அரும்புகள் மலரட்டும்: நெஞ்சை நெகிழ வைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி

Friday 9 May 2014

நெஞ்சை நெகிழ வைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி



முன்பு ஒரு நாள் திருச்செந்தூரில் விழிப்பார்வை இழந்த சிறுவன் ஒருவனை பிறந்தவுடனே பெற்றோர்கள் கடற்கரையிலே தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளனர். அவனை ஒரு மனிதர் எடுத்து வளர்த்துள்ளார். அச்சிறுவன் இயல்பிலேயே மனநிலை சரியில்லாதவன். அவனை ஒரு இடத்தில் இருக்க வைப்பது என்பது சாதாரண விசயமில்லை.

அவனை அந்த பெரியவரும் அவரது மனைவியும் அவனுக்கு செந்தில்நாதன் என்று பெயரிட்டு வளர்த்து இசையும் கற்றுக்கொடுத்து மிகச் சிறப்பாக பாடுவனாக வளர்த்துள்ளனர். அச்சிறுவன் தற்போது நடந்து வரும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜீனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிக அற்புதமாக பாடி நடுவர்கள் முதற்கொண்டு பார்ப்பவர்கள் அனைவரின் உள்ளத்தையும் கரைத்து அழ வைத்து விட்டான். அவன் பாடிய விதம் மிக சிறப்பாக இருந்தது ஒரு இடத்தில் கூட தவறு செய்யவில்லை.

பொதுவாகவே அவனிடம் கலைமகள் வாசம் செய்கிறாள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. அவன் பாடி முடித்தவுடன் நடுவர் பாடகி மகதி தேமி அழுது கொண்டே ஓடிச்சென்று அந்த சிறுவனை கட்டி அணைத்து பாராட்டியதும் அந்த பெரியவரின் காலில் விழுந்து வணங்கியதும் நெஞ்சை நெருடியது. அதன் பின்பு அச்சிறுவனுக்கு சாக்லெட் உரித்து கொடுத்து அவனை சாப்பிட வைத்த மகதியிடம் அவன் இன்னொன்று இன்னொன்று என்று கேட்டு 3 சாக்லெட் சாப்பிட்ட காட்சி கல் நெஞ்சையும் கரைக்க வைப்பதாக இருந்தது.

அவனின் சூழ்நிலை கருதியும் திறமைக்காகவும் இந்த நிகழ்ச்சியில் எப்போது வர இயலுமோ அப்போது வந்து பாடிக்கொள்ளலாம் எனும் சிறப்பு அனுமதியை நடுவர்கள் கொடுத்தார்கள். அது அவனது திறமைக்காக கொடுக்கப்பட்ட வெகுமதியே. அப்படி ஒரு இசை திறமை அவனிடம் இருப்பது வியப்பாக தான் இருந்தது.

அது ஒருபுறம் இருக்க அச்சிறுவனை எடுத்து வளர்த்ததாக சொன்னேனே அவரும் பார்வையற்றவர் அவரது மனைவியும் அவ்வாறே பார்வையில்லாதவர். இவர்கள் இவனை மட்டும் எடுத்து வளர்க்கவில்லை. இவனைப் போன்ற ஆதவற்ற குழந்தைகள் 300 பேரை எடுத்து தனது காப்பகத்தில் வளர்த்து வருகின்றனர் என்பது தான் மேலும் என்னை ஏதோ செய்தது. இறைவன் அருளால் எந்த குறையும் இல்லாத நாம் கூட தினமும் பேருந்து நிலையத்திலோ, சாலை ஓரத்திலோ ஆதரவற்றவர்கள், மனநலம் குன்றியவர்கள் என பலரைக் கடந்து செல்கிறோம்.

அவர்களைக் காணும் போது சின்னதாய் ஒரு உச்சுக்கொட்டி அவர்களின் நிலையை எண்ணி வருந்தி விட்டு நமது அலுவலுக்கு தயாராகி கடந்து சென்று விடுகிறோம். ஆனால் விழியிழந்த தம்பதியினர் ஏறத்தாழ முன்னூறு ஆதவற்ற குழந்தைகளை கவனித்து வருகிறார்கள் என்றால் அவர்களின் பணியைக் கண்டு நாம் பாராட்டுவதோடு இல்லாமல் வெட்கியும் தலைக் குனியவும் வேண்டும் என்றே தோன்றுகிறது நண்பர்களே.

அந்த நிகழ்ச்சியை நான் இடையில் பார்த்த காரணத்தால் அவரின் காப்பக முகவரி சொன்னார்களா என்பது தெரியவில்லை நண்பர்கள் யாராவது கவனித்திருந்தால் அல்லது அவரது காப்பகம் தெரிந்திருந்தால் முகவரியை இங்கு தெரிவியுங்கள் நம்மால் முடிந்த உதவிகள் அவர்களுக்கு சென்றடையட்டும்.

பொதுவாக விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தாலும் அது ஒலிப்பரப்பும் விதத்தில் நமது நண்பர்களுக்கு போலவே எனக்கும் உடன்பாடு இல்லை. இருப்பினும் இப்படிப்பட்ட சிறுவனையும் நல்லுள்ளம் படைத்த அந்த பெரியவரையும் அடையாளம் கண்டு உலகத்திற்கு அறிமுகப்படுத்திய விஜய் தொலைக்காட்சிக்கு எமது நன்றிகள். அச்சிறுவனுக்கு இந்த மேடை அவனது வாழ்க்கை பக்கங்களைப் புரட்டிப் போடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அவனுக்கு நமது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவிப்போம். நன்றி.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவன் இரு பாடல்கள் பாடினான் அதற்கான வீடியோ முழுவதும் இணையத்தில் கிடைக்கவில்லை. நிகழ்வின் ஒரு பகுதியைக் காண https://www.youtube.com/watch?v=Dh2tdfhreLE

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

24 comments:

  1. ஒரு அருமையான காணொளியை பார்க்கவும் கேட்டு கண்ணீர் மல்கவும் செய்த உங்களுக்கு நெஞ்சம் நிறைந்த வந்தனங்கள்!!

    மன நலம் குன்றிய, பார்வையற்ற‌ அந்த சிறுவனின் அருமையான குரல் மனதின் ஆன்மாவைத்தொட்டது. விழிகள் கசிவதை தடுக்க முடியவில்லை!

    இது போன்ற குழந்தைகளை பெற்றவர்கள் போல ஆதரிக்கும் கருணை மனம் படைத்த அந்த பெரியவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!!

    ReplyDelete
  2. மிகவும் வலி தந்த காட்சி நானும் பார்த்தேன்.நாம் பேசுவதை அவர்கள் செயலில் செய்கிறார்கள்.

    ReplyDelete
  3. நிகழ்ச்சியைக் கண்டு நானும் நெகிழ்ந்துபோனேன்.
    ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது.

    இந்த உலகில் தனித்திறனின்றி எந்த உயிர்களும் படைக்கப்படவில்லை என்பதுதான் அது.

    ReplyDelete
  4. நானும் கண்டு அழுதேன் .

    ReplyDelete
  5. நெகிழ்ந்து போய்விட்டேன் நண்பரே

    ReplyDelete
  6. திறமைக்காக கொடுக்கப்பட்ட வெகுமதியை
    பகிர்வாக்கியதற்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சியைப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  8. திறமைக்கான வெகுமதியைப்பற்றி பகிர்ந்துள்ளதில் மிக்க மகிழ்ச்சியே.

    இப்படிப்பட்ட சிறுவனையும் நல்லுள்ளம் படைத்த அந்த பெரியவரையும் அடையாளம் கண்டு உலகத்திற்கு அறிமுகப்படுத்திய விஜய் தொலைக்காட்சிக்கு நமது நன்றிகள்.

    ReplyDelete
  9. உள்ளம் நெகிழ்ந்தது!

    ReplyDelete
  10. மனம் முழுவதும் நெகிழ்ந்து விட்டது !

    ReplyDelete

  11. இந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன் அதை கண்டு கோபம்தான் அடைந்தேன் அது பற்றிய பதிவு எழுத தொடங்கினேன் ஆனால் நேரம் இல்லாததால் வெளியிட முடியவில்லை இன்னும் ஒரு சில தினங்ளில் வெளியிடுகிறேன்...நீங்கள் விஜய் டிவியை பார்க்கும் பார்வைக்கும் இங்கு கருத்திட்டவர்களின் பார்வைக்கும் எனது பார்வைக்கும் மிகவும் வித்தியாசம் இருக்கிறது நீங்கள் எனது பதிவை படிக்கும் போது அதை புரிந்து கொள்வீர்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.காண்பதெல்லாம் உண்மையா?

      Delete
    2. பார்வையற்ற மாற்றுத்திறனாளிச் சிறுவனை வைத்து விளம்பரம் தேடும் விஜய்டிவி

      விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர் என்ற டிராமா' ரொம்ப சூப்பருங்கோ http://avargal-unmaigal.blogspot.com/2014/05/vijay-tv-super-singer-junior-4-blind.html

      Delete
  12. கலங்க வைத்து விட்டது சகோதரா...

    ReplyDelete
  13. //விழியிழந்த தம்பதியினர் ஏறத்தாழ முன்னூறு ஆதவற்ற குழந்தைகளை கவனித்து வருகிறார்கள் என்றால் அவர்களின் பணியைக் கண்டு நாம் பாராட்டுவதோடு இல்லாமல் வெட்கியும் தலைக் குனியவும் வேண்டும் //

    நியாயமான வார்த்தைகள்..

    இந்த நிகழ்ச்சியினை - சிலதினங்களுக்கு முன் Facebook- வழியாகக் கண்டேன். கல் மனமும் கரையும் என்பார்கள்.. அப்படியிருக்க -
    நான் எம்மாத்திரம்..

    தவிர - மதிப்புக்குரிய T.L.மகராஜன் அவர்கள் செய்த உதவியினையும் குறிப்பிட்டிருக்கலாம்.. பதிவினுக்கு நன்றி..

    ReplyDelete
  14. உண்மையில் நெஞ்சை நெகிழ வைத்த காட்சி. வியாழன் அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அனேகமானோர் அழுதேவிட்டனர். நிச்சயம் அந்த ஐயா செய்யும் சேவை மகத்தானது. நன்றி சகோ பகிர்விற்கு.

    ReplyDelete
  15. நானும் கண்டு அழுதேன் . . .

    பாடகி மகதி தேமி அழுது கொண்டே ஓடிச்சென்று அந்த சிறுவனை கட்டி அணைத்து பாராட்டியத வீடியோ

    https://www.youtube.com/watch?v=UQMtX1Z348Y



    செந்தில்நாதன் பிற வீடியோகள்


    https://www.youtube.com/results?search_query=super+singer+junior+Senthilnathan

    ReplyDelete
  16. அந்தக் காட்சியை நானும் பார்த்து கண் கலங்கினேன். தன்னைப் பாராட்டுவது கூட அவனுக்கு புரியாது. எப்படிப் பட்ட திறமை ஒளிந்திருக்கிறது.
    இவர்களைப் போன்றவர்களுக்காக நாம் என்ன செய்தோம். வெட்கப் படவைத்து விட்டான் அந்த சிறுவன்.
    இதைப் பற்றி நானும் எழுதவேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். நேரமின்மை காரணமாக எழுதவில்லை.
    விவரங்கள் கிடைத்தால் நம்மாலான உதவி செய்ய முயற்சிக்கலாம்.

    ReplyDelete
  17. நானும் கண்டு கலங்கினேன்.அவனின் திறமையை சரியாக பயன்படுத்தி வாழ்கையில் அர்த்தத்தை ஏற்படுத்த ஆண்டவனின் திருவிளையாடலே அவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....! வெட்கித் தலை குனிய வைகின்றது கண்ணிழந்த தம்பதியினர் செயல். நாம் எல்லாம் வாழத் தகுதியற்றவர்களோ என்று எண்ணி வருந்த வைக்கிறது மகதி அதனால் தான் அவர் கால்களை தொட்டு வணங்கினார். நிச்சயம் அவரை அப்படி பெருமை படுத்த தக்கவரே. நன்றி ! இப் பதிவுக்கு. வாழ்த்துக்கள் பாண்டியா ..!

    ReplyDelete
  18. இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. எனினும் நீங்கள் சொன்ன விதமே நெகிழ்ச்சியாகததான் இருக்கிறது பாண்டியன். நாமும் இந்த உலகத்தில் சுயநலப்பிண்டங்களாகத்தான் இருக்கிறோம் என்று உறைக்கும் சில தருணங்கள் எனக்கும் நிகழ்ந்ததுண்டு. இதோ இத்தனை வயதில் என்ன செய்தோம்? என்றால் நம்மீதே ஆற்றாமை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. கண்ணில்லாத அந்த நல்லவர்கள் இந்த உலகம பற்றிய நல்ல பார்வையோடு இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அரிய பதிவுக்கு நன்றி பாண்டியன்.

    ReplyDelete
  19. சரி யாரோ பெரிய மனசு கொண்ட ஒரு சேவை மனிதர் ஒருவர் தத்து எடுத்திருப்பார் என்கிற முன்முடிவில் படிக்க ஆரம்பித்தேன்

    தம்பதிகள் குறித்த உங்கள் தகவல்கள் நெகிழ வைத்தது...

    நல்ல பதிவு பாண்டியன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. நேரடி ஒளிபரப்பில் பார்க்காமல்விட்டதை உங்கள் தொகுப்பின் மூலம் பார்த்து நெகிழ்ந்தேன் ..பாராட்டுக்குரியவர்கள் !
    த ம +1

    ReplyDelete
  21. அன்பின் பாண்டியன் - நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவு - திருச்செந்தூரின் செந்தில் நாதன் கருணை இச்செந்திலுக்கு என்றும் கை கொடுக்க பிரார்த்தனைகள் - மன நிலை சரியில்லாத பார்வை இழந்த சிறுவன் - பார்வையற்ற தம்பதிகளால் வளர்க்கப் பட்ட சிறுவன் - ஏறத்தாழ 300 பார்வை இழந்தவர்களைக் காக்கும் காப்பகத்தினை நிர்வகிக்கும் நல்லவர்கள் - நெஞ்சம் நெகிழ்கிறது பாண்டியன். பகிர்வினிற்கு நன்றி - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete