அரும்புகள் மலரட்டும்: பாகுபலி- விமர்சனம்

Friday 10 July 2015

பாகுபலி- விமர்சனம்

நான் ஈ’ படத்திற்கு எஸ்.எஸ். ராஜமௌலி குழுவின் கடின உழைப்பால் கடந்த மூன்று ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட படம் ‘பாகுபலி’ இத்திரைப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரூ. 250 கோடி செலவில் பிரம்மாண்டமாக இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 4,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.

படத்தின் ஆரம்பத்தில் ரம்யாகிருஷ்ணன் முதுகில் அம்பு பாய்ந்தும், கையில் குழந்தையுடனும் ஒரு நீர்வீழ்ச்சிக்கு ஓடி வருகிறார். அவரையும், அந்த குழந்தையும் கொன்றுவிட வீரர்கள் பாய்ந்து வருகின்றனர்.

அப்போது, நீர்வீழ்ச்சி விழும் மலையை சிவனாக நினைத்து, அந்த குழந்தையை காப்பாற்றுமாறு கூறிவிட்டு இறந்துபோகிறார் ரம்யா கிருஷ்ணன்.

நீர்வீழ்ச்சியின் கீழே இருக்கும் அம்புலி கிராமத்தில் வசிக்கும் ரோகிணிக்கு இந்த குழந்தை கிடைக்கிறது. திருமணம் நடந்தும் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாததால் இந்த குழந்தையை எடுத்து வளர்க்கிறார்கள்.

அவர்களது மகனாக பிரபாஸ் வளர்ந்து பெரியவனாகிறார். மற்றவர்களைவிட இவருகென்று ஒரு அபார சக்தியும், வலிமையும் இருக்கிறது. வளர்ந்து பெரியவனானதும், எப்படியாவது அந்த நீர்வீழ்ச்சியின் விழும் மலை மீது ஏறி மேலே செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் முயற்சி செய்கிறார்.

ஒருமுறை ஏறி செல்லும்போது, வழியில் தமன்னாவின் முகம் அவருக்கு தேவதையாக காட்சி அளிக்கிறது. அவள் மீது ஆசை கொண்ட பிரபாஸ், அவள் நீர்வீழ்ச்சியின் மேல்தான் அவள் இருக்கவேண்டும் என்று எண்ணி, கடும் முயற்சியுடன் நீர்வீழ்ச்சியின் மேலே ஏறிச் செல்கிறான்.

அங்கு சென்றதும் அவனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. நீர்வீழ்ச்சிக்கு மேலே மகில்மதி என்ற பெரிய நகரம் இருக்கிறது. இந்த நகரத்தை ராணா டகுபதி ஆட்சி செலுத்தி வருகிறார். இவருக்கு மந்திரியாக நாசரும், போர் படை தளபதியாக சத்யராஜூம் பக்கபலமாக இருந்து வருகிறார்கள்.

மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செலுத்தி வரும் ராணா டகுபதியை எப்படியாவது ஆட்சியிலிருந்து கீழிறக்கவேண்டும் என்று அந்நாட்டை சேர்ந்த சிலர் நினைக்கின்றனர்.

மேலும், அந்த நகரின் மத்தியில் பல வருடங்களாக இரும்பு சங்கிலியால் கட்டிப் போட்டு வைத்திருக்கும் அனுஷ்காவையும் மீட்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்கெல்லாம் தமன்னா தலைமை தாங்கி வருகிறார். ஆனால், இதுபற்றியெல்லாம் தெரியாத பிரபாஸ், தமன்னா மீதுள்ள மோகத்தால் அவள் பின்னாலேயே சுற்றுகிறார்.

இறுதியில் பிரபாஸுக்கு தான் யார் என்பது தெரிந்ததா? ராணாவின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மக்களுக்கு விடுதலை கிடைத்ததா? பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் என்ன உறவு? என்பதை ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டப்படுத்தி சொல்லியிக்கிறார்கள்.

படத்தில் எந்தவொரு கதாபாத்திரத்தையும் அவ்வளவு எளிதாக எடைபோட்டு விடமுடியாது. அந்தளவுக்கு ஒவ்வொருவருக்கும் நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு கதாபாத்திரத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார். அதை அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பிரபாஸ், ஒரு மாவீரனாக அழகாக பளிச்சிடுகிறார். இவர் மலையேறும் காட்சிகளில் எல்லாம் நம் உடம்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. அதுமட்டுமில்லாமல், போர் புரியும் காட்சிகளிலும் ஆக்ரோஷத்துடன் வெளிப்பட்டிருக்கிறார்.

வில்லனாக வரும் ராணா டகுபதியும் பிரபாஸுக்கு போட்டி போடும் அளவுக்கு ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பிஜூ பல்லவதேவா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

தமன்னா, அழகு தேவதையாக வலம் வந்திருக்கிறார். தேவதைபோல், நீர்வீழ்ச்சிக்கு மேல் இவர் நிற்கும் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம். அதேபோல், பிற்பாதியில் ஆக்ஷன் நாயகியாக மாறி அதிர்ச்சியூட்டியிருக்கிறார்.

அனுஷ்கா படத்தின் முதற்பாதி முழுக்க இரும்பு சங்கிலியால் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள். அழுக்கு சேலையுடன், கையில் இரும்பு சங்கிலியுடனும் ஒரு பெண் படும் வேதனையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதோடு, ஆக்ரோஷமான பேச்சிலும் அனைவரையும் கவர்கிறார்.

மந்திரியாக வரும் நாசர், போர் படை தளபதியாக வரும் சத்யராஜ் ஆகியோர் யார் என்றே தெரியாத அளவுக்கு வித்தியாசமான தோற்றத்துடன் நம்மை மிரள வைக்கிறார்கள். நாசர், தனக்கே உரித்தான சகுனித்தனமான வில்லன் பாணியை அழகாக கையாண்டிருக்கிறார். சத்யராஜ், ராஜாவுக்கு விசுவாசமாகவும், அதேநேரத்தில் நாட்டு மக்கள் மீது இரக்கப்படுபவராகவும் மாறுபட்ட நடிப்பில் கவர்கிறார்.

படத்தில் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தை மிகவும் மெச்சியே ஆகவேண்டும். ‘படையப்பா’ படத்திற்கு பிறகு மிகவும் கெத்தான கதாபாத்திரத்தில் வந்து அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நெற்றியில் பெரிய குங்குமத்துடன் இவர் பார்க்கும் பார்வையே நம்மை மிரட்டுகிறது.

ரசிகர்களால் கற்பனை செய்ய முடியாத நிறைய விஷயங்களை இந்த படத்தில் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய இயக்குனர் ராஜமௌலிக்கு பாராட்டுக்கள். நாம், படத்தில் பிரம்மாண்டமாக நினைக்கும் ஒவ்வொன்றும் கிராபிக்ஸ் காட்சிகள்தான் என்றாலும், அது தெரியாத அளவுக்கு தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்.

அதேபோல், எந்தவொரு கதாபாத்திரத்தையும் யாரும் குறை சொல்லமுடியாத அளவுக்கு அழகாக கையாண்டிருக்கிறார். படத்தில் இடம்பெறும் போர் காட்சிகள் பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டம். அதேபோல், பெரிய சிலையை அடிமைகள் துணை கொண்டு நிமிர்த்து வைக்கும் காட்சிகள் எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

கீரவாணி இசையில் பாடல்கள் பரவாயில்லை என்றாலும், பின்னணி இசையில் பிரம்மாண்டத்திற்கே பிரம்மாண்டமாய் அமைந்திருக்கிறது. செந்தில்குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் தத்ரூமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக நீர்வீழ்ச்சியில் அமைக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் அருமை.

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

17 comments:

  1. நல்ல விமர்சனம்... இனிமேல் தான் பார்க்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. பார்த்து விட்டு சொல்லுங்கள் சகோதரரே நான் கொஞ்சம் மிகைப்படுத்திக் கூட சொல்லியிருக்கலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

      Delete
  2. படம் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பார்த்து விட்டு தங்களைக் கருத்துகளையும் சொல்லுங்கள். நிறைய சினிமாத்தனமும் இருக்கிறது. நல்லதைச் சொல்லியிருக்கிறேன்..

      Delete
  3. படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்
    அவசியம் பார்க்கிறேன் நண்பரே
    தம 2

    ReplyDelete
    Replies
    1. அவசியம் பார்த்து விட்டு சொல்லுங்கள் அய்யா. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள்..

      Delete
  4. அனைவரும் எதிர்பார்த்திருந்த படம். இத்தனை செலவு செய்து எடுத்திருக்கிறார்கள்.... நிச்சயம் பிரம்மாண்டமாகத்தான் இருக்கும். இதற்கு இரண்டாவது பகுதியும் வரப்போகிறது என்று படித்தேன்....

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. பிரமாண்டமாக தான் உள்ளது சகோதரரே! நிச்சயம் பார்த்து விட்டு தங்களைக் கருத்தையும் சொல்லுங்கள்..

      Delete
  5. விமர்சனம் சிறப்பாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றிங்க அய்யா. வாய்ப்பு கிடைத்தால் பார்த்து விட்டு சொல்லுங்கள்.

      Delete
  6. தம +
    எப்டி பார்த்தீங்க?

    ReplyDelete
    Replies
    1. பள்ளிக்கு இரண்டு நாள்களாக விடுமுறை போட்டாச்சு. நானும் எனது மனைவியும் திரையரங்கம் சென்று பார்த்து விட்டோம். படம் பார்த்து தங்களது மாறுபட்ட கருத்தைத் தரவும் சகோ.

      Delete
  7. படத்தை பற்றிய கருத்திற்கு நன்றி.
    தமிழக வரலாற்றையும் திரைக்காவியமாக எடுக்க யாரேனும் முயற்சி செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. சகோததரின் வருகைக்கு நன்றி. தமிழ்நாட்டின் வரலாற்றைத் திரைப்படமாக எடுத்தால் இதுவரை ஆண்டவர்களின் அவலங்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து விடுமே!

      Delete
  8. படத்தைப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியது பதிவு. நன்றி.

    ReplyDelete
  9. சிறப்பான விமர்சனம்! படம் பார்க்கத்தூண்டுகின்றது உங்கள் எழுத்து! நன்றி!

    ReplyDelete
  10. so! படம் சூப்பர்னு சொல்றீங்க:) தம்பி,,விஜய் அல்லது சன் டி.வியில் போடும்போது பார்க்கலாம்னு இருக்கேன். ரொமான்ஸ் ஸீன் மகி, நிறை இருக்கும் போது ரிமோட் தேவைபடும் என்கிறார் உங்க மாமா:)))))

    ReplyDelete