Wednesday, 10 December 2014

பலிபீடங்களாகும் தமிழக பள்ளிகள்! மாணவச் சமுதாயச் சீரழிவுக்கு யார் காரணம்?

வலை உறவுகளுக்கு வணக்கம்

இப்போதெல்லாம் செய்தித்தாள்களைப் புரட்டினாலே வன்முறை, கொலை, கொள்ளை என இப்படியாய் செய்திகள். படிக்கும் நம்மையே ஒரு புரட்டு புரட்டிப் போடுகிறது. நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது எனும் பயம் நம்மோடே பயணிக்கவும் தொடங்குவதை உணரலாம்.

சமீபகாலமாக பள்ளிக் கூடங்களில் அரங்கேறுகிற வன்மம் நாளை உலகின் மன்னர்களாக நம்பிக் கொண்டிருக்கும் இந்த மாணவச் சமுதாயத்தின் மீதான நம்பிக்கை தேய்பிறையாய் மெல்ல மறைகிறது என்று கூட சொல்லி விட முடியும்.

மாணவனால் பள்ளி ஆசிரியர் குத்திக் கொலை, கல்லூரி முதல்வர் கொலை, சக மாணவன் அடித்துக் கொலை, முன்னாள் மாணவனால் பள்ளி மாணவன் கொலையுண்டான், குடித்து விட்டு பள்ளியில் ரகளை செய்த மாணவர்கள் நீக்கமென இப்படியாய் நீளுகிறது பட்டியல்.

இப்படி பள்ளி மாணவர்கள் தரம் குறைந்து போனதற்கு ஆசிரியர் தான் பொறுப்பு என்று ஒற்றை வரி குற்றச்சாட்டில் இச்சமூகம் தப்பித்துக் கொள்வது சரியாகுமா? பேனா பிடிக்கும் கையில் ஒரு மாணவன் கத்தியைப் பிடிக்கும் மனநிலைக்கு எப்படி ஆளானான் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய தருணமிது.

அக்காலங்களில் எல்லாம் பாட்டிகள் இரவு நேரங்களில் குழந்தைகளை வட்டமாக உட்கார வைத்து கதை சொல்லும் பழக்கமிருந்தது. அதில் பாட்டிகள் நீதி போதனை கதைகளையும், நல்ல பண்புகளை வளர்க்க உதவும் கதைகளையும் சொல்லித் தருவார்கள். ஆனால் இன்று குழந்தைக்கு பாடும் தாலாட்டுக் கூட ஆயத்தமாக ஒலிநாடாவில் ஒலிக்கிறது.

அவசர உலகில் இன்றைய பெற்றோர்கள் அலுவலகம் நோக்கி விரைவதில் காட்டும் முனைப்பில் சிறிதளவு கூட தன் குழந்தைகள் வளர்ப்பில் காட்டுவதில்லை. மழலை மாறாத பருவத்திலேயே (பிளே ஸ்கூல்)பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கே கம்பிகள் போடாத சிறைச்சாலையாக குழந்தைகளுக்கு வகுப்பறைகள் காட்சியாகின்றன.

ஆசிரியர் போடும் சத்தம் போடாதே எனும் சப்தத்தைக் கேட்டு சப்த நாடிகளையும் குழந்தைகள் அடக்கி மன இறுக்கம் அடைகின்றனர். குழந்தைகளின் அழகிய வண்ணமிகு சிறகுகள் இங்கேயே கிள்ளியெறியப்படுகின்றன. இளமையிலேயே குழந்தை பாதிக்கப்படுகிறான்

கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளைப் பெற்றோர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில்லை. அவர்களுக்கென தனி அறை, நவீன வசதி கொண்ட அலைபேசி அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அலைபேசியில் விளையாடும் குழந்தை அதையே நண்பனாக ஏற்றுக்கொள்கிறான். பக்கத்து வீட்டு குழந்தையைப் பார்த்தால் கூட வேற்றுக்கிரக வாசியாக பார்க்கிறான். அவனுடன் இணைந்து விளையாட பெற்றோர்களே சம்மதிப்பதில்லை எனும் கொடுமையை என்னவென்று சொல்வது.

எந்த நேரமும் இயந்திரங்களுடன் பழகும் குழந்தை மன அழுத்தத்திற்கு ஆளாகிறான். பெற்றோர்களின் அன்புக்காக ஏங்கும் குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்படுகிறான் என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும்.

செல்போனின் அவன் விளையாடுவது (டபுள்யு.டபுள்யு.இ) சண்டையிடும் விளையாட்டாகத் தான் இருக்கிறது.வெறும் பொம்மைகளோடு சண்டையிட்டு சண்டையிட்டு அவன் புத்தியில் வன்மம் விளைந்து அடுத்தவர்கள் மீது அறுவடை செய்யப்படுகிறது. இப்பட்டியலில் இன்று ஆசிரியர்களும் அடக்கம் என்பது மிகவும் மோசமானது. இது தொடருமானால் இச்சமூகம் சந்திக்க வேண்டிய அவலங்கள் நிரம்ப இருக்கிறது என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

அதற்கடுத்து திரைப்படங்கள் வன்முறைக் காட்சிகளை மாணவனின் வீட்டிற்குள்ளேயே சென்று காட்டுகிறது. இப்போதெல்லாம் கதாநாயகர்களை விட வில்லன்களைத் தான் மாணவ பருவத்தினருக்கு ரொம்ப பிடிக்கிறது. கொள்ளையடிப்பது எப்படி என்பதை ஒரு முழுப்படமும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறது என்றால் அதை விட வேறு என்ன சாட்சி வேண்டும்.

 கொலை எப்படி செய்ய வேண்டுமென்பதை குறுந்தகட்டில் பல மேனாட்டு படங்களைப் பார்த்துத் தான் ஆசிரியரைக் கொன்றேன் எனும் மாணவனின் வாக்குமூலத்திற்கு திரைப்பட இயக்குநர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?.

தொலைக்காட்சி, செய்தித்தாள் என அனைத்திலும் கொலை, கொள்ளைகள் செய்திகளை அதிகமான பக்கங்களை நிரப்பிக் கொள்கின்றன. சமூகத்தில் நடக்கும் விசயங்களைத் தான் செய்திகளாகப் போடுகிறோம் என்று அவர்கள் வாதிட்டாலும் இதன் மூலம் இச்சமூகத்திற்கு எதனைக் கற்றுக் கொடுக்கப் போகிறார்கள் என்பது முக்கியம். எவ்வளவோ நேர்மறையான செய்திகளும் சத்தமில்லாமல் அல்லது மீடியாக்கள் கண்டு கொள்ளாமல் நடந்து கொண்டு தானே இருக்கிறது.

அப்படிப்பட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாமே? மாணவர்களின் அறிவை வளர்க்கும் விசயங்கள் அவர்களின் படைப்பாற்றலை வெளிக் கொணரும் வகையில் புது முயற்சிகள் என ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைத் தரும் செய்தித்தாள்கள் மிக குறைவு. மேற்சொன்னவைகள் தவிர்க்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் போதிப்பதோடு நிறுத்தி விடாமல் ஒவ்வொரு இயலுக்கு பின்னால் இருக்கும் வாழ்க்கைத்திறன், மதிப்புக்கல்வி ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கற்பித்தால் மாணவ உள்ளங்களீல் நேர்மறை எண்ணங்களை எளிதில் விதைக்க முடியும். இப்பணியை மேற்கொள்வது ஆசிரியரின் கடமை என்பதையும் மறுக்கவில்லை.

ஆனாலும் இன்றைய சூழ்நிலையில் மாணவர்களின் தவறுகளைத் தட்டிக் கேட்கும் உரிமை அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் என்பதன் பொருள் குற்றங்களைக் களைபவர் என்பது தானே. ஆனால் ஆசிரியர் இன்று குற்றங்களைக் கண்டு காணாமல் போக வேண்டும் என்று தானே ஆட்சியாளர்களும் கல்வியாளர்கள் விரும்புகிறார்கள்.

ஆசிரியர்களுக்கே பாதுகாப்பு இல்லாத தற்போதைய சூழ்நிலையில் தடம் தவறும் மாணவர்களைச் சரிசெய்யும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்களைப் பல்பிடிங்கிய பாம்பாக மாற்றிய பின்னரும் இப்படி வன்முறைகள் நடப்பதற்கு ஆசிரியர்கள் தான் காரணம் என்பது எந்த வகையிலும் நியாயமாகாது. மாணவச் சமுதாயம் சீர்கெட்டு போகும் சூழ்நிலை உருவானதற்கு இச்சமூகத்தின் அங்கத்தினர் அனைவரும் பொறுப்பேற்க வேண்டுமே தவிர ஒரு சாரரை மட்டும் குற்றம் சொல்வதில் முறையில்லை.

ஒட்டு மொத்த சமூக அங்கத்தினரும் நாளைய மன்னர்கள் மட்டும் நீங்கள் அல்ல, இன்றைய இளவரசர்கள் நீங்கள் என்பதை மாணவர்களின் மனதில் விதைக்க வேண்டும். விரைவான மாற்றத்திற்கு ஆட்படுத்தினால் தான் தடம் மாறும் மாணவச் சமூகத்தைச் சரிபடுத்த முடியும். அதை விடுத்து ஆசிரியர்களை மட்டும் காரணமாக சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தால் இந்நிலை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது.

ஆக்கம்
அ.பாண்டியன்.


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

31 comments:

 1. ஆசிரியர்கள் மற்றும் காரணமல்ல. பெற்றோர்களும்தான். குழந்தைகள் வளர வளர அவர்களுடைய போக்கினை பெற்றோர்கள் உன்னிப்பாகக் கவனித்து நெறிப்படுத்தவேண்டும். தடம் புரளும் நிலை வரும்போது சரியான பாதையைக் காண்பித்து, விளைவுகளை வயதுக்கேற்றவாறு மனதில் பதியும்வண்ணம் கூறவேண்டும். அவர்கள் புரிந்துகொள்வர். பெற்றோர்கள் தம் குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்து நண்பர்களைப் போல பக்குவமாக நடந்துகொள்வதும் பயன்தரும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் முதலில் நன்றிகள். அலைபேசியில் தொடர்பு கொண்டு சிறுபிழை ஒன்றைச் சுட்டிக்காட்டியும் நலம் விசாரித்தமைக்கும் என் அன்பு நன்றிகள் மீண்டும். தங்களின் தொடர் வருகை எனக்கான தூண்டுகோள். தொடர்வோம் ஐயா.

   Delete
 2. ///ஆசிரியர்களுக்கே பாதுகாப்பு இல்லாத தற்போதைய சூழ்நிலையில் தடம் தவறும் மாணவர்களைச் சரிசெய்யும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. //
  உண்மை நண்பரே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   ஆசிரியரின் நிலை இன்று பரிதாபத்திற்கு ஒன்றாகி விட்டது. மேலும் காரணகாரியத்தை அறியாமல் வெறுமெனே நம் பக்கம் சுட்டி விரலைத் திருப்புவது எந்த ஊரு நியாயம் என்பது தான் எனக்குள் வந்த கேள்வி ஐயா? வருகைக்கு நன்றிகள் ஐயா.

   Delete
 3. Replies
  1. மிகுந்த நன்றிகள் ஐயா

   Delete
 4. பலவேறு காரணிகள் இருந்தாலும் ஆசிரியர்களை சுட்டிக் காட்டுவது வழக்கமாக உள்ளது.ஆசிரியப் பணியிலும் அர்ப்பணிப்பு குறைந்து வருகிறது.கல்வியை காசு கொடுத்து வாங்கும் பொருளாக மக்களும் நினைக்கிறார்கள்.கல்வியை நுகர்வுப் பொருளாக நினைப்பதால் இந்த சிக்கல்கள். பெற்றோரின் பொறுப்பு இதில் அதிகம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   பல்வேறு காரணிகள் இருக்க ஆசிரியர் சமுதாயம் தான் காரணமெனும் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாவிட்டாலும் ஆதங்கத்தையாவது நண்பர்களோடு பகிர்ந்திருக்கிறேன். மிக்க நன்றிகள் ஐயா.

   Delete
 5. பெற்றோர்கள் முதல் ஆசிரியர்கள் என்பதை முதலில் பெற்றோர்கள் உணர வேண்டும்... சிறந்த ஆக்கம் தம்பி... பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்
   தங்களின் வருகையும் கருத்தும் என்னை இன்னும் எழுதத் தூண்டும். நன்றீங்க சகோதரர்..

   Delete
 6. //இப்போதெல்லாம் கதாநாயகர்களை விட வில்லன்களைத் தான் மாணவ பருவத்தினருக்கு ரொம்ப பிடிக்கிறது..//

  வில்லன் தானே கதாநாயகனாக வருகின்றான்..

  முக்கல் முனகல் சத்தங்களோடு விரசமாக ஒரு பாட்டை காசுக்காகத் தயார் பண்ணினவர் மற்றும் அந்தக் காட்சியில் அற்புதமாக (!?) நடித்தவர்கள் எல்லாருக்கும் மாலைகளுடன் மரியாதை!...

  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் - அதே பாட்டை ஏழு வயது சிறுமி பாடும் போது ஏகப்பட்ட சந்தோஷம்.. ஆனந்தக் கொண்டாட்டம்..

  சரியாக பாடுவதற்கு வரவில்லையென்றால் - வீட்டில் இழவு விழுந்ததைப் போல கண்ணீரும் கம்பலையுமாக பெற்றோர்கள்!..

  அரிவாளை எடுத்துக்கொண்டு எதிரியை கண்டதுண்டமாக வெட்டிப் போட்டு - முகத்தில் ரத்தக் களறியுடன் - காசுக்காக நடிக்கும் கதாநாயகனின் படம் போட்ட பனியன்களுடன் விடலைகள்..

  இவங்கள்லாம் உருப்பட்டு வந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாக்கும்!...

  ரொம்பவும் பேராசைதான் உங்களுக்கு!..

  பெற்றோர்கள் - பிள்ளைகளைப் பெற்றிருந்தால் தானே -
  அவர்களின் வளர்ச்சியினைக் குறித்துக் கவலைப்படுவதற்கு!..

  அன்பின் பாண்டியன் அவர்களே!..

  ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய சினிமாவுக்குப் போன சித்தாளு!.. - என்ற சிறுகதையை நீங்கள் படித்ததுண்டா?..

  தனது மகனின் நடத்தை கெட்டுப் போனதற்கு - அண்ணல் காந்திஜி அவர்கள் கூறிய பதில் - நம்மைச் சிந்திக்க வைக்கும்..

  விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்காது - என்பார்கள்..

  கவியரசர் கண்ணதாசன் - இப்படி எழுதினார்!..

  மண்ணில் மறைவாக என்ன விதை போட்டாலும்
  போட்ட விதை என்னவென்று மரம் வளர்ந்து காட்டாதோ!..

  ஒவ்வொரு தனிமனமும் திருந்த வேண்டும்.
  அவ்வாறு ஆகும் நாளே நன்னாள்..

  வித்தியாசமான கோணத்தில் இருந்து சிந்தித்து முனைப்பான பதிவினை வழங்கியிருக்கின்றீர்கள்.. மனமார்ந்த பாராட்டுகள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   தங்களின் கருத்துக்கள் அனைத்திற்கும் நானும் உடன்படுகிறேன். எதிர்கால சமுதாயம் எப்படி அமையப்போகிறதோ எனும் தங்களின் ஆதங்கமும் புரிகிறது. நடப்பவை நல்லவையாக அமைய அனைவரும் முயற்சிக்க வேண்டியது அவசியம் ஐயா. மிக்க நன்றிகள்..

   Delete
 7. கருத்துள்ள பதிவு ஐயா. பெற்றோர் வளர்ப்புதான், குழந்தைகளை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் வார்த்தெடுக்கிறது. டபிள்யூ டபிள்யூ எப் போன்ற டிவி நிகழ்ச்சிகள், நாடகங்கள், ஒருவனே ஐம்பது பேரை அடித்து நொறுக்கும் திரைப்படங்கள் ஆகியவை, குழந்தை மனங்களில் நஞ்சை விதைத்து விட்டன. கடைசியில், ஆசிரியர்களுக்கும் சேர்ந்து கெட்ட பெயர் வந்து விடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   தாங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் விசயங்கள் மிகவும் கவனிக்க வேண்டியது. இணைந்தே குரல் கொடுப்போம். தொடர்ந்த நட்பிலும் இணைந்திருப்போம். நன்றீங்க ஐயா..

   Delete
 8. வணக்கம்
  சகோதரன்..
  சமுகு விழிப்புணர்வு உள்ள கருத்து.. மிகச் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
  த.ம 5வது
  கவியதையாக என்பக்கம் வாருங்கள் அன்போடு

  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எப்போது மலரும்…………….:

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ. நலம் தானே!
   தங்களின் வருகைக்கும் வாக்குக்கும் கருத்துக்கும் என் அன்பான நன்றிகள். அவசியம் தங்கள் தளம் வருவேன். நன்றீங்க சகோ..

   Delete
 9. ஆசிரியர் பாண்டியன் அவர்களே எல்லாவற்றிற்கும் காரணம் இந்த ”மதிப்பெண்” மற்றும் “ரிசல்ட்” தான் காரணம் என்பதனை சொல்ல வேண்டியதில்லை. இவற்றில் மாற்றம் வந்தாலே எல்லாம் சரியாகி விடும். “ரிசல்ட்” தராத பள்ளிகளை கல்வித் துறையும், “ரிசல்ட்” தராத வகுப்பு ஆசிரியர்களை பள்ளி நிர்வாகமும் ஆசிரியர் - மாணவர் உறவை சீரழிக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   நான் குறிப்பிட தவறிய விசயங்களைத் தொகுத்து மிக சுருக்கமாக கருத்துரையில் கூறியிருப்பது அழகு ஐயா. பெரியவர்கள் பெரியவர்கள் தான். என்னைப் போன்ற இளைஞர்கள் மூத்தவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள ஏராளம் உள்ளது ஐயா. மிக்க நன்றிகள் ஐயா..

   Delete
 10. அருமையான பதிவும் பகிர்வும் சகோதரரே!

  என்னைக் கேட்டால் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும்
  சமபங்குண்டு என்பேன்!
  இளந்தலைமுறைகளின் எதிர்காலத்தை நினைக்கத் தவறுகின்றனர்!

  நிலை மாற வேண்டும்!

  வாழ்த்துக்கள் சகோதரரே!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ
   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் முதற்கண் நன்றிகள். சமபங்கு என்பதை உணர்ந்தால் கூட ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறையும் என்று நம்புகிறேன். நன்றீங்க சகோதரி.

   Delete
 11. சிந்திக்க வேண்டிய நிலையில் இன்றைய பெற்றோர் ! அருமையான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்
   உண்மை நிலையை உணர்ந்து குற்றம் சுமத்தினால் யார் செய்தாலும் குற்றம் குற்றம் தான். கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளைத் தான் வேண்டாம் என்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றிகள்..

   Delete
 12. நீங்கள் சரியாக தொடன்கியிருகிறீர்கள் சகோ!! ஆனாலும் பெரும்பாலான மாணவர்கள் குற்றங்களுக்கு ஈவு இரக்கமற்ற சாதி வெறி பிடித்த, மதகாழ்புணர்ச்சி மிக்க உளவியலின் அடைப்படை கூட தெரியாத ஆசிரியர்களும் காரணமாக இருக்கிறார்கள் என்பதை நாம் ஒத்துகொள்ளத் தானே வேண்டும்:((( நல்ல அலசல் சகோ!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அக்கா
   தங்களின் கருத்துரை கூர்ந்து கவனிக்க வேண்டியது. நான் பெரும்பான்மையை எண்ணி எழுதியது. தவறு செய்யும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். காரணகாரியம் ஆராயாமல் சுட்டி விரலை ஒட்டு மொத்த ஆசிரிய சமுதாயத்தின் மீது திருப்புவது சரியாகுமா! என்பதே இப்பதிவின் ஆதங்கம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் அன்பான நன்றிகள் அக்கா. தொடர்ந்து தங்கள் கருத்துகள் என்னை வழிநடத்தட்டும்.

   Delete
 13. //அவசர உலகில் இன்றைய பெற்றோர்கள் அலுவலகம் நோக்கி விரைவதில் காட்டும் முனைப்பில் சிறிதளவு கூட தன் குழந்தைகள் வளர்ப்பில் காட்டுவதில்லை. மழலை மாறாத பருவத்திலேயே (பிளே ஸ்கூல்)பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கே கம்பிகள் போடாத சிறைச்சாலையாக குழந்தைகளுக்கு வகுப்பறைகள் காட்சியாகின்றன.

  ஆசிரியர் போடும் சத்தம் போடாதே எனும் சப்தத்தைக் கேட்டு சப்த நாடிகளையும் குழந்தைகள் அடக்கி மன இறுக்கம் அடைகின்றனர். குழந்தைகளின் அழகிய வண்ணமிகு சிறகுகள் இங்கேயே கிள்ளியெறியப்படுகின்றன. இளமையிலேயே குழந்தை பாதிக்கப்படுகிறான்//

  மிக அருமையாக, அதுவும் நிதர்சனத்தை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்!

  அரசு உயர்நிலைப்பள்ளியில் வேலை செய்யும் என் உறவுப்பெண்மணி அவர் தினமும் படுகின்ற அவஸ்தைகளை அவ்வப்போது சொல்வார். ஒவ்வொரு ஆசிரியையும் சில மாணவர்களை அவர்கள் பள்ளி விட்டுச் சென்ற பிறகும் அலைபேசி மூலம் பேசி கண்காணிக்க வேன்டுமாம். இதனால் அவர் பள்ளி முடிந்து, பள்ளி ஸ்பெஷல் கிளாஸ் முடிந்து வீட்டுக்கு வந்த பின்பும் தன் மகனை கவனிக்க முடியவில்லை என்று வருந்தி புலம்புகிறார்!

  ReplyDelete
 14. நல்லதொரு பதிவு நண்பரே! நாங்களும் இதைத்தான் எழுதியிருந்தோம். ஆசிரியர்கள் மட்டும் காரணமல்ல. பெற்றோர்களும் காரணமே! ஆசிரியர்களுக்குக் கண்டிக்கும் உரிமை இல்லை என்றால் எவ்வளவு வேதனையான விஷயம்! நல்ல பதிவு.

  ReplyDelete
 15. மிகச் சிறந்த ஆக்கம்...
  கட்டுரை பகிர்வுக்கு நன்றி சகோதரா....

  ReplyDelete
 16. சூழல் மாறுவதே இதுபோன்ற வன்முறைகளுக்கு காரணம்! கல்விமுறையிலும் மாற்றம் தேவை! சிறந்த பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 17. வளர்ந்து வரும் விஞ்ஞானமும் தளர்ந்து வரும் பண்பாடும் , எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் மாணவ சமுதாயம் இனி சீர்படுமா என்பதே என் கவலை!ஆசிரியர் பணியாற்றும் தங்கள் ஆதங்கம்
  பதிவில் தெரிகிறது!

  ReplyDelete
 18. ஆசிரியர், பெற்றோர்கள், சமூகம் என அனைவருமே இன்றைய நிலைக்குக் காரணம் தான்.....எதையோ தேடுவதாக நினைத்து பலவற்றை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்........

  நல்ல பகிர்வு நண்பரே.

  ReplyDelete
 19. நல்லதொரு பகிர்வு. பாராட்டுக்கள்.

  Dear Friend,

  Good Morning !

  You may like to go through this Link in which your NAME / BLOG is appearing :

  http://gopu1949.blogspot.in/2015/01/13-of-16-81-90.html

  This is just for your information, only

  With kind regards,
  GOPU [VGK]
  gopu1949.blogspot.in

  ReplyDelete