அரும்புகள் மலரட்டும்: சினிமா விமர்சனம் அல்ல- சினிமா சார்ந்த விமர்சனம்

Monday 20 January 2014

சினிமா விமர்சனம் அல்ல- சினிமா சார்ந்த விமர்சனம்


நண்பர்களுக்கு வணக்கம்.சினிமா விமர்சனம் அல்ல- சினிமா சார்ந்த விமர்சனம் கட்டுரை வடிவில் தந்துள்ளேன். சினிமாவால் எவ்வளவோ நன்மைகள் ஏற்பட்டிருக்கலாம் மறுக்கவில்லை. ஆனால் சமீபத்திய பாதிப்புகளால் இந்த கருத்துகளைக் கூறுகிறேன். தவறுகளோ, மாற்றுக்கருத்து இருப்பின் தாராளமாய் பின்னூட்டத்தில் தாருங்கள்.

முன்னுரை
இன்றைய சினிமா உலகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது. மக்களுக்கு என்ன விடயத்தைக் கற்று கொடுக்கிறது என்பது தான் மிகப்பெரிய வேதனையாக உள்ளது.
நல்ல படங்கள் அவ்வப்போது வந்தாலும் பெரும்பான்மை குடும்பத்துடன் சென்று பார்க்க முடியாத ஆபாச இரட்டை வசனங்கள், வன்முறை காட்சிகள், மது மற்றும் புகை பிடிக்கும் காட்சிகள் நிறைந்த படங்களே அதிகம் வருகிறது.

கதாநாயகர்களுக்கு
ரசிகன் ஒருவன் நம்பி தமது வேர்வையால் உழைத்த காசில் டிக்கெட் எடுத்து திரையரங்குக்கு செல்கிறான். முடிவில் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. நல்ல படங்களைத் தந்த கதாநாயகர்களே ரசிகர்களின் நாடி பிடித்து நடிப்பதில் தற்போது தவறி வருவதைக் காண முடிகிறது.

பொழுதுபோக்கு அம்சங்கள் ஒரு திரைப்படத்தில் இல்லாமல் போனாலும் பரவாயில்லை, கதையே இல்லாமல் பல படங்கள் இன்றைக்கு வருகிறது. தனது ரசிகர்களுக்கு என்ன கற்பிக்க இந்த படத்தில் நடக்கிறோம் என்பதை எந்த கதாநாயகர்களும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
சற்றும் தயங்காமல் வன்முறை, டூயட் என்ற பெயரில் நடிகைகளுடன் நெருக்கம் என்பதெல்லாம் தேவை தானா கதாநாயகர்களே!

ஒரு சில கதாநாயகர்கள் தவிர ,மற்றவர்கள் தனது ரசிகர்களைக் கட்டுப்படுத்த தவறி விடுகின்றனர். தனது நிலை தெரியாமல் தனக்கு என்னமோ உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பதாக எண்ணிக்கொண்டு கற்பனையில் மிதக்கும் பவர்ஸ்டார் போன்ற நடிகர்களை என்னவென்று சொல்வது!

பொங்கலுக்கு வெளிவந்த இரண்டு படங்களையும் பார்த்து விட்டேன். இரு படங்களைப் பற்றி பேச வேண்டியதில்லை. ரசிகர்கள் பற்றி தான் பேச வேண்டும் தனது கதாநாயகர், கதாநாயகி திரையில் தோன்றினால் நாற்காலியின் மேல் ஏறிக்கொண்டு போதையில் ஒரே சப்தம். புகைப் பிடிப்பதால் வரும் நாற்றம் இவைகளுக்கிடையே படம் பார்த்து நல்ல படியாக வெளியில் வந்தாலே சாதனை தான். இளைஞர்களின் சக்திகள் இப்படி வீணாவது சரிதானா! அவற்றை நல்வழியில் பயன்படுத்தும் பொறுப்பு இருப்பதைக் கதாநாயகர்கள்  உணரவில்லையா!

கதாநாயகிகளுக்கு
கதாநாயகிகள் தாராளமயமாதல் என்பதைத் தவறாக புரிந்து கொண்டார்கள் போல. இரண்டு அல்லது மூன்று வயது குழந்தைக்கு அணியக்கூடிய ஆடையைத் தான் உடுத்தி வருகிறார்கள். மூன்று வயது பெண் குழந்தைக்கு அந்த ஆடையை உடுத்தி விட்டாலே பெண் குழந்தைக்கு இந்த ஆடை தேவை தானா என கிராங்களிலுள்ள பாட்டிகள் கோபித்து கொள்வார்கள். அது போன்ற ஆடைகளை உடுத்தும் நிர்பந்தம் நடிகைகளுக்கு ஏற்பட்டு விட்டதோ! போட்டியின் காரணமாகவும் பட வாய்ப்புகள் கைநழுவிப் போக கூடாது என்பதற்காகவும் துணிச்சலாக கவர்ச்சியாக நடிக்க ஒத்துக்கொள்கிறார்கள் என்பதே உண்மையாக இருக்கலாம். இருப்பினும் இந்நிலை மாற வேண்டும் ஒட்டுமொத்த நடிகைகளின் மனநிலை மாற்றம் வேண்டும்.

ரசிகர்களுக்கு
\அதற்கு முன்பு ரசிகர்களின் மனநிலையில் மிகப் பெரிய மாற்றம் வேண்டும் திரைப்படங்களை பொழுதுபோக்கு அம்சமாக பார்க்க வேண்டும். தனது தலைவனுக்காக மற்ற நடிகர்களைத் தரக்குறைவாக சித்தரித்து பதாகைகள் வைப்பது, நடிகைகளை வெறும் கவர்ச்சிப்  பொருளாக மட்டும் பார்ப்பது போன்ற அம்சங்கள் களையப்பட வேண்டும். நல்ல படங்களை மட்டுமே பார்ப்போம் எனும் உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும் ஏனெனில் எவ்வளவோ நல்ல படங்களை எடுத்தவர்கள் நட்டமடையும் நிலையை உருவாக்கியவர்களும் நாம் தான்.

இயக்குநர்களுக்கு
சமுதாயத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் எதிர்மறை நிகழ்வுகளை மட்டுமே கதைக்கு மையமாக வைத்து படம் எடுப்பது சரியானதா! அதை அப்படியே பின்பற்றும் ரசிகர்களால் தவறான நிகழ்வு ஏற்பட்டு கேள்வி எழும் போது சமுதாயத்தில் நடக்கும் விடயங்களைத் தான் படமாக எடுக்கிறோம் எனும் ஒற்றை வரி பதிலில் விலகிக்கொள்வது நியாயம் தானா!’
கதை ஒரு கிராமத்தில் நடக்கும் போது பாடல் காட்சிக்கு மட்டும் வெளிநாடுகளுக்கு செல்வதன் நோக்கம் என்ன என்பதற்கு பல காரணம் நீங்கள் கூறினாலும் படிப்பவர்கள் உண்மை நிலையை உணர்வார்கள்.

முடிவுரை
ஒரு காலத்தில் கதாநாயகர்களைப் பார்த்து வளர்ந்த தமிழ்ச் சமுதாயம் அதே கதாநாயகர்களைப் பார்த்து தேய்ந்து வருவதைக் கவனிக்க வேண்டும். இல்லையேல் எதிர்கால சமுதாயம் தவறான படிப்பினையைத் திரைப்படங்கள் மூலம் கற்று சீரழிவை நோக்கி பயணிப்பதைத் தடுக்க முடியாது.


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

22 comments:

  1. சரியான சிந்தனை சகோ
    அந்த நடிகருக்கோ ,இயக்குனருக்கோ சிந்திக்கும் ரசிகர் தேவையே இல்லை .அரசாங்கம் டாஸ்மாக் நடத்துவதை போல யார் எக்கேடு கெட்டால் என்ன?துள்ளுவதோ இளமை படம் வந்த காலத்தில் நம் மில் பள்ளியிலேயே அதன் பாதிப்பை கண்கூடாக கண்டிருக்கிறேன்.வேறென்ன சொல்ல ?

    ReplyDelete
  2. இன்றைய திரைப்படத் துறையினரின் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான்.
    பணம்
    பணம்
    பணம்
    அதுமட்டுமே.

    ReplyDelete
  3. சினிமா விமர்சனம் என்ற பெயரில் பல பேர் சினிமா பட்ங்களைப் பற்றி எழுதிவருகிறார்கள் ஆனால் நீங்கள் முற்றிலும் மாறுபட்டு மிக சிறப்பான விமர்சனைத்தை பகிரிந்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் உங்களிடம் மாறுபட்ட அதே நேரத்தில் நல்ல சிந்தனைகள் இருக்கிறது...இந்த கால இளைஞர்களிடம் இப்படி மாறுபட்ட சிந்தனை இருப்பது மிக அதிசியமே அது உங்களிடம் இருக்கிறது என்பது மிக பெருமையாக இருக்கிறது....இப்படி பட்ட சிந்தனை உள்ள நீங்கள் வெற்றி பாதையில்தான் செல்லுவிர்கள். வெற்றிகள் உங்கள் பக்கமே வாழ்த்துக்கள் tha.ma 3

    ReplyDelete
    Replies
    1. "இளைஞர்களிடம் இப்படி மாறுபட்ட சிந்தனை இருப்பது மிக அதிசியமே அது உங்களிடம் இருக்கிறது என்பது மிக பெருமையாக இருக்கிறது" - அய்யா இதை நான் வழிமொழிகிறேன். (நீங்க மட்டும் முன்னுரை, பொருள், முடிவுரை போட்டு எழுதினா நாங்க இத வழிமொழிவோம்ல?) அருமை பாண்டியன்... இதுபோல இந்த சமூகத்தின் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக அலசி துவைத்துக் காயப்போடுங்கள்..(உங்களை) கட்டிக்கொள்ள நாங்க இருக்கோம்

      Delete
  4. வணக்கம்
    சகோதரன்.

    மிக சிறப்பான கருத்தாடல்... இப்போது வருகிற படங்களை நீங்கள் சொல்வது போல குடும்பத்துடன் இருந்து பார்க்க முடியாத நிலைதான் ஏன் என்றால்
    துண்டக்கானம் துணியக் கானம்.... இதற்கு மேல் என்னதான் சகோதரன் சொல்வது...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. தங்களின் இந்த விமர்சனம் ஒரு மாறுபட்ட சினிமா விமர்சனமாக இருக்கிறது. முதலில் அதற்கு வாழ்த்துக்கள்.
    "//\அதற்கு முன்பு ரசிகர்களின் மனநிலையில் மிகப் பெரிய மாற்றம் வேண்டும் //" - உண்மை தான் . முதலில் ரசிகர்கள் மாறினாலே, நல்ல சினிமா வர ஆரம்பித்துவிடும்.
    இப்போதும் அத்திப்பூத்த மாதிரி ஓரிரண்டு நல்ல திரைப்படங்கள் வெளிவருகிறது. ஆனால் அவை வெற்றி பெருவதில்லை. அது தான் பிரச்சனையே .

    ReplyDelete
  6. மிக மிக அருமை நண்பரே... பெரும்பாலானவர்களின் மனக் குமுறலை வெளியிட்டிருக்கிறீர்கள்... தவறு எங்கே என்றால்... ரசிகர்களிடமும் அதைவிட "ரசிப்புத் தன்மை" யிலுமே... என்பது எனது கருத்து...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
  7. ரசிகன் திருந்தினாலே எல்லாம் சரியாப் போகும் !
    த .ம.5

    ReplyDelete
  8. சினிமாவை இரண்டு விதங்களாக பார்க்கிறார்கள். சிலர் அதை வெறும் Mass Media வாக ஒரு பொழுதுபோக்கு சாதனமாக பார்க்கிறார்கள். உங்களையும் என்னையும் போன்ற வெகு சிலரே அதை ஒரு கலையாகவோ அல்லது சமுதாயத்தை சீர்படுத்தக் கூடிய சாதனமாகவோ பார்க்கிறார்கள். முதல் தரப்பினரை குறிவைத்துத்தான் இன்று பல இந்திய திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆகவே நமக்கு எது தேவை என்று கருதுகிறோமோ அது எந்த மொழிப் படத்தில் இருந்தாலும் அதை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு இந்திய திரைப்பட உலகம் இப்படித்தான் இருக்கும். இதை மாற்றும் எண்ணம் பாமர ரசிகனுக்கும் இல்லை தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கும் இல்லை.

    ReplyDelete
  9. அனைவரும் படிக்க வேண்டிய செய்தி! தங்கள் கருத்தை முழுவதும் ஏற்றுக் கொள்கிறேன்!

    ReplyDelete
  10. உங்களின் இந்த சிந்தனை மாறுபட்ட, அதே சமயம் சரியான சிந்தனை சகோ . இப்போ நடிகர்கள், இயக்குனர்களை வைத்து படம் பார்க்க முடிவதில்லை. பணமும்,நேரமும் வீணாகிவிடுகிறது. ஆனாலும் இப்போட்டிசினிமாவில் சில புதிதாக வரும் இயக்குனர்கள், நடிகர்கள் இயக்கி, நடிக்கும் படங்களும் வெளிவருகின்றன.அப்படங்கள் நன்றாகவே இருக்கின்றன. ரசிக்கும் ரசனையில் மாற்றம் வந்தால் மட்டுமே இவைகள் மாறும்.

    ReplyDelete
  11. நல்ல அருமையான கட்டுரை பாண்டியன். வாழ்த்துகள். இதுபோல நம் சமூகத்தைப் பாதிக்கும் அனைத்து விடயங்களையும் எழுதுங்கள்... சினிமா பார்ககவும், குமுதம் விகடன் போலும் பத்திரிகைகளைப் படிக்கவும் கூட நாம்தான் நம் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டியுள்ளது... பாடத்திட்டத்தில் ஊடகம் எனும் என் கட்டுரையைப் பார்க்க வேண்டுகிறேன். இந்தக் கட்டுரை உங்களுக்காக என் மறுபதிவு.

    ReplyDelete
  12. மிகவும் அருமையாக எழுதப்பட்ட விமர்சன கட்டுரை! மக்களை வழிநடத்த வேண்டிய ஓர் ஊடகம் கெட்டுப்போயிருப்பதை இதை விட நாசூக்காக சொல்ல முடியாது! அருமையாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  13. அப்படிச் சொல்லுங்க...!

    இன்னும் பல மறைமுக தாக்குதல்கள் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்...!

    சினிமா என்பது சினிமா போல என்றான் கண்ணதாசன்
    அதன் ஆழ்ந்த கருத்தை அறியாத ரசிகர்கள் !

    ReplyDelete
  15. பாண்டியா அசத்திட்டீங்க அருமையாக விடயங்களை எடுத்து சொன்னீர்கள். பாட்டி இது தேவையா என்று கேட்பது எவ்வளவு நல்ல விடயம்.ஆனால் இப்போதெல்லாம் எங்கே கேட்கிறார்கள். பாட்டியை பத்தாம்பசலி என்றல்லவா சொல்கிறார்கள். ம்..ம் தொடரட்டும் சகோதரா!
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  16. யாவும் நல்ல கருத்துக்கள்வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete

  17. அருமையான முடிவுரையை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  18. நல்லதொரு சிந்தனைப் பதிவு! நல்ல கருத்துக்களை முன் மொழிந்த்துள்ளீர்கள்! தற்போது சினிமாக்கள் சிந்திக்க வைப்பவை அல்ல! இளைஞர்களைக் குறிவைத்து வரும் பணம் ஈட்டும் வியாபாரங்களே!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6-part-2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete