அரும்புகள் மலரட்டும்: ரோமியோ ஜுலியட் – விமர்சனம்

Saturday 13 June 2015

ரோமியோ ஜுலியட் – விமர்சனம்


‘ரோமியோ – ஜுலியட்’ என அருமையான காதல் ஜோடியின் பெயரை படத்தின் தலைப்பாக வைத்து விட்டு, காதலர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்வதை முழு படமாக எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் லட்சுமண்.

காதல் என்பது அதை மதிப்பதிலும், உணர்வதிலும்தான் இருக்கிறது. ஆனால், இந்தப் படத்தில் படத்தின் நாயகன் ஜெயம் ரவி மீது, நாயகி ஹன்சிகாவிற்கு வரும் காதல் அவர் மீது வரவில்லை, அவர் பணத்தின் மீதுதான் வருகிறது. சரி, அதன் பிறகாவது, மாறுமோ என்று பார்த்தால், ஹன்சிகாவைப் போன்ற வேறொரு பெண்ணை தனக்கு காதலியாக ‘செட்’ செய்து கொடுக்க வேண்டும் என ஹன்சிகாவிடமே சொல்கிறார் ஜெயம் ரவி. அப்புறம் என்ன வழக்கம் போல காதல் ஜோடிகள் ஒன்று சேர சுபம்.

எந்த விதமான ட்விஸ்ட்டும் இல்லாமல், கலகலப்பான, சுவாரசியமான காட்சிகளும் இல்லாமல் வெறும் ஜெயம் ரவி, ஹன்சிகா ஆகியோரை வைத்தே இரண்டரை மணி நேரப் படத்தையும் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். ஏதோ, நகைச்சுவைக்கு என கொஞ்ச நேரம் விடிவி கணேஷ் வருகிறார். பூனம் பஜ்வா எதற்கு வருகிறார், என்ன செய்கிறார், அவர் ஜெயம் ரவியைக் காதலிக்கிறாரா என்பதைக் கூடத் தெளிவாகச் சொல்லவில்லை. படத்தின் நாயகியான ஹன்சிகாவைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு ஏமாந்து போகும் வழக்கமான தமிழ் சினிமா மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் வம்சி கிருஷ்ணா.

ஜெயம் ரவி, கட்டுமஸ்தாக கணீரென்று இருக்கிறார். அதனால்தான் அவரைப் பார்த்ததும் ஹன்சிகா காதலில் விழுகிறார் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். இருந்தாலும் ஜெயம் ரவி அவருடைய வழக்கமான நடிப்பால் வசீகரம் செய்து விடுகிறார். நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடியுங்கள் ரவி, உங்களுக்கென தனி இடம் தமிழ் சினிமாவில் இருக்கிறது. இன்றைக்கும் உங்கள் நல்ல நல்ல படங்கள் டிவியில் ஒளிபரப்பாகும் போது, அனைத்து பெண்களும், குடும்பத்தினரும் ரசித்துப் பார்க்கிறார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

ஹன்சிகாவை, கொஞ்சம் லூசுத்தனமாகவே காட்டியிருக்கிறார்கள். எல்லாவற்றிலும் அவசரப்படுகிறார், எதையும் யோசிக்காமல் செய்கிறார், காதலனை அடிக்க அடியாட்களை வேறு ஏற்பாடு செய்கிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை ஏன்தான் இப்படி காட்டுவார்களோ, புத்திசாலிகளாக காட்டவே மாட்டார்களா…அனாதையாக வளர்ந்தவர், இப்படி பணத்திற்காக ஆசைப்படுபவர் என்பதெல்லாம் நம்பும்படியாகவா உள்ளது. தான் மட்டும் வசதியாக வாழாமல் மற்றவர்களும் நன்றாக வாழ வேண்டும் என்று நினைக்கும் விதத்தில்தான் அவர்களை ‘ஹோம்‘-ல் நல்ல குணங்களை சொல்லி வளர்ப்பார்கள். படத்திற்காக எப்படி வேண்டுமானாலுமா காட்டுவது…

இமான் இசையில் ‘டண்டணக்கா…’ பாடலும், தூவானம்…பாடலும் ரசிக்க வைக்கிறது. சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் அழகுணர்வுடன் படமாக்கியிருக்கிறது.

ஒரு படத்திற்கு ஜெயம் ரவி, ஹன்சிகா போன்ற நட்சத்திரங்கள் மட்டும் கிடைத்தால் போதாது, அவர்களை வைத்து நல்ல கதையுடன் கூடிய படத்தையும் கொடுக்க வேண்டும்.

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

7 comments:

  1. விமர்சனம் அருமை! ஆனால் படம் போர் இல்லையா நண்பரே! நம்மூர் படத்துல எப்பதான் நாயகிகளை கொஞ்சம் அறிவு பூர்வமாகச் சிந்திப்பவர்களாகக் காட்டுவார்களோ...கே பாலச்சந்தர் படத்தில் மட்டும் தான் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் பொதுவாக....பாலுமகேந்திராவும், பாரதிராஜாவும் கூட...ஆனால் கொஞ்சம் இண்டிபெண்டன்ட் என்றால் பாலச்சந்தர்தான்...

    ReplyDelete
  2. ஓஹோ ...
    தம +
    விமர்சனப் பணி தொடரட்டும்

    ReplyDelete
  3. பயங்கரமான (!) விளம்பரம் இருக்கும் போதே நினைத்தேன்... டமால்...!

    ReplyDelete
  4. விமர்சனம் படித்தேன். நன்று.

    ReplyDelete
  5. அன்புள்ள சகோதரர் ஆசிரியர் அ.பாண்டியன் (அரும்புகள் மலரட்டும்) அவர்களுக்கு வணக்கம்! உங்களது வலைத்தள கட்டுரைகளை தமிழ்மணத்தில் வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.

    நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (15.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
    நினைவில் நிற்போர் - 15ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/15.html

    ReplyDelete
  6. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (15/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு: http://gopu1949.blogspot.in/


    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete