அரும்புகள் மலரட்டும்: கடவுளின் மௌன மொழி

Monday 1 December 2014

கடவுளின் மௌன மொழி


ஆசைக்கொன்று ஆஸ்திக்கொன்று என்பார்
ஆறாண்டில் ஆறினைப் பெற்றெடுத்து
கடவுள் தந்த வரமென்பார்

மரத்தடியில் அமர்ந்திருக்கும் என்னிடம்
மாடமாளிகை மாடிக்கட்டடம் வேண்டுமென்று
வேண்டுதலை முன் வைப்பார்

வகைவகையாய் உணவு சமைத்து
படையல் எனக்கென்பார்- படைத்து
அவரே அதை உண்பார்

கோடி கோடியாய் கொள்ளையடித்து
அதிலே கொஞ்சம் உண்டியலிட்டு
என்னையும் பங்காளி ஆக்கிடுவார்

காவல் தெய்வமென்று அழைத்திடுவார்
எனக்குத்தான் தெரியும் உண்டியலைக்
காத்திட நான்படும் பாடு

நாட்டு நிலைமை என்னவெனில்
தேங்காய் உடைப்பவனை விட
உண்டியல் உடைப்பவனே அதிகம்

பஞ்சத்துக்கு சாமியார் ஆனவனெல்லாம்
பல கோடியில் புரளுகிறான்
பாவம் நானின்னும் தெருகோடியில்

வாராவாரம் என்னிடம் வருவார்
வந்தென்ன பயன்?- தவறாமல்
வகுப்புவாதம் பேசித் திரிவார்

பெண்சாதியைப் பார்த்துக் கொள்ள
வழியில்லாதவன் கூட சாதி
சாதியென்றே பேசி அலைவான்

என்னிடம் கோரிக்கை வைப்பார்
தங்கள் கவனத்தை எல்லாம்
வெளியிலிட்ட செருப்பில் வைப்பார்

செல்வந்தவனெல்லாம் சிறப்பு பூஜை
நடத்திடுவார் வாசல் அமர்ந்திருக்கும்
இயலாதவனுக்கு பாத்திரமிட மறுத்திடுவார்

பாலாபிசேகம் நடத்தியதாய் பீற்றிடுவார்
ஏழைக் குழந்தையின் அழுகைக்கு
சிறிதேனும் இரங்க மாட்டார்

படைத்தல் காத்தலோடு அழித்தலை
அதிகமாய் அவரே செய்துகொண்டு
கடவுளென்று என்னை அழைத்திடுவார்


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

22 comments:

  1. தெய்வங்கள் வழிபட மட்டுமே என்னிறிருந்த நிலை மாறி நிறுவனமயப்படுத்துதலுக்கு உள்ளான பிறகாய் ஏற்பட்ட மாற்றத்தை சொல்லிச்செல்கிற கவிதையாய் தங்களது/
    எம்மதத்தைச்சார்ந்தவரையும் இது பாதிக்காமல் இல்லை./

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      நன்றாக சொன்னீர்கள். மதம் சார்ந்து எழுதவில்லை. கடவுள் மறுப்பாளனாகவும் எழுதவில்லை. குறைகளை மட்டுமே சுட்டிக்காட்ட எழுதியது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ஐயா..

      Delete
    2. மதம் சார்ந்து சொல்லவில்லை.அதற்கென ஒரு தனி கட்டிடம்,வரவு செலவு,இத்தியாதி,இத்தியாதி என மாறிப்போன பின்னாய் இப்படியாய் காட்சிப்பட்டுத்தெரிகிறதுதான்.

      Delete
  2. //படைத்தல் காத்தலோடு அழித்தலை
    அதிகமாய் அவரே செய்துகொண்டு
    கடவுளென்று என்னை அழைத்திடுவார்..//

    தொடரட்டும் தங்கள் கவிதை..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      நீண்ண்ட நாள்களுக்கு அப்பறம் தங்களைச் சந்திப்பாக ஒரு உணர்வு. கருத்துக்கு நன்றிகள் ஐயா.

      Delete
  3. கடவுளின் மௌனமொழி ஆதங்கத்தின் வெளிப்பாடாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      ஒவ்வொரு பதிவிற்கும் தவறாமல் வந்து கருத்திட்டு ஊக்கப்படுத்தும் தங்கள் அன்புக்கு நன்றி. ஆதங்கம் தான் ஐயா எல்லாம் சுயநலமாகவும் போலியாகவும் போய் விட்டது.

      Delete
  4. உண்மைதானே சகோ...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் காட்சிகள் நீண்டு கொண்டே போகிறது சகோதரி நான் சுருக்கியிருக்கிறேன். மூட நம்பிக்கைகளும் வேண்டா வேலைகளும் நாளும் பெருகி அறிவு மழுங்கடிக்கப் படுகிறது.

      Delete
  5. பஞ்சத்துக்கு சாமியார் ஆனவனெல்லாம்
    பல கோடியில் புரளுகிறான்
    பாவம் நானின்னும் தெருகோடியில்- அருமை அருமை ஐயா

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு பாராட்டுக்கள்.

    ஆமாம் இந்த பதிவாவது நீண்ட நாட்கள் இருக்குமா அல்லது முந்தைய பதிவை போல தூக்கிவிடுவீர்களா?

    ReplyDelete
  7. ///பெண்சாதியைப் பார்த்துக் கொள்ள
    வழியில்லாதவன் கூட சாதி
    சாதியென்றே பேசி அலைவான்//
    ஆகா
    நன்று சொன்னீர்கள் நண்பரே

    ReplyDelete
  8. கடவுள் படும்பாடு கவிதையாய் வந்தது.
    த.ம.4

    ReplyDelete
  9. சிறப்பான வரிகள்! அருமையான கவிதை! இதே சிந்தனையில் நானும் சில சென்ரியூக்களை இன்று பகிர்ந்திருக்கிறேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. கடவுள் மௌனமாகவே இருப்பவர்...
    இப்படி உலகம் இருந்தால் அருள்வதையும் நிறுத்திவிடப் போகிறார்!..

    நல்ல சிந்தனை! சிறப்பாக உள்ளது சகோதரரே!

    ReplyDelete
  11. அன்பு நண்பர் பாண்டியனார் அவர்களே...

    ஆ....சாமியோவ்.... அசத்திப் புட்டீங்க...போங்க...
    நிஜத்தைத் தோலுரித்துக் காட்டியது அருமை அய்யா... மிகவும் இரசித்துப் படித்தேன்....!
    ‘காவல் தெய்வமென்று அழைத்திடுவார்
    எனக்குத்தான் தெரியும் உண்டியலைக்
    காத்திட நான்படும் பாடு....’
    அனைத்து வரிகளும் அசத்தல்! ஓ...சாமியோவ்.
    நன்றி.

    ReplyDelete
  12. மிக அருமையான பகிர்வு!

    ReplyDelete