அரும்புகள் மலரட்டும்: எதிர்மறை செய்திகளுக்காக அலையும் ஊடகங்கள்

Thursday 30 January 2014

எதிர்மறை செய்திகளுக்காக அலையும் ஊடகங்கள்


இன்றைய உலகில் ஊடகத்துறையால் பல நன்மைகள் விளைந்தாலும் தற்போது அதன் போக்கு திசை மாறி போவது தான் வருத்தமடைய செய்கிறது. அது பற்றிய எனது எண்ணங்கள் பதிவாக இங்கு.

இன்று செய்தித்தாள், தொலைக்காட்சி என்று எதைப் பார்த்தாலும் அவைகள் எதிர்மறை செய்திகளைத் தான் தாங்கி நிற்கிறது. காலையில் செய்தித்தாளைக் கையில் எடுத்தாலே நமது கண்களில் சட்டென்று படுவது கொலை, கொள்ளை, விபத்து, கற்பழிப்பு செய்திகள் தான் எனக்கொரு சந்தேகம் நாட்டில் நல்ல விடயங்களே நடக்கிறது இல்லையா! எப்படி எதிர்மறை நிகழ்வுகள் நடக்கிறதோ அதே அளவிற்கு நேர்மறை நிகழ்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் நேர்மறை நிகழ்வுகள் தவிர்த்து எதிர்மறை நிகழ்வுகள் தானே பத்திரிக்கைகள் எங்கும் பரவி கிடக்கிறது. அப்படியானால் செய்தித்தாள்கள் எதிர்மறை நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பது நமக்கு பளிச்சென்று படுகிறது.

தமிழில் நம்பர் 1 என்று சொல்லிக்கொள்ளும் பத்திரிக்கை ஒன்று அரசு பள்ளி நிகழ்ச்சிகளைச் செய்திகளாக வெளியிட வேண்டாம் என்று கொள்கை வைத்துள்ளதாம் சமீபத்தில் தான் அறிந்தேன். இதே அரசுப்பள்ளியில் எதிர்மறையான நிகழ்வுகள் நடந்தால் வெளியிடாமல் இருக்குமா! வரிந்து கட்டிக்கொண்டு முதல் ஆளாக வந்து விடும்.

மாலை செய்தித்தாள் ஒன்றில் முதல் பக்கம் தொடங்கி கடைசி பக்கம் வரை வெறும் வன்முறை மற்றும் எதிர்மறை நிகழ்வுகள் தாங்கிய செய்திகள் தான். மக்களுக்கு என்ன கற்பிக்க, எந்த விழிப்புணர்வை ஏற்படுத்த இது போன்ற செய்திகளை மட்டும் வெளியிடுகின்றன என்பது தெரியவில்லை.

இன்றைய பெரும்பாலான செய்திகளில் வரும் விடயங்கள் உண்மை தானா என்று கண்டறிய முடியாத சூழலே நிலவி வருகிறது. காரணம் ஒரு செய்தி ஒவ்வொரு பத்திரிக்கையிலும் ஒவ்வொரு மாதிரி. உதாரணமாக ஒரு இடத்தில் உணமையாகவே கொள்ளை போனது 10 பவுனாக இருக்கும். இதை ஒவ்வொரு செய்தித்தாள்களும் 15 பவுன், 20 பவுன் என ஒத்தையா ரெட்டையா போட்டு கைக்கு வருவதைச் செய்தியாக்கி விடுகிறார்கள். பிரபலங்கள் தரும் பேட்டிகள் கூட அவரவர் விருப்பப்படி திரித்து செய்தியாக போட்டு அதிக வாசகர்கள் படித்து காசாக்க வேண்டும் எனும் கொள்கையிலே இருக்கின்றன.

தொலைக்காட்சி  நிகழ்ச்சிகள் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அத்தனையும் ஆபாச குப்பைகள் இல்லையென்றால் அடுத்தவர் குடும்பத்தைக் கெடுக்க சொல்லித் தரும் குரூர புத்திக்கொண்ட நெடுந்தொடர்கள். இதனைப் பார்த்து விட்டு தவறாக சிந்திக்க தெரியாவதர்கள் கூட கற்றுக்கொள்ள முடிகிறது. (வாழ்க மீடியா! வளர்க உங்கள் பணி!!)தற்போது தமிழ் கலாச்சாரத்திற்கு முரணான வடநாட்டு கலாச்சாரத்தை புகுத்தி வரும் சில தொலைக்காட்சிகளை இனம் கண்டு நாம் தான் விலகி இருக்க பழகிக்கொள்ள வேண்டும் போல.

திரைப்பட விழாக்களுக்கு நடிகைகள் ஆபாசமாக உடை அணிந்து வருவது வழக்கமாக கொண்டுள்ளார்கள். சம்பந்தப்பட்ட படத்திற்கும், சம்பந்தப்பட்ட நடிகைக்கும் இது பப்ளிசிட்டியாக அமையும் என்பதால். ஊடகங்கள் இதை தான் முதலாவதாக படம் பிடித்து வெளியிடுவது வழக்கமாகி போய்விட்டது. ( கதாநாயகிகளே முதலில் குட்டைப்பாவடை, அரை உடம்பு ஆடைகளை நிறுத்துங்கப்பா) ஊடகங்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் தவறான புரிதலைப் பெறுவதும் கவனிக்கத்தக்கது.

செய்திச் சேனல்கள் இதற்கு ஒரு படி மேல் போயிட்டு களத்திற்கு சென்று செய்தி சேகரிப்பதாகக் கூறி விபத்தோ அல்லது வேறுவித அசம்பாதவங்களோ நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று செய்திகள் சேகரிப்பதும், பாதிப்புள்ளானவர்களிடம் நேர்காணல் நடத்தி செய்திகளாகத் தருகிறார்கள். இதில் உண்மை நிலையை அறிவதற்கு முன்னதாகவே அவசர குடுக்கைகளாக மாறும் ஊடகங்கள் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் தரும் ஒருதலை சார்ந்த தகவல்களைச் செய்திகளாகத்தருவது சரியாகுமா!

ஒரு ஊடகவியளாளன் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை அமெரிக்க ஊடக அமைப்பு விளக்கியுள்ளதை கீழே காணலாம்.

• உண்மையை தேடுதல், த‌ருத‌ல்(Seek Truth and Report It)
• யாரையும் புண்படுத்தாமலிருத்தல்(Minimize Harm)
• தன்னிச்சையாய் பக்க சார்பற்று செய்தி அளித்தல்(Act Independently)
• சமுக பொறுப்புணர்வுடன் அடங்கி செயல்படல்(Be Accountable)

(படித்து விட்டீர்களா ஊடகத்துறை நண்பர்களே)

பத்திரிகை மற்றும் ஊடக தர்மம் என்பது தற்போது கடுகளவும் இல்லை.மனித சமுதாயத்தின் நான்காவது தூண் எனப்படும் "ஊடகம்" மக்களுக்கான, மக்கள் மேம்பாட்டிற்காகத் தானே தவிர....காசு பார்க்க அல்ல என்பதை புரிந்து கொண்டால் நல்லது. தங்களது பொறுப்பை உணர்ந்தாலே இது போன்ற விரும்பத்தகாத செயல்கள் குறையும்.

மேற்கண்ட விடயங்கள் பெரும்பான்மையாய் ஆகி விட்டதால் சுட்டிக்காட்டினேன். இருப்பினும் இன்னும் நல்ல பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன அவைகளை இனம் கண்டு தொடரலாம் என்பது எனது கருத்து. நன்றி.

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

44 comments:

  1. பல நல்ல தகவல்கள் இருக்கத்தான் செய்கின்றன... ஆனால் சிறியதாக, அரை பக்கம் அல்லது ஒரு பக்கம்...

    நமது பார்வையை மாற்றிக் கொள்ளவேண்டும்... வேறு வழியில்லை...

    நல்லதொரு அலசலுக்கு வாழ்த்துக்கள் சகோதரரே...

    ReplyDelete
    Replies
    1. நல்ல தகவல்கள் கண்ணுக்கு தெரியாத அளவில் இருப்பது தான் வருத்தமளிக்கிறது. அன்பு சகோதரரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  2. நண்பரே நான் கவனித்த ஒரு தகவலைத் தங்களுக்குத் தெரிவிக் க விரும்புகின்றேன். நீங்களும் கவனித்திருப்பீர்கள். தமிழ் மண்ணில் முன்னாள் பாரதப் பிரதமர் படுகொலை செய்யப்பட்டப் படத்தினை அச்சிட்டு வாக்கு கேட்ட காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம்.
    ஆனால் அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள், விமானங்களால் தாக்கப்பட்டு, 3000ற்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டாவர்கள் அல்லவா. அக்காட்சியின் வீடியோ பதிவுகளைத் தாங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் இறந்த ஒரு மனிதரின் உடலையாவது, தொலைக் காட்சியிலோ, அல்லது செய்தித் தாட்களிலோ பார்த்திருக்கிறீர்களா.
    படம் எடுக்க ஒருவரும் அனுமதிக்கப்படவில்லை.
    அது அமெரிக்கா. மக்களின் உணர்வுகளைத் தூண்டி லாபம் பார்க்க விரும்பவில்லை. அங்கு அவ்வித கட்டுப்பாட உள்ளது.
    நமக்குத்தான் அனைத்தும் வணிகமயமாகிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. சட்டங்கள் கடுமையாகும் போது எல்லாம் நன்றாக அமைந்து விடும் ஐயா அமெரிக்கா போல. ஆனால் அங்கு பத்திரிக்கை சுதந்திரம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே! ஐயாவின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  3. ஒவ்வொரு வரியும் சாட்டையடி...ஒவ்வொன்றையும் ஆமோதிக்கிறேன் சகோ..பத்திரிகை படிப்பதையே விட்டுவிட்டேன்...அது சரியல்ல, இருந்தாலும் என்ன செய்வது..எதை நம்புவது என்றே தெரியவில்லை...
    ஊடகத்துறையில் மாற்றம் அவசியம் தேவை...
    நல்லதொரு பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக மாற்றம் ஊடகத்துறைக்கு தேவை. அதை அவர்களாக வந்து மாற்றம் தர மாட்டார்கள். நம்மைப் போன்றவர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்ட வேண்டும்.அன்பு சகோதரியின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  4. அப்படி நல்ல பத்திரிக்கைகள், நல்ல தொலைக்காட்சிக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கிறது? மக்களின் பார்வையும் ஒரு காரணமாகிவிடுகிறது... ஒவ்வொரு பொறுப்பான தனி மனிதனால்தான் ஊடகத்தை மட்டுமல்ல.... எல்லாவற்றையுமே சரி செய்ய முடியும்...

    சமூக சிந்தனை ஒட்டிய கட்டுரை எல்லாம் அபாரமா எழுத ஆரம்பிச்சிட்டிங்க... எழுத்து நன்றாக மெருகேறி வருகிறது.. வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. படிக்கும் வாசகர்களிடமும் மாற்றம் அவசியம் ஏற்பட வேண்டும். எழுத்து கூர்மையடைவதாக கூறி வாழ்த்திய எனது அன்பு சகோதரிக்கு நன்றி.

      Delete
  5. நல்ல சமூக சிந்தனையுடன் கூடிய ஆக்கங்களை தங்கள் தளத்தில் காண முடிவதில் மகிழ்ச்சி சகோ. தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் வருகை மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அன்பு சகோதரியின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  6. ஊடகங்கள்
    நாட்டுக்கு கேடு விதைப்பதை
    ஏற்கத்தான் வேண்டும்.
    ஊடகவியலாளர்
    நடுநிலைமை பேணி
    உண்மையின் பக்கம் சார்ந்து
    குமுகாய (சமூக) முன்னேற்ற நோக்கில்
    செய்தி வெளியிட முன்வரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நடுநிலைமை ஒன்று இருந்தாலே எல்லாம் நன்றாக இருந்து விடும் ஐயா. ஐயாவின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  7. எப்போதுமே எதிர்மறைச் செய்திகளுக்குத்தான் மவுசு அதிகம். ஆகவேதான் காசு ஒன்றையே குறியாக வைத்து செயல்படும் மீடியாக்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. நாம் சம்மந்தப்படாத பாசிட்டிவ் செய்திகள் நம்மை கவர்வதில்லை என்பதும் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. மிக சரியாக சொன்னீர்கள். அன்பு சகோதரரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  8. எப்பவுமே எதிர்மறை தான் செய்திகள் சகோ.

    இப்ப பாருங்க. கடல் மேல கப்பல் போனா செய்தி அல்ல. அதே கப்பல் கடலுக்குள் போனால் தான் செய்தி....உ: தா :- டைட்டானிக்.
    என்ன பண்றதுங்க... ஊதுற சங்கை ஊதிட்டீங்க. நல்ல பலன் எதிர்பார்க்கலாம்.தேவையான் கருத்துள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோதரர். உதாரணம் அருமை. அன்பு சகோதரரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  9. விற்பனையை மையம் வைத்து ஊடகங்கள் செயல்படுகின்றன! நல்ல அலசல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் வியாபாரம். அன்பு சகோதரரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  10. உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.
    ஒரு பிரபல வார இதழ் - முகப்பு - அட்டைப் படத்தில் - கீழ்த்தர கவர்ச்சிப் படங்களுடன் பிரசுரமாகின்றது.
    நடிகையைப் பெற்றவனுக்குக் கண்ணில்லை போலும்!..

    ReplyDelete
    Replies
    1. முகம் சுழிக்கும் முகப்பு அட்டைகள் வருத்தம் தான். நடிகையைப் பெற்றவனுக்கு காசு கண்ணை மறைத்து விட்டது போலும். அன்பு ஐயாவின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  11. உண்மை சகோ .பொய்யான செய்திகளே முக்கியத்துவம் பெறுகின்றன .அதுவும் இதழுக்கு இதழ் மாறுபட்டு .....சமூக அக்கறைக்காக துவங்கப்பட்ட சாதனங்கள் தற்போது வணிக நோக்கமே பிரதானமாக கருதுவதால் ...தான் இந்நிலை ...விபத்துகளில் கூட காப்பாற்றாமல் செய்தி சேகரித்து முதலில் ஒளிபரப்ப முனையும் செயல் .....வெட்க கேடு .....நன்றி சகோ .

    ReplyDelete
    Replies
    1. இதழுக்கு இதழ் மாறுபட்டு செய்தி பலரையும் குழப்புவது மட்டுமல்லாமல் உண்மைத்தன்மையை இழக்க வைக்கிறது. அன்பு சகோதரியின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  12. அடங்கோன்னியான்
    //தமிழில் நம்பர் 1 என்று சொல்லிக்கொள்ளும் பத்திரிக்கை ஒன்று அரசு பள்ளி நிகழ்ச்சிகளைச் செய்திகளாக வெளியிட வேண்டாம் என்று கொள்கை வைத்துள்ளதாம் //

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோ. வெளியிடுவதில்லை எனவும் அலுவலர் அளவிற்கு யாராவது கலந்து கொண்டால் மட்டும் வெளியிடுவார்களாம். நன்றி சகோ.

      Delete
  13. அருமையான பதிவு குறிப்பாக
    அமெரிக்க ஊடகத் துறை நெறிகள் ...
    ஆனால் அவர்கள் பின்பற்றுகிறார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி...

    ReplyDelete
    Replies
    1. நெறிகள் நன்றாக இருந்ததால் பகிர்ந்தேன். கடைபிடிக்கிறார்களா என்பது சந்தேகம் தான். நன்றி சகோ

      Delete
  14. அருமையான ஒரு பகிர்வு! பரபரப்பான் செய்தி வெளியிட்டு காசு பார்ப்பதில் தான் நம் ஊடகங்கள் முனைகின்றன! டிஆர் பி ரேட் வேறு இதில்!..தாங்கள்தான் தமிழில் நம்பர் ஒன் என்று சொல்லிக் கொள்ள விழையும், இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக....என்று பறை சாற்றும் ஊடகங்கள் இருக்கும் வரை...என்னத்த சொல்லறது. பதிவர் கரந்தை ஜெயகுமார் சொல்லி இருப்பது மிகவும் உண்மை!

    ReplyDelete
    Replies
    1. டி.ஆர்.பி ரேட்க்காக எதிர்மறை செய்திகளுக்காக அலைவதும் முன்னிலைப்படுத்துவதும் நன்றாக உள்ளதா ஐயா! என்பதே எனதும் கருத்தும். நன்றீங்க ஐயா..

      Delete
  15. Replies
    1. நன்றி சகோதரர். தொடர்க.

      Delete
  16. எல்லாமே வியாபாரம்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக எல்லாம் வியாபாரம் தான். அதிலும் கொஞ்சம் தர்மம் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா! நன்றி சகோதரர்..

      Delete
  17. அந்தப் பத்திரிகைதான் காலை 10 மணிக்கு சத்துணவு சாப்பிட்டதால் மாணவர்கள் மயக்கம் என்று செய்தி வெளியிட்டு அதிகாரிகளை கலவரப் படுத்திவிட்டது நேற்று . முதல் நாள் சாப்பிட்ட சத்துணவின் பாதிப்பு அடுத்த நாள்தான் தெரியுமா? ஒரு மாணவி வாந்தி எடுக்க ஆசிரியர்கள் பயந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து திரும்பினர். மற்ற மாணவர்களைக் கேட்க அவர்களும் வாந்தி உணர்வு ஏற்படுவதாக சொல்ல அனைவரயும் மருத்து மனைக்கு அழைத்து சென்றனர். பெரிதாக ஏதுமில்லை என்று திருப்பி அனுப்பி விட்டனர்.
    மக்களிடையே ஆசிரியர்கள் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் செயலை தொடர்ந்து செய்து வருகிறது. ஒரு சில மோசமான ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை மற்ற ஆசிரியர்களே அடையாளம் காணவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பாவமே! இப்படி எல்லாம் நடந்து கொள்ளும் ஊடகங்களை மக்கள் இனம் கண்டு ஒதுக்க வேண்டும். வருகைக்கு நன்றி ஐயா..

      Delete
  18. உண்மை காலில் செருப்பை மாட்டித் தெருவில் இறங்குவதற்குள் வதந்தி ஊரைச் சுற்றிவிட்டு வந்துவிடுமாம்.
    மருந்து மெதுவாகத்தான் சாரும். விடம் வேகவேகமாய்ச் சேரும்.
    “எப்பொருள் எத்தன்மைத்தாயினும்...” குறளன்றி வேறென்ன சொல்ல. நல்ல சிந்தனை, வாழ்த்துகள் பாண்டியன் by all means....

    ReplyDelete
    Replies
    1. பழமொழியோடு மிக அழகாக கருத்துக்கு வலு சேர்த்துள்ளீர்கள் ஐயா. வாழ்த்துக்கு எனது அன்பான நன்றிகள். தங்கள் அன்பு கண்டு மெய்சிலிர்க்கிறேன். நமது நட்பு என்றும் தொடர வேண்டும். மிக்க நன்றீங்க ஐயா..

      Delete
  19. இது போன்ற எதிர்மறை எண்ண அலைகள் நம் சமூகத்தையே சீரழிக்கிறது. மீடியாக்கள் உணர்ந்தபாடிலை. சரியான சிந்தனை சகோ! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மீடியாக்கள் உணருமா என்பது தெரியவில்லை. அவர்களின் கண்ணுக்கு பணம் ஒன்று மட்டுமே பிரதானம். வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி சகோதரி..

      Delete
  20. தங்கள் தள முகவரியை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com) தளத்தில் இணைத்து உதவுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தளம் என்பதால் இணைக்க முயற்சித்தேன். எல்லாம் சரியாக இருந்தும் பிழை என்றே வருகிறது ஐயா. பார்ப்போம்.

      Delete