அரும்புகள் மலரட்டும்: எல்லாம் என் நேரம்!

Thursday 4 December 2014

எல்லாம் என் நேரம்!

வணக்கம் வலை உறவுகளே!

வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவர்களும் சோதனைகள் பல சந்தித்தவர்களும் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை எல்லாம் என் நேரம் என்பது தான். உண்மையில் நேரம் நமக்கு எதிராக செயல்படுகிறதா என்ன? நேரத்தை நாம் சரியாக கையாளமல் இப்படியொரு நொண்டி சாக்கு சொல்லித் திரிகிறோம் என்பது தானே உண்மை.

படித்த இளைஞர்கள் கூட தனக்கு சரியான வேலையைத் தேடாமல் அல்லது அமைத்துக் கொள்ளாமல் எனக்கு நேரம் சரியாக அமையவில்லை ஆடி போய் ஆவணி வந்தால் டாப்பா வந்திருவேனு சொல்லிக்கொண்டு தாவணிகளுக்கு பின்னால் திரியும் நிலையை இன்று கண்கூடாக பார்க்க முடிவதை யாரும் மறுக்க முடியுமா! பெற்றோர்களே என் பிள்ளைக்கு இப்ப நேரம் சரியில்லை என்று கூறி அவர்களை ஊக்குவிக்கும் காட்சிகள் கூட அழகாக அரங்கேறுகிறது.

இன்று பல இளைஞர்கள் நேர்மறைச் சிந்தனையாளர்களாக இல்லை. எதிர்மறையாகச் சிந்திப்பவர்களாகவே இருக்கிறார்கள். எதையெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் மனநிலையும் எவருக்கு கீழும் பணிந்து பணிபுரிய தயாராக இல்லாத மனநிலையும் தான் அதிகமாக காணப்படுகிறது.

வேலையே கிடைக்காத சூழலில் ஒரு வேலை கிடைத்தால் அதை புறம் தள்ளி விட்டு இதை விட நல்லவேளையைத் தேடுகிறேன் அந்த வேலையில் நான் ராஜாவாக இருக்க வேண்டும் இதை விட அதிக சம்பளம் கிடைக்க வேண்டுமென்று தான் விரும்புகின்றனர். அவ்வாறு விரும்புவதில் எந்த தவறும் இல்லை. அப்படிப்பட்ட வேலைக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவது அந்த வேலைக்காக வீட்டில் காத்திருக்காமல் கிடைத்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டே முயற்சிக்க வேண்டும்.

அதை விடுத்து வீட்டிலேயே முடங்கி கிடப்பது தன் வீட்டிற்கும் தாய் நாட்டிற்கும் தான் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். நன்கு படித்த இளைஞர்களின் மனித சக்தி யாருக்குமே பயன்படாமல் பல ஆண்டுகள் பயனற்றுப் போவது தவிர்க்கப்பட வேண்டும். எந்த நிலையில் தன் விடாமுயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விடாத மன தைரியம் பெற வேண்டும்.

படித்த அனைவருமே அரசு வேலை அல்லது தலைசிறந்த தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். எல்லோருக்கும் மேற்கண்ட வேலைகள் கிடைப்பதில்லை. அதனால் மனம் தளர்ந்து எல்லாம் நேரம் என்று நினைத்து விட்டால் உண்மையில் வாழ்க்கை முடமாகி மூலையில் முடங்குவதை எவராலும் தடுக்க முடியாது.

எடுத்தவுடனே எவரும் நடந்து விடவில்லை. தவழ்ந்தோம், மண்டியிட்டோம், எழுந்தோம், கால்கள் தடுமாறி விழுந்தோம், பெற்றோர்களையோ அல்லது பொருட்களையோ பிடித்து நடந்தோம், பின்பு எவரின் துணையின்றி தானே எழுந்து நடை பழகினோம். இப்படி தான் வாழ்க்கையும். எப்படிப்பட்ட திறமைசாலியும் எடுத்த எடுப்பிலேயே வெற்றி பெறுவதில்லை இப்படி நடை பழக முயன்று விழுந்து மீண்டும் முயன்று தான் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள் என்பதை இளைஞர் சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இங்கு வெற்றி பெற்ற தருணங்கள் மட்டுமே கண்களுக்கு காட்சியாகிறது . அதற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் சந்தித்த சறுக்கல்களும் திரை மறைவில் மறைந்து கொள்கின்றன. அவைகள் இக்கால இளைஞர்களுக்கு திரை விலக்கிக் காட்டப்பட வேண்டும்.

தோல்விகளைச் சந்திக்கும் போது இளைஞர்கள் துவலாமல் இருக்க மேற்சொன்ன திரைமறைவு முயற்சிகள் தூண்டுகோலாக இருக்கும். ஆனால் வெற்றி பெற்றவர்கள் பலர் தன் வெற்றியைக் கொண்டாடுபவர்களாக மட்டுமே இருக்கிறார்கள் தவிர தான் சந்தித்த தோல்விகள் குறித்து பேசுவதற்கு மௌனிக்கிறார்கள்.

நமக்கு நேரம் சரியில்லை எனும் தவறான கருத்தை இச்சமூகத்திலிருந்து இரவல் வாங்கிக் கொள்ளும் இளைஞர்கள் இதையே தன் நண்பர்களிடம் கூறும் காட்சியை நான் பலமுறை கண்டதுண்டு. அவசியம் இது தவிர்க்கப்பட வேண்டும். இவ்விசயத்தில் நான் இளைஞர்களைக் குறை கூறவில்லை. அவர்களைத் தகுந்த முறையில் வழிநடத்த தவறும் வாழ்வில் வெற்றி பெற்றவர்களைக் கடிந்து கொள்கிறேன்.

ஒவ்வொரு இளைஞனின் நெஞ்சில் தோல்வியைத் தாங்கும் வலுவும். கடினமான சூழலை எதிர்கொள்ளும் ஆற்றலும் இச்சமூக பெரியவர்களால் விதைக்கப்பட்டால் அனைவருமே ஏதாவது ஒரு துறையில் சாதிப்பார்கள் என்பது என் நம்பிக்கை. தன் திறமைக்கான வேலைக்காக காத்திருக்காமல் தனக்கு கிடைக்கும் வேலையில் தன் திறமையைக் காட்டி உழைத்திட்டால் வசந்த காலம் நம் இளைஞர்களுக்கு வசப்படும்.

எல்லா நேரமும் இனிய நேரமாகும். எல்லாம் என் நேரம் எனும் சொல் நேர்மறையாக பார்க்கப்படும் ஆம் எல்லாம் என் நேரம் அதில் ஒரு துளியைக் கூட வீணடித்து விடக்கூடாது எனும் மனநிலை அனைத்து இளைஞர்களின் மனதிலும் மலரும்.  மலர்ந்து சமூகத்தில் மணம் வீசும்..

                                                             நன்றி..

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

19 comments:

  1. கட்டுரை அருமை ...
    த ம இரண்டு

    ReplyDelete
  2. இளைஞர்கள் படிக்க வேண்டிய பயனுள்ள கட்டுரை....

    ReplyDelete
  3. அனுபவம் - நேரத்தின் வலிமை உட்பட அனைத்தையும் கற்றுக் கொடுக்கும்...

    ReplyDelete
  4. ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் இந்த கட்டுரையை படிக்க வேண்டியதுமட்டுமல்ல படித்து வாழ்வில் பயன்படுத்த வேண்டிய கட்டுரையும் கூட

    ReplyDelete
  5. சின்ன வயதில் அப்துல்ரஹிம் என்பவர் இப்படிதான் வார வாரம் (குங்குமம் வார இதழ் என நினைக்கிறேன்) அதில் எழுதி வந்தார். அதைவிரும்பி படிப்பேன் அது போல இந்த கட்டுரையும் இருக்கிறது. ( யார் அது மதுரைத்தமிழ அப்படிபட்ட கட்டுரைகளை படித்தும் நீங்க எப்படி உருப்படாமல் இருக்கிறது என்று சவுண்டை கொடுப்பது..... ) நானெல்லாம் அடுத்தவன் உபதேசம் ப்ண்ணினால் நல்லா காது கொடுத்து கேட்பேன் ஆனால் அதன்படி கேட்டு நடக்கத்தான் மாட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. அது வந்தது முத்தாரம் இதழில் !

      Delete
    2. @mr.லைட் எதையெல்லாம தல படிச்சுருக்கு!!!!!!!
      @பாஸ் உங்க ஞாபக சக்தியை வியக்கிறேன்!!!

      Delete
  6. நேரங்கலை நாம் கையாளப்பழகிக்கொண்டால் நேரம் சரியாக அம்புக்குறியிடுகிறதுதான் அனைத்திலுமாய்/

    ReplyDelete
  7. மணியான பதிவு.. வாழ்க நலம்!..

    ReplyDelete
  8. வணக்கம்
    சகோ
    கடிகார முற்கள் போல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்இன்றைய மனிதர்கள்...அதற்காக நேரம் சரியில்லை என்று சொல்வது... முட்டாள் பேச்சு.... அனைவருக்கு பயனுள்ள பதிவு...
    பகிர்வுக்கு நன்றி த.ம5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. நேரத்தை முறையாகப் பயன்படுத்தினால் ஆதங்கத்திற்கு அவசியம் எழாது. இன்றைய இளைஞர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தன்னம்பிக்கை தருகின்ற மிகவும் தேவையான கட்டுரை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. காலம் பொன் போன்றது என்பார்கள்! அதுகூட போனால் திரும்பி வரும்! ஆனால் போன காலம் வராது இக்கட்டுரை யைப் படிப்பவர் பாடமாக இதனைக் கொள்ள வேண்டும்

    ReplyDelete
  11. இதையெல்லாம் படிக்க வேண்டியிருக்கே ,எல்லாம் என் நேரம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அருமையான பதிவு இது :)
    ஏழாவது வோட்டு போடுவது இப்போ என் நேரம் ஆனதற்கு மகிழ்கிறேன் :)

    ReplyDelete
  12. சபாஷ் ,இப்போ உங்களுக்கு நான் ஏழாவது வாக்கு போட வேண்டிய நேரம் :)

    ReplyDelete
  13. உண்மைதான் சகோ...நேரம் நமக்கு அடிமையாக இருந்தால் வளர்ச்சி நேரத்திற்கு நாம் அடிமையானால் வீழ்ச்சி..

    ReplyDelete
  14. பாருங்க சகோ உங்க எழுத்தை அப்துல் ரஹீம் அவர்களோடு ஒப்பிட்டு நம்ம மதுரை தமிழன் பாராட்டிருக்கார்!! இதுக்கு மேல நான் என்ன சொல்ல ஆனாலும் சொல்றேன்!! சூப்பர்!!!!

    ReplyDelete
  15. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.com.au/2014/12/blog-post_7.html?

    ReplyDelete
  16. மிகவும் அருமையான கட்டுரை! நேரம் சரியில்லை என்பது எல்லாம் நாமே சொல்லிக் கொள்ளும் ஒரு தப்பித்தல் வழி மனதை சமாதானப்படுத்த பயன்படும் ஒரு மாயை யான் அஸ்திரம். அவ்வளவே நமது சோம்பேறித்தனத்தையும், உழைப்பின்மையையும் சொல்லும் ஒரு வார்த்தை...

    ReplyDelete