க்கும் அன்பே உருவான தாயாக, புகுந்த வீட்டிற்கு பொறுப்புள்ள மருமகளாக, பேரக்குழந்தைகளுக்கு வழிகாட்டும் பாட்டியாய் தனது வாழ்க்கையில் பல பரிமானங்களைப் பெறும் பெண்மையை மென்மையாக நடத்தி போற்ற வேண்டியது மட்டுமல்ல காக்க வேண்டியதும் இச்சமூகத்தின் கடமை.

இன்றைய சூழலில் பெண்களின் சுதந்திரம் என்பது ஆண்களின் தியாகத்தில் விளைந்துள்ளதாக பலர் கருதிக் கொண்டிருக்கின்றனர். பெண் என்பவள் ஆண்களால் அடக்கப்படுபவள் என்ற கண்ணோட்டத்திலேயே ஆணாதிக்கமிக்க இச்சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. சொற்களாலும் செயல்களாலும் குத்தும் முற்களில் நடந்து கொண்டே தான் இன்று பல பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு பின்னால் நீண்ட நெடிய போராட்டங்களும், அவர்களுக்கு பின்னால் மறைந்திருக்கும் வேதனைகளும் சொல்லி முடியாது.

கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டறிந்து பெண் என்றால் களைக்க முற்படுவதில் தான் பெண்ணுக்கெதிரான வன்முறையின் முதற்புள்ளி தொடங்குகிறது. ஆக பெண்ணுக்கெதிரான வன்முறை அவள் பிறப்பதற்கு முன்பே துவங்கி விடுவது இச்சமூகத்தின் அவலம். அப்போது தொடங்கிய வன்மம் அவள் இறக்கும் வரை தொடர்வது கொடுமையிலும் கொடுமை. பொட்ட பிள்ளையைப் படிக்க வைக்கிற செலவுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடலாம் எனும் வாசகங்கள் முதலாக பெண்ணுக்கெதிரான கண்ணோட்டம் நிரம்ப இருக்கிறது. பெண் என்பவள் ஏதோ கல்யாணத்திற்காக வளர்க்கப்படும் ஒரு மிருகமாக பெற்றோர்களே பார்க்கிறார்கள்.

”மங்கையரையாய் பிறப்பதற்கே நல்ல மாதவம்
செய்திடல் வேண்டும் அம்மா”

என்று பாடியவர் ஒருவர் தானே! பெண் பிள்ளை பிறந்திருச்சே என்று தலையில் கை வைக்கும் தகப்பன்மார்களே ஏராளம், அவர்களை நாம் எப்படி குறை சொல்ல முடியும்? வறுமையும், வரதட்சண கொடுமையும் அவர்களைத் தொடர்ந்து விரட்டும் போது பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்?. வறுமை அகற்ற வேண்டியதும் பெண்ணிற்கெதிரான குற்றங்களைக் களைவதும் அரசின் கடமை. அதில் அரசு முனைப்பு காட்ட வேண்டும்.

வயதிற்கு வந்து விட்டால் அல்லது விவரம் தெரிந்து கொண்டால் பறவைக்கூட்டங்களும் விலங்கினங்களும் கூட தன் பிள்ளைகளை வெளியில் விட்டு விடுகிறது. ஆனால் மனிதன் மட்டும் வயதிற்கு வந்த தன் பிள்ளையை வெளியில் போகக்கூடாது என்பது விந்தையான ஒன்று, அதற்கு இந்த சமூகக் கட்டமைப்பே காரணம். காலங்காலமாக பெண்களைப் போதைப் பொருளாகவே பார்த்து வளர்ந்திருக்கிறது. 

ஒரு பெண் தன்னைப் பூமாதேவி, உலகை மாற்ற வந்த சக்தி, சிறகுகள் முளைத்த தேவதை என்றெல்லாம் தன்னைப் பார்த்தாலும் அவளின் அம்மா கூட அவளைப் பார்ப்பது பெண்ணாக தான் என்கிற பொழுது இச்சமூகம் மாற்றத்திற்காக பயணிக்க வேண்டிய தொலைவு நிறைய இருக்கிறது என்பதை நாமெல்லாம் உணர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 

பெண்கள் மீதான நேர்மறை பார்வையை ஆண்களுக்கு ஏற்படுத்துவதிலும் அவர்களுக்கான உரிமையைப் பெற அனுமதிப்பதிலும் பெண்ணின் பங்கும் அவசியமாகிறது. ஒரு தாய் தன் ஆண் குழந்தைக்கு பெண் மீதான மரியாதையை இளம்பருவம் கொண்டே விதைத்தால் இது சாத்தியம். ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களும் ஆண் பெண் பேதமற்ற சமூகம் அமைய உழைக்க வேண்டும். ஒரு ஆண் குடும்ப வாழ்க்கைக்கு மனதளவில் தயார் ஆகின்றான் என்றால் பெண் என்பவள் மனதளவிலும் உடல் அளவிலும் தயார் ஆகிறாள் என்பதை இந்த உலகிற்கு உரக்கச் சொல்ல மேற்சொன்ன இருவரால் முடியும்.

தனது மகன் பெண்ணெக்கெதிரான வன்முறையில் ஈடுபட்டு குற்றவாளிக்கூண்டில் நிற்கும் நிலை ஏற்பட்டால் அந்த அவமானம் தனக்கும் தான் என்பதை தந்தையும் உணர்ந்து ஆண்பிள்ளைகளுக்கு வழிகாட்ட வேண்டும். இளமையில் பெண்கள் தடம்புரளுவது தடுக்கும் விதமாக கல்விமுறையும் மாற வேண்டும். இளமையில் காதல் என்பது முழுக்க மனம் சார்ந்ததல்ல. ஒரு உயரிய நிலைக்கு வந்த பின்பு ஆண்கள் மீதான புரிதலே உண்மையானது என்பதை அவர்களுக்கு கல்வியின் ஊடாக சொல்லி வேண்டியதும் அவசியமாகிறது.

இன்றைய சூழலில் பெண்ணுக்கு பொறுப்புகள் அதிகமாக்கப்பட்டுள்ளன, பெண்ணின் மகிழ்ச்சி, சுதந்திரம் அனைத்தும் தியாகம் என்பதில் முடக்கப்பட்டுள்ளது. பண்பாடு எனும் சொல்லால் பெண்களை வீட்டிற்குள்ளே அடைத்து வைத்திருக்கிறது இச்சமூகம். தான் சார்ந்த தேவைகளான ஆடை, அலங்காரம் போன்றவைகளுக்கு கூட கணவனின் அனுமதி தேவைப்படுகிறது. ஒரு ஆறிப்போன காபிக்காக அவள் மீதான கணவனின் அடக்குமுறையை இன்னும் தாங்கிக் கொண்டிருக்கிறது பெண்கள் சமூகம்.

கள்ளிப்பாலுக்கும், நெல்மணிகளுக்கும் தப்பி பிழைத்த பெண்கள் தான் இன்று தான் சார்ந்துள்ள துறைகளிலுள்ள வக்கிரப்புத்திக்காரர்களிடம் ஒவ்வொரு நொடியும் தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான வன்மம் எந்த நேரம் கட்டவிழ்த்து விடப்படுமோ எனும் அச்சத்திலேயே தம் அலுவல்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். 

மாதவிலக்கு சமயங்களில் பெண்ணெக்கெதிரான வன்மங்கள் நான் சொல்லித் தெரிய வெண்டியதில்லை. தன் வீட்டு உறுப்பினர்களே அவர்களைப் படுத்தும் பாட்டை எண்ணும் போது நாமெல்லாம் ஒருகணம் தலை குனிய வேண்டியிருக்கிறது. 

”எந்நாடு போனாலும்
      தென்னாடு உடைய
      சிவனுக்குமாத விலக்குள்ள.                   பெண்கள் 
      மட்டும் ஆவதே இல்லை” 

என்று 90களில் எழுதிய கவிஞர் கனிமொழியின் வரிகள் இன்றும் பொருந்துகிறது என்றால் இவ்விசயத்தில் இச்சமூகம் இன்னும் மாறவில்லை என்பதையே பறைசாற்றுகிறது.

உடை சார்ந்த விசயங்களிலும் இச்சமூகம் பெண்கள் மீது அடக்குமுறையையே கையாளுகிறது. நமது பார்வை பெண்களின் உணர்வுகளைச் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர உடை சார்ந்ததாக இல்லை. ஏனெனில் உணர்வுகள் சார்ந்த பார்வை தான் நிலையாக இருக்கும், உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத எவனுக்கும் அவர்கள் அணியும் உடையில் தலையிட அருகதையில்லை என்பதே எனது கருத்து.

இப்படி பெண்களுக்கெதிராக ஒட்டு மொத்த சமூகமே வரிந்துக் கட்டிக் கொண்டு இறங்கியிருக்கும் போது ஆண்களை மட்டும் மாறச் சொல்வதும் நமக்கான சுதந்திரத்தயும் மரியாதையையும்  இச்சமூகம் பெற்றுத் தரும் என்று பெண்களின் மனித சக்தி அடுப்பங்கரையில் பொசுங்கிப் போவது ஏற்புடையதல்ல.

இன்று ஆண்களுக்கு இணையாக சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் வரவேற்கத் தக்கது. ஆனாலும் அவர்கள் சுதந்திரமாகவும் தனது விருப்பங்களுக்கேற்பவும் செயல்படுகிறார்களா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். பெண்கவிஞர்களும் எழுத்தாளர்களும் புறப்பட்டு இருக்கிறார்கள். ஆனாலும் சற்று முன் உரித்த வெங்காயத்தின் வாசனை மாறாத அதே கைகள் தான் கவிதைகள் வடிக்கின்றன. கரண்டிப் பிடித்த தடம் மாறாத அதே கைகள் தான் பேனா பிடிக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

பல தடைகளைத் தாண்டி அவர்கள் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே மற்ற பெண்கள் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் பாடம். அவர்கள் அதிகம் எழுதுவது பெண்ணுக்கெதிரான வன்முறைகளையும், அனுபவித்த இன்னல்களையும் தான். இதுவே அவர்கள் மீதான சமூகத்தின் அடக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது என்பதற்கு சாட்சி.

பெண் என்பவள் கடலுடன் கலந்து தன்னை அற்பணித்துக் கொள்ளும் நதி போன்றவள் என்பதையும், அன்பைக் கொடுத்து அன்பைத் தேடினால் பூவாக மலருபவள் என்பதையும் இச்சமூகம் உணர்ந்து ஒரு பெண்ணாக இருப்பதில் தடையில்லை எனும் உணர்வை பெண்களின் ஆழ்மனதில் ஏற்படுத்தினால் இவ்வுலகம் பெண்மையில் மூழ்கி ஆயிரம் அடுக்குகள் கொண்ட மலராக மலர்ந்து மணம் வீசும் என்பது மட்டும் திண்ணம்.

இன்னமும் பெண்ணுரிமைக்கு ஆண்கள் குரல் கொடுப்பார்கள் என்றில்லாமல் தனதுரிமையைப் பெற பெண்களே முன்வர வேண்டும். பெண்கள் தனக்கு உண்டான பொறுப்புகளை உணர்ந்து சாதிக்க புறப்பட வேண்டும். அதற்கான அங்கீகாரத்தை இந்த ஆண்கள் சமூகம் கொடுக்காது. அப்படியே கொடுத்தாலும் கூடவே ஒரு கயிற்றைக் கட்டி விட்டு ஆண்களில் எல்லையைத் தாண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளும். 

என்ன தான் நீ கல்லாக (தெய்வமாக) நின்றாலும்
அர்ச்சகர்கள் ஆண்களாயிற்றே
எனும் கவிஞர் கிருஷ்ணப்பிரியாவின் வரிகளிலுள்ள ஆழ்ந்த பொருளை நோக்குங்கள். இச்சமூகக் கிளைகளில் கூடு கட்டி அப்படியே தங்கி விடாமல் தன் சிறகுகள் விரித்து புறப்பட தயாராகுங்கள். எத்தனையோ மலாலாக்களையும், சானியா மிர்சாக்களையும் இந்த உலகம் அறிய வேண்டியிருக்கிறது. ஆகவே பெண்மையே படி தாண்டு.

வலைப்பதிவர் திருவிழா-2015


மற்றும்

தமிழ் இணையக் கல்விக்கழகம்

நடத்தும்

“மின் தமிழ் இலக்கியப் போட்டிகள்-2015“ க்காகவே எழுதப்பட்டது. (வகை 3)  பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள் எனும் தலைப்பிற்காக எழுதப்பட்டது. 

இதற்கு முன் வெளியான படைப்பல்ல, மேலும் இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதி கூறுகின்றேன்.
 


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

12 comments:

  1. மரியாதைக்குரியவரே,
    வணக்கம்.அருமையான பதிவு.வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    என அன்பன்,
    C. பரமேஸ்வரன்,
    http://konguthendral.blogspot.com
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம்-638402

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா
      வருகைக்கு முதலில் நன்றி. தொடர்ந்து இணைந்திருப்போம்

      Delete
  2. என்ன தான் நீ கல்லாக (தெய்வமாக) நின்றாலும்
    அர்ச்சகர்கள் ஆண்களாயிற்றே!

    அருமை
    உண்மை
    வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. கருத்திட்டு வாழ்த்தியமைக்கு நன்றிகள் அய்யா.

      Delete
  3. அருமை.....தெளிவான சிந்தனை வாழ்த்துகள் வெற்றி பெற..

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சகோதரி இத்தனை பணியிலும் கருத்திட்டு வாழ்த்தியமைக்கு

      Delete
  4. சிறப்பான கருத்து கொண்ட நல்ல கட்டுரை.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்திட்டு வாழ்த்தியமைக்கு நன்றிகள் சகோதரர்.

      Delete
  5. விரிவான, விளக்கமான உண்மையில் பெண்மையை போற்றும் கட்டுரை! வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. கருத்திட்டு வாழ்த்தியமைக்கு நன்றிகள் அய்யா.

      Delete
  6. ஆஹா! உடனே இணைத்தமைக்கு நன்றிகள் சகோதரர்.

    ReplyDelete
  7. தெளிவான கட்டுரை..!
    வாழ்த்துகள் பாண்டியரே..!

    ReplyDelete