அரும்புகள் மலரட்டும்: ஒரு கோழிச்சண்டையால் வந்த வம்பு

Wednesday 4 February 2015

ஒரு கோழிச்சண்டையால் வந்த வம்பு

கருத்து சொல்றதுக்கு முன்னாடி ஒரு குட்டிக் கதையைச் சொல்லலாம்னு இருக்கேன். காதுல ரத்தம் வந்தாலும் ஒய் பிளட்னு சக நண்பரிடம் கேட்டுக்கங்க ஏன் கிட்ட சண்டை வம்பு.

ஒரு ஊர்ல முனுசாமி என்ற விவசாயி இருந்தன். அவரது வீட்டிற்கு அருகில் கருப்பசாமி என்ற விவசாயியும் வசித்து வந்தான்.  இருவரும் ஒன்று விட்ட பங்காளி உறவு முறை தான். இப்படிப்பட்ட உறவு முறை என்பதால் என்னவொ இரு வீட்டாரும் எப்பவும் கீரையும் பாம்பைப் போல தான் இருப்பார்கள். எப்பொழுது பார்த்தாலாம் வாய் தகராறு, பஞ்சாயத்து என்று தான் இருப்பார்கள். வாராவாரம் இவர்களின் வீட்டில் ஆரவாரம் தான்.

ஒரு வாரம் இவர்கள் சண்டையிட்டு கொள்ளாமல் கழிந்து விட்டால் அந்த வாரம் அண்டை வீட்டாருக்கு பொழுதுபோக்கு இல்லாத வாரமாக ஆகி விடும். ஆனால் இவர்களுக்கு முனுசாமி குடும்பமும் கருப்பசாமி குடும்பமும் ஏமாற்றம் அளித்தது மிகவும் அரிதே. தவறாமல் இவர்களது கச்சேரி ஆரம்பித்து விடும். குடும்ப தலைவிகள் குடும்மி பிடிக்காத குறையாக சண்டையிடுவார்கள் கூடவே அந்த வீட்டு சிறியவர்கள் பக்கவாத்தியம் வாசிப்பது போல் அவர்களுக்கு ஏற்றாற்போல் வாய் சண்டையிட்டு கொள்வார்கள்.

இப்படி தான் இவ்வளவு காலமும் கழிந்திருக்கிறது. இதனை இரு வீட்டு குடும்பத்தலைவர்கள்  கண்டும் காணாமலும் காலத்தை நகர்த்தி விட்டார்கள். எப்பொழுதும் மாலை நேரங்களில் சண்டையிட்டுக் கொள்ளும் இரு குடும்பமும் இம்முறை பகல் பொழுதில் சண்டையிட்டுள்ளார்கள். கருப்பசாமி வீட்டுக் கோழி முனுசாமி வீட்டிற்கு சென்று பக்கவாட்டில் இருந்த மண்ணையெல்லாம் கிளறி விட்டது காரணமாக அமைந்து விட்டது இம்முறை. எப்பொழுதும் பகல் பொழுதில் வீடு தங்காத முனுசாமி அன்று உடல் பலவீனம் என்பதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கி விட்டார்.

மண்ணைக் கிளறிக் கொண்டிருந்த கோழியை நோக்கி முனுசாமி மனைவி ஒரு சிறிய கல்லைத் தூக்கி எறிந்து விரட்டி விட்டாள். இதனைக் கண்ட கருப்பசாமி மனைவி வரிந்து கட்டிக் கொண்டு எப்படி எங்கள் வீட்டுக் கோழியைக் கல்லைக் கொண்டு அடிக்கலாம்? உங்க வீட்டு கோழியோ குழந்தைகளோ எங்க வீட்டு பக்கம் வர மாட்டாங்களா அப்ப பார்த்துக்கிறேன் என்று தனது கச்சேரியைத் தொடங்கி வைக்க அதற்கு பதில் பாட்டை முனுசாமி மனைவியும் தவறாது தொடங்கிட சூடு பிடித்தது யுத்தக்களம்.

அன்றைய தினம் வேலைக்கு செல்லாத முனுசாமி சப்தம் கேட்டு துக்கத்திலிருந்து விழித்து வெளியே வந்து பார்க்க இரு வீட்டு குடும்பத்தலைவியும் வழக்கம் போல் இல்லாமல் இம்முறை வார்த்தை தடித்து குடும்மி பிடித்தாகி விட்டது. இதனைப் பார்த்து பரபரக்க ஓடி வந்த முனுசானி இருவரையும் தடுத்து சண்டையைக் களைக்க முயன்று பலமுறை தோற்றுப் போனார். முனுசாமிக்கு மண்டை சூடேற எவ்வளவு சொல்லியும் கேட்காத தன் மனைவிக்கு விட்டார் ஒரு அறை. ஏய்ய அவளைக் கேட்க துப்பில்லை என்னை அடிக்கிற என்று கண் கசக்க முனுசாமியின் கோபம் கருப்பசாமி மனைவியின் மீது தாவியது.

இப்படியே எங்க வீட்டு கூட உனக்கு சண்டை போடுறதே பொழப்பா போயிறுச்சு உனக்கு. ஒன்னு விட்டேனா செவிள் பெயர்ந்து விடும்னு முனுசாமி கோபத்தில் கொந்தளிக்க எங்க ஒரு மகனுக்கு பொறந்திருந்தால் என்னை அடித்துப் பாருய்யா என கருப்பசாமி மனைவி கொக்கரிக்க ஓங்கி விட்டார் முனுசாமி ஒரு அறை. அடித்த நொடி தான் ஏண்டா எருமை மாடு போல நிக்கிறியே ஒங்க அப்பனுக்கு போனு போட்டு வர சொல்லுடா இன்னைக்கு அடிச்சதுக்கு பதில் கேட்காம விட்றாத இல்லைனு ஆறாம் வகுப்பு படிக்கும் தன் மகனிடம் சொல்ல அவனும் அப்பாவிற்கு போன் செய்கிறான்.

வேலையில இருக்கிறேன் வேலை களைந்ததும் வருகிறேன் என பதில் கூறி அழைப்பைத் துண்டித்தார் கருப்பசாமி. அழைப்பைத் துண்டித்த கருப்பசாமியால் நடந்த நிகழ்ச்சியின் நினைவிலுருந்து தன் மனதைத் துண்டிக்க முடியவில்லை. ஆயிரம் தான் இருக்கட்டும் எப்படி அடுத்தவன் மனைவியைக் கை நீட்டி அடிக்கலாம் என்று அவனது மனசாட்சி உசிப்பி விட வேலை முடிந்த கையோடு வரும் வழியில் வசதியாய் இருக்கும் டாஸ்மாக்கில் புகுந்தி கொஞ்சம் சரக்கை ஊத்தி சண்டைக்கு தயாராகி வீடு வந்து சேர்ந்து விட்டான்.

மனைவி பல மந்திரங்களை ஓதி விட ஏற்கனவே வந்த சாமிக்கு கூடுதல் உடுக்கைச் சப்தம் கேட்க முனுசாமி வீட்டிற்கு முன் வந்து ஆம்பள இல்லாத போது பொம்பள மேலே கை வச்சிலடா இப்ப வாடா என்று அழைப்பு விடுத்து தன் மனைவி சொன்ன அதே வார்த்தையை ஒரு ஆண் மகனுக்கு பிறந்திருந்தால் வாடா என்று வசை பாட வந்தான் முனுசாமி இருவருக்கும் கைகலப்பு முடிவில் உடைந்தது கருப்பசாமி மண்டை.

மருத்துவமனைக்கு சென்று மூன்று தையல் போட்ட கையோடு காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க முனுசாமியை அழைத்து வந்தார்கள் காவலர்கள். தகவலறிந்து காவல் நிலையத்திற்கு. ஊர் முக்கியஸ்தர்கள் விரைந்து வர இருவருக்கும் சமரசம் பேசப்படுகிறது. எவ்வளவு பேசியும் உடைந்த மண்டைக்கு என்ன தான் பதில் என ஒற்றைக் காலில் நின்று கொண்டு புகாரைத் திரும்ப பெற  கருப்பசாமி மறுக்க சமரசம் செய்தவர்கள் முனுசாமியிடம் இருந்து கொஞ்சம் பணம் வாங்கித் தருகிறோம் என்று கூறி ஒரு வழியாக சம்மதிக்க வைத்து விட்டார்கள்.

முனுசாமியும் போலிஸ், கேஸ்னு நம்மனால அலைய முடியாது கேட்கிற பணத்தைக் கடன் வாங்கியாவது கொடுத்து விடலாம் என்று முடிவெடுத்து காவலர்களுக்கு, சமரசம் செய்த ஊர் முக்கியஸ்தர்களுக்கும் தனியாக கப்பம் கட்டி விட்டு கருப்பசாமிக்கு ரூபாய் மூவாயிரம் கொடுக்க வழக்கு முடிந்தது. முனுசாமி அந்த ஊரில் வட்டிக்காரன் கிட்ட கடன் வாங்கி சமாளித்து விட்டான். மொத்தத்தில் அன்று மட்டுமே ரூபாய் ஐயாயிரம் செலவு. அவ்வளவும் வட்டிக்கு வாங்கிய பணம்.

அடுத்த அடுத்த வாரங்களில் முனுசாமி வீட்டின் முன்பு கருப்பசாமியின் குடும்பக் குரல் கேட்கவில்லை. மாறாக வட்டிக்கு பணம் கொடுத்தவனின் குரல் வாங்கின பணத்துக்கு வட்டியும் வரல முதலும் வரல ஒழுங்கு மரியாதையா இந்த வார தவணை 500 ரூபாய் பணத்தைக் கொடுக்க பாரு இல்லைனா உங்க வீட்டு கோழியில ரெண்டைப் பிடிச்சிட்டுப் போயிருவேன் என்று குரல் கொடுக்க பேசாம மண்ணைக் கிளறின கருப்பசாமி வீட்டு கோழியைக் கல்லைக் கொண்டு அடிக்காம இருந்திருக்கலாமோ என்று முனுசாமியின் மனைவியின் மனக்குரலும் சேர்ந்தே ஒலித்தது....                                                                        .......முற்றும்.........

கருத்து:
மேற்சொன்ன கதை மாதிரியான சம்பவங்கள் நமக்கும் நடந்திருக்கலாம் அவசரப்பட்டு கோபப்பட்டு கொஞ்சம் ஓவரா தான் போயிட்டோமோனு நம்மை நாமளே பார்த்துக் கேட்டுக் கொண்ட சம்பவங்கள் அரங்கேறியிருக்கலாம். இப்படி தான் பொறுத்து போக வேண்டிய இடத்தில் இதற்கு மேலும் நாம அமைதியிருந்தால்  நமக்கு மரியாதை இல்லைனு நமக்கு நாமே கட்டளையிட்டு சாதாரண விசயத்திற்காக காவல் நிலையம், பஞ்சாயத்து என்று நடை நடையாய் நடக்க வேண்டியும் வந்து விடுகிறது.

அறிவு முதிர்ச்சியற்றவர்களின் செயல்களைப் பொறுத்துக் கொள்ளுதல் தான் வீரமாகும். அதை விடுத்து வன்முறை கோதாவில் களம் இறங்குவது முற்றிலும் அறிவற்ற செயலே. பொறுமை உள்ளவன் தான் பல இடங்களில் வெற்றி பெறுகிறான். அவனே வெகு இடங்களில் வீரனாகிறான்... என்று சொல்ல வந்த கருத்தைக் கூறி விடை பெறுகிறேன்...
                                          நன்றிங்க நண்பர்களே!!!


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

5 comments:

  1. அருமை நண்பரே அருமை
    தம +1

    ReplyDelete
  2. வீரன் - தைரியம் : இரண்டிற்கும் வித்தியாசங்கள் பல உண்டு...

    ReplyDelete
  3. நீங்கள் சொல்ல வந்த கருத்தை நிகழ்வின் ஆரம்பத்திலேயே எங்களால் உணரமுடிந்தது. நன்றி.

    ReplyDelete
  4. நல்லது பாண்டியன். குறள் 301இன் விளக்கமாக ஒரு குட்டிக்கதை.
    அவசரத்தில் அடித்தீர்களோ? முதல் பத்தி முடிவு பெறவில்லை.
    இரண்டாம் பத்தியில் ஏழு தவறுகள்... (இப்போதெல்லாம் புதுக்கோட்டை நிகழ்வுகளை நீங்கள் மறந்துவிட்டதால் இப்படித்தான் நடக்குமோ?)

    ReplyDelete