Wednesday, 17 June 2015

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் - திருவிழா


மணப்பாறை இந்நகரம் புகழ்மிகு வணிக நிலையங்களுக்கும், முறுக்கு எனும் சுவையான தின்பண்டத்திற்கும், கிழக்கே எழுகின்ற ஞாயிறு மேற்கே விழுகின்ற வரையிலும் உழுகின்ற, உழைக்கின்ற உழவர் பெருமக்களின் உயிர்நாடியாகத் திகழும் மாடுகளுக்கு மிகவும் பெயர் பெற்றதோடன்றி புனிதமிகு தெய்வத்தலங்கள் பலவற்றிற்கும் பெயர் பெற்றது எனச் சொன்னால் அது மிகையாகாது.

அத்தகு தெய்வச் சிறப்புமிகு இத்திருநகரின் மையப்பகுதியில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலாக கோயில் கொண்டு, தம்மை அகத்தூய்மையோடு வணங்குபவரின் பெருந்துயர் களைந்து, கொடிய நோயகற்றி, எல்லா வரங்களும் வழங்கி நாட்டு மக்களை அருள் உள்ளத்தோடு காத்து வருஅவளே மணவை மாரியம்மன்..

இந்நகரின் அடிப்படை வசதிகளே இல்லாத பழமையான அக்காலத்தில் கடும் பாறைகளும், பெரும்புதர்களும், கல்லும் கொடிய முட்களும், வானுயர்ந்த மரங்களும் சூழ்ந்த நிலப்பரப்பாய் காட்சியளித்த இம்மணப்பாறையின் மையப்பகுதியில் அழகிய வேப்பமரமொன்றை சுற்றி மூங்கில் ம்ரங்கள் வான்நோக்கி வனப்போடு புதராய் வளர்ந்தோங்கி நின்றிருந்தன.

அழகாய் படர்ந்திருந்த அப்புதரில் செழிப்போடு நின்ற மூங்கில் மரமொன்றை ஒருவர் வெட்டிச் சாய்க்க முனைந்த போது வெட்டரிவாளின் கூர்முனை நிழல்மிகு அழகிய வேம்பின் அடியைத் தீண்ட, அவ்வேம்பின் அடியில் இயற்கையில் தோன்றியிருந்த புனிதக்கல் ஒன்றிலிருந்து இரத்தம் பீறீட்டு வெளியேறியது. எதிர்பாரத இக்காட்சியினால் அரிவாளால் வெட்டியவர் அதிர்ந்து போய் அலறியடித்து ஊரைக் கூட்ட, ஊரார் ஒருங்கே திரண்டு ஒப்பரிய அக்காட்சியைக் கண்டு களித்தனர்.

அச்சமயத்தில் அன்னையின் அன்பில் திளைத்த அக்கூட்டத்திலிருந்த இறை நெறியாளர் ஒருவருக்கு அருள் வந்து தான் மகமாயி என்றும் இவ்வேம்பின் அடியில் நீண்ட நாட்களாய் குடி கொண்டிருப்பதாகவும், தனக்கு ஊரார் ஒன்று கூடி ஆலயமெடுத்து வணங்கி வந்தால் இந்நகரைக் காத்து அருள் பாலிப்பேன் என்றும் கூறினார்.

ஊரார் அனைவரும் அவர்தம் திருவாக்கைத் தெய்வ வாக்காய் பக்தியோடு ஏற்றுக்கொண்டு அருந்தகமகள் மாரிக்கு ஆலயம் அமைக்க தீர்மானித்து வேம்பினடியில் இருந்த புனிதக்கல்லைத் தங்களின் குலம் காக்க வந்த மாசி தெய்வமாய் எண்ணி மிகுந்த இறை நெறியோடு அன்றுமுதல் போற்றி வரலாயினர்.

இப்புனிதக்கல் இன்றும் அன்னையின் ஆலயத்தை அழகு செய்யும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். சிலை வடிவில் திருக்கோலம் பூண்ட தெய்வத் திருமகள் அருள்மிகு மாரியம்மனுக்கு காட்டும் புனித தீப ஆராதனைகள் யாவும் முதலில் அப்புனிதக் கல்லிற்குக் காட்டிய பிறகே காட்டப் பெறுதலை இன்றும் காணலாம்.
                                                நன்றி : தினத்தந்தி

இந்த வருடம் கடந்த மே மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் மணப்பாறை மாரியம்மன் திருவிழா வெகு சிறப்பாக நடந்தேறியது. எத்தனை ஆண்டுகள் திருவிழாவை கண்டு அம்மனின் அருளைப் பெற்றிருந்தாலும் இந்த வருடம் எனது மனைவியுடன் சென்று அம்மனைத் தரிசித்து விழாவினை வேடிக்கைப் பார்த்து வந்தது மனதிற்கு மகிழ்வான தருணமாக அமைந்தது.

மே 17 அன்று நடந்த பால்குட விழாவின் காட்சிமே 18 அன்று அம்மனின் வேடபரி விழாவிற்கு புறப்பட தயாராக இருந்த காட்சிகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

4 comments:

 1. அம்மனைப் பார்க்க அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

  ReplyDelete
 2. வலை மூலம் சந்திக்க முடியவில்லை... நேரில் விரைவில் சந்திப்போம்...

  ReplyDelete
 3. ஆலயவரலாறு பற்றியும் விழாபற்றியும் பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 4. தம +
  மணப்பாறை பால்குடம் முறையாக பதிவு செய்யப்பட்டால் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெரும்.
  பிரமாண்டமான நிகழ்வு அது
  தம +

  ReplyDelete