Friday, 16 May 2014

விதவிதமாக எண்ணெய் தேய்த்து குளிக்கணுமா! இதைப் படிங்க!


தீபாவளிக்கு தீபாவளிதான் பலரும் தலையில் எண்ணெய் வைத்து குளிக்கிறார்கள். ஆனால், வாரந்தோறும் சனிக்கிழமை எண்ணெய் குளியல் போட்டால் உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா? அதனால்தான், ‘சனி நீராடு’ என்று அந்த காலத்திலேயே சொன்னார்கள். நல்லெண்ணெய்யை தலையில் தேய்த்து குளிப்பது மட்டுமே எண்ணெய் குளியல் அல்ல.


எண்ணெய் குளியலில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன. யாருக்கு, என்ன தேவை என்பதைப் பொறுத்து அந்தக் குளியலும் வேறுபடும். அதன்படி... சளி பிடிக்காமலிருக்கச் செய்யும் குளியல் கால் லிட்டர் நல்லெண்ணெயில் 50 கிராம் ஓமம் போட்டுக் காய்ச்சி, வடிகட்டி வைக்கவும். தலைக்குக் குளிப்பதற்கு முன், இந்த எண்ணெயை வெதுவெதுப்பாக்கி, தலையில் தடவி, மசாஜ் செய்து வெந்நீரில் குளிக்கவும். தலை குளித்தால் உடனே ஜலதோஷம் பிடித்துக் கொள்பவர்களுக்கும், தும்மல் போடுவோருக்கும் இந்த வகையான எண்ணெய் குளியல் ஏற்றது. குளிர்ச்சியைக் கிளப்பாது. தலைமுடியை நன்கு கண்டிஷன் செய்வதோடு, முடியையும் அழகாக வைக்கும்.

வாசனை தரும் குளியல்

சம்பங்கி, மருக்கொழுந்து, தவனம், செண்பகப்பூ, பன்னீர் ரோஜா மற்றும் வெட்டிவேர் ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து, எல்லாம் மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணெய் விட்டு சூடாக்கவும். எண்ணெய் கொதிக்கக் கூடாது. ஓசை அடங்கியதும், அடுப்பை அணைத்து, ஒரு நாள் அப்படியே ஊற விடவும். மறுநாள் தேவையான எண்ணெயை வடிகட்டி எடுத்து லேசாக சூடாக்கி, தலையில் தடவிக் குளிக்கவும். அடுத்த முறை தலைக்குக் குளிக்கிற வரை கூந்தல் நல்ல நறுமணத்துடன் இருக்கும். கூந்தலில் இருந்து வந்து கொண்டே இருக்கும் மெல்லிய நறுமணமானது உங்களுக்கு புத்துணர்வையும் மன அமைதியையும் கொடுப்பதை உணர்வீர்கள்.

வறண்ட கூந்தலை மிருதுவாக்கும் குளியல்

அரை கப் ஆலிவ் ஆயிலில், உதிர்த்த புதிய பன்னீர் ரோஜா இதழ்கள் ஒரு கப் சேர்த்துக் காய்ச்சவும். அதை வடிகட்டி, தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும். இந்தக் குளியலின் மூலம் கூந்தலின் பளபளப்பு கூடும். கருப்பான கூந்தலாக இருந்தால் இன்னும் அடர் கருமையுடனும், பிரவுன் நிற கூந்தலாக இருந்தால் அழகிய பிரவுன் நிறத்துடனும் மாறும்.

குளிர்ச்சியைக் கொடுக்கும் குளியல்

பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் தலா கால் கப் எடுத்து, அதில் 1 டீஸ்பூன் கல் உப்பு போட்டுக் காய்ச்சவும். இந்த எண்ணெயை தலை நிறைய சொதசொதவென தடவவும். இந்தக் குளியலின் மூலம் கண்களும் உடலும் குளிர்ச்சியடையும். ஒற்றைத் தலைவலி வராது. மன அழுத்தமும் படபடப்பும் நீங்கி, மன அமைதி கிடைக்கும். வாரத்தில் 2 நாட்கள் இப்படிக் குளிக்கலாம்.

இதம் தரும் இயற்கைப் பொடி

எண்ணெய் குளியல் எடுக்கும் போது ஷாம்பு உபயோகிக்காமல், இயற்கையான முறையில் தயாரித்த பொடியை உபயோகித்து தலையை அலசுவதே சரியானது. அந்தப் பொடியையும் அவரவர் தேவை மற்றும் கூந்தலின் தன்மைக்கேற்ப தயாரித்து வைத்துக் கொள்ளலாம். கால் கிலோ பூந்திக் கொட்டையை விதை நீக்கி, கால் கிலோ வெந்தயம் சேர்த்து அரைத்து சலித்துக் கொள்ளவும். எண்ணெய் குளியல் எடுக்கும் போது, இந்தப் பொடியில் 2 டீஸ்பூன் எடுத்து சிறிது தயிர் மற்றும் வெந்நீர் கலந்து பேக் மாதிரி தலையில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து அலசலாம்.

200 கிராம் சீயக்காய், 100 கிராம் பச்சைப்பயறு, 100 கிராம் கடலைப்பருப்பு, டீ தூள் 100 கிராம் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து, சலித்துக் கொள்ளவும். தனித்தனியே அரைத்தும் கலந்து கொள்ளலாம். 3 டீஸ்பூன் பொடியை வெந்நீரில் கரைத்து, தலையில் எண்ணெய் இருக்கும் போதே தடவி, அலசலாம். இதிலுள்ள டீ தூள் முடியை மென்மையாக்கும். மற்ற பொருட்கள் கண்டிஷன் செய்யும்.

கடலைப்பருப்பு 50 கிராம், பச்சைப்பயறு 50 கிராம், துவரம் பருப்பு 50 கிராம், வெந்தயம் 50 கிராம், வெட்டிவேர் 50 கிராம், பூலாங்கிழங்கு 50 கிராம் - இவை எல்லாவற்றையும் நைசாக அரைத்து சலித்துக் கொள்ளவும். இதை சின்னக் குழந்தைகளுக்குக் கூட தலைக்கும் உடம்புக்கும் தேய்த்துக் குளிப்பாட்டலாம். தினமுமே குளியலுக்கு உபயோகிக்கலாம்.

எண்ணெய் குளியல் எடுக்கும் போது...

எண்ணெய் குளியல் எடுப்பதால் ஒருவருக்கு ஜலதோஷம் பிடிக்காது. அதை ஒரு முறையான பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தலைவலி இருப்பவர்கள், எண்ணெயில் நிறைய ஓமம் சேர்த்துக் காய்ச்சி உபயோகிக்கலாம். சைனஸ் அல்லது ஜலதோஷப் பிரச்னை இருந் தால், தலைக்குக் குளித்து முடித் ததும், ஈரம் போகத் துடைத்து, அகன்ற பற்கள் கொண்ட சீப்பால், சூடு கிளம்பும் அளவுக்கு நன்கு வாரி விட வேண்டும்.

எண்ணெய் குளியலே ஆகாது என்பவர்கள், சிறிதளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து, மேலே சொன்ன மூலிகைகளை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிப் போட்டு, அதன் சாரம் இறங்கியதும், அந்தத் தண்ணீரைத் தலை குளிக்க உபயோகிக்கலாம். எண்ணெய் குளியலை முறைப்படுத்திக் கொண்டால் மன அமைதி கிடைக்கும். உடல் குளிர்ச்சியடையும். கண்கள் குளுமை பெறும். பொடுகு நீங்கும். அதன் விளைவாக இள நரை வராமலிருக்கும். முன்னந்தலையில் வழுக்கை விழாது.

எண்ணெய் குளியலுக்கு பொடியே சிறந்தது.ஆனாலும், ஷாம்புதான் வேண்டும் என நினைப்பவர்கள், பொடியுடன் சில துளிகள் ஷாம்புவையும் சேர்த்துக் குளிக்கலாம். சிலருக்கு சுருட்டை முடி இருக்கும். முடி சுருண்டு மேலே இழுத்துக் கொள்ளும். அடிக்கடி எண்ணெய் குளியல் எடுத்து வந்தால், முடி நீண்டு நன்கு வளரும். ஏசி அறையில் வேலை செய்பவர்களுக்கு எண்ணெய் குளியல் மிகமிக அவசியம். வாரம் இருமுறை அவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது கூந்தல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

நன்றி- தினகரன் நாளிதழ்

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

9 comments:

 1. நம்ம பாண்டியன் ஜி ,எப்போ எண்ணெய்குளியல் ஸ்பெசலிஸ்ட் ஆனார்ன்னு நினைச்சி படித்தேன் ,கடைசியில் தெரிந்தது மேட்டர் !
  எழுதியது யார் என்று தெரியாமல் ,அதனை கடைபிடிப்பதில் ரிஸ்க் அதிகம் !
  த ம 1

  ReplyDelete
 2. நல்லவிசயம்தான் ஸார் ஆனால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு தீபாவளியன்று கூட எண்ணை தேய்த்துக்குளிப்பது அதிசயமான காரியம் காரணம் அன்றும் வேலைக்கு போயாக வேண்டும், என்ன செய்வது இந்தியவாழ்க்கை வாழ்க்கைதான்.
  Killergee
  www.killergee.blogspot.com

  ReplyDelete
 3. நண்பர் பாண்டியன் அவர்களே ஒரு வித்தியாசமான பதிவு தங்களிடமிருந்து! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 4. வணக்கம்
  சகோதரன்..

  ஆகா ஆகா. விதவிதமாக எண்ணெக்குளியல் பற்றிய தகவல் அருமையாக உள்ளது.படித்ததை பதிவாக பகிர்ந்தமைக்கு மகிக்க நன்றி. சகோதரன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. சிறந்த பகிர்வு

  ReplyDelete
 6. பயன் உள்ள தகவல் நல்ல விடயம் தற்கால நிலைக்கு உகந்தது .
  நன்றி சகோ வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
 7. பயனுள்ள பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 8. ஆகா !நல்லதகவல் சகோ! ஆமா.......... இந்தத்தகவலை யாருக்காகப்
  இந்த வெய்யல் காலத்துக்கு ஏற்ற தகவல்படித்தீர்கள்.........நன்றிசகோ.

  ReplyDelete
 9. உபயோகமான பகிர்வு.நன்றி பாண்டியன்.

  ReplyDelete